தொழிலாளர் திருநாள்
பாட்டாளி வென்ற
புகழ் நாளைத் - தமிழ்ப்
பாட்டாளி பாடுகிறேன்!
வேர்வை
சருக்கரையாய்
இனித்த நாள்!
ஆலைகள்
- பூஞ்
சோலைகள்
சூடிய நாள்!
உழைப்போர் ஒற்றுமை
வென்ற நாள்! - மே
என்ற நாள்!
செங்கொடி - தந்த
பூங்கொடி!
சிவந்த கைகள்
செதுக்கிய நாள்!
வாடிய தோழர் - நலம்
நாடிய நாள்!
உழைப்பின் பெருநாள் - முழு
உலகின் திருநாள்!
செம்மைப் புரட்சி
தந்த மகிழ்ச்சி!
ஆளும் வருக்கும்
அடங்கிய நாள்
அடிமை வருக்கம்
பெருமை
அடைந்த நாள்!
சங்கொலி
தந்த வலி
தீர்ந்த நாள்! - உரிமை
சேர்ந்த நாள்!
தொழிலாளர் போராட்டம்!
கண்ட தேரோட்டம்!
எட்டுமணி
நேரம்!
இறங்கியது
வேலை பாரம்!
தொடர்ந்த தீமை!
படர்ந்த கொடுமை!
முடிந்த நாள் - வாழ்வு
விடிந்த நாள்!
இழைகளின் இணைப்பு
கட்டும் துணியாகும்!
உழைப்போர் இணைப்பு
முட்டும் பிணிபோக்கும்!
ஓடும் தரியென
உழைத்தார்! - துயர்
கூடும் நிலையினை
எதிர்த்தார்!
பாடும் அடியெனப்
புகழ்
படைத்தார்!
மே..நாள்
மேதினியின்
மேல்...நாள்!
வாழ்த்துகிறேன்
- தலை
தாழ்த்துகிறேன்!
பாட்டரசர் கி. பாரததிதாசன்
01.05.2021
Aucun commentaire:
Enregistrer un commentaire