எழுசீர் விருத்தம் - 7
நெடிலீற்று மா + நேரசையில் தொடங்கும் சீர் + மற்றச் சீர்கள் வெண்டளையில் அமையும்.
தேனே, கரும்பே இவ்விரு சொற்களும் நெடிலெழுத்தை ஈற்றாக உடைய மாச்சீர்கள். இவை நெடிலீற்று மா எனப்படும். [மின்னேர் என்ற சொல்லில் ஈற்றில் வரும் நெடிலொற்றும் நெடிலீற்று மாவாகக் கொள்ளவேண்டும்]
தன்னே ராயிரம் பிள்ளைக ளோடு
தளர்நடை யிட்டு வருவான்,
பொன்னேய் நெய்யொடு பாலமு துண்டொரு
புள்ளுவன் பொய்யே தவழும்
மின்னேர் நுண்ணிடை வஞ்ச மகள்கொங்கை
துஞ்சவாய் வைத்த பிரானே!
அன்னே! உன்னை யறிந்துகொண் டேன்உனக்
கஞ்சுவன் அம்மம் தரவே!
[பெரியாழ்வார் திருமொழி மூன்றாம் பத்து -1]
இவ்விருத்தம் நேரசையில் தொடங்கினால் 19 எழுத்துக்களைப் பெறும். நிரையசையில் தொடங்கினால் 20 எழுத்துக்களைப் பெறும்.
முதல் சீர் நெடிலீற்று மா வரவேண்டும். இரண்டாம் சீர் நேரசையில் தொடங்க வேண்டும் [நேரொன்றிய ஆசிரியத்தளை அங்கு அமைய வேண்டும்] அதை அடுத்து ஏழாம் சீர்வரை வெண்டளை பயின்று வரவேண்டும் [கூவிளங்காய், கருவிளங்காய் ஆகிய இருசீர்கள் இவ்விருத்தத்தில் வருவதில்லை] ஏழாம் சீர் மாச்சீராக அமையும்.
மெல்லத் தெரிந்துசொல் [பாரதியின் புதிய ஆத்திசூடி]
நன்றே சொல்க! நயமுறும் வண்ணம்
நலமுறும் வண்ணம் தெளிந்து!
இன்றே சொல்க! இனமொழி ஓங்கும்
எழில்வகை பற்றுடன் ஆய்ந்து!
வென்றே சொல்க! வியன்றமிழ் மேன்மையை
மேதினி கேட்க மகிழ்ந்து!
சென்றே சொல்க! செழும்புகழ் மேடையில்
சீர்களை மெல்ல அளந்து!
[பாட்டரரசர் கி. பாரதிதாசன்]
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை எழுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
ஆய்வுரை
இவ்விருத்தம் அடியின் முதலிரு சீர்கள் நேரொன்றிய ஆசிரியத்தளையைப் பெற்றாலும், நெடிலை ஈற்றாக உடைய முதல்சீர் அளபெடுத்துக் காய்ச்சீராக ஒலிக்கும். முதல்சீர் அளபெடுப்பதால் அடி முழுமையும் வெண்டளை அமையும்.
நன்றேஎ சொல்க! நயமுறும் வண்ணம்
நலமுறும் வண்ணம் தெளிந்து!
இன்றேஎ சொல்க! இனமொழி ஓங்கும்
எழில்வகை பற்றுடன் ஆய்ந்து!
வென்றேஎ சொல்க! வியன்றமிழ் மேன்மையை
மேதினி கேட்க மகிழ்ந்து!
சென்றேஎ சொல்க! செழும்புகழ் மேடையில்
சீர்களை மெல்ல அளந்து!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
13.08.2020
Aucun commentaire:
Enregistrer un commentaire