mercredi 16 septembre 2020

கண்ணன்... மணிவண்ணன்...

 


கண்ணன்... மணிவண்ணன்...
  
எனையாளும் வில்லழகன் - தொன்மை
இசையாளும் சொல்லழகன்!
மனையாளும் நல்லழகன் - முன்னை
மறையாளும் மல்லழகன்!
      கண்ணன்... மணிவண்ணன்...
  
திருமலையில் வாழ்ந்திடுவான் - தண்மை
தருமலையில் ஆழ்ந்திடுவான்!
அருங்கலையில் சூழ்ந்திடுவான் - உண்மைப்
பெருநிலையில் சேர்ந்திடுவான்!
      கண்ணன்... மணிவண்ணன்...
  
புள்ளமர்ந்து வந்திடுவான் - ஞானப்

பொன்னளந்து தந்திடுவான்!
உள்ளமர்ந்து மின்னிடுவான் - வான
உறவளந்து பின்னிடுவான்!
      கண்ணன்... மணிவண்ணன்...
  
பண்ணளந்து மீட்டிடுவான் - இந்தப்
பாரளந்து காட்டிடுவான்!
பண்பளந்து ஊட்டிடுவான் - வந்த
பகையளந்து ஓட்டிடுவான்!
      கண்ணன்... மணிவண்ணன்...
  
வீடருளும் ஓரரசன் - தங்கும்
பீடருளும் பேரரசன்!
ஏடருளும் சீரரசன் - பொங்கும்
இனிப்பருளும் தேரரசன்!
      கண்ணன்... மணிவண்ணன்...
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
14.09.2020


Aucun commentaire:

Enregistrer un commentaire