samedi 24 novembre 2018

ஒளியே போற்றி!


ஒளியே போற்றி!
  
1.
அண்ணா மலையின் பேரொளியை
   அகத்துள் ஒளிரத் தொழுதிடுவோம்!
எண்ணா திருந்த சிறப்பெல்லாம்
   ஏற்கும் வாழ்வைச் சமைத்திடுவோம்!
உண்ணா திருந்தே ஒருவேளை
   உள்ளம் ஒன்றித் தவம்புரிவோம்!
பெண்ணா? ஆணா? உருப்பெற்றோன்
   பெருமை யாவும் அளிப்பானே!
  
2.
அருணா சலத்தின் அழகொளியில்
   ஆழ்ந்து நெஞ்சம் நெகிழ்ந்திடுவோம்!
இரு..நா அரவ அணியானை
   எண்ணி யெண்ணி மகிழ்ந்திடுவோம்!
திரு..நா மலர்ந்து தமிழ்பாடித்
   தேனை யள்ளி அருந்திடுவோம்!
குரு..நா நல்கும் மொழிகேட்டு,
   கொள்கை விளக்கை ஏந்திடுவோம்!
  
3.
அன்பே இறைவன் இருப்பிடமாம்!
   ஆசை யதனின் எதிர்நிலையாம்!
இன்பே யென்று தமிழ்பாடி
   ஏத்தி யிசைத்தல் பெருவாழ்வாம்!
துன்பே கூட்டும் விதியவனைத்
   துாள்துாள் ஆக்கும் இறையொளியாம்!
இன்றே உணர்ந்து மனவீட்டில்
   எழிலாம் விளக்கை ஏற்றுகவே!
  
4.
உண்மை மணக்கும் சித்தரிடம்
   ஓங்கும் ஒளியைப் பெற்றிடலாம்!
பெண்மை மணக்கும் கற்பினிலே
   பேணும் ஒளியைக் கற்றிடலாம்!
வெண்மை மணக்கும் மனத்துக்குள்
   வெல்லும் ஒளியை உற்றிடலாம்!
தண்மை மணக்கும் புவி..காணத்
   தமிழாம் ஒளியை ஏற்றுகவே!
  
5.
சொல்லும் செயலும் ஒன்றானால்
   சுடரும் புகழைச் சூடிடலாம்!
செல்லும் இடத்தில் சிறப்பெய்திச்
   செம்மை வாழ்வை நாடிடலாம்!
அல்லும் பகலும் அருளொளியை
   அகத்துள் ஏற்றித் தொழுதிட்டால்
வெல்லும் ஞான விழிதிறக்கும்!
   விண்ணார் உலகின் வழிதிறக்கும்!
  
6.
உரிமை ஒளியே உலகமெலாம்
   ஓங்கிப் பரவ உழைத்திடுவோம்!
பெருமை ஒளியே செயற்பாட்டில்
   பெருகிப் பரவத் திறம்பெறுவோம்!
அருமை ஒளியே தமிழாகும்!
   அறத்தின் ஒளியே குறளாகும்!
ஒருமை ஒளியே உளமேவ
   ஒளிரும் பொன்போல் நம்முடலே!
  
7.
கண்ணைக் கவரும் கலையொளியே!
   கருத்தைக் கவரும் கவியொளியே!
மண்ணைக் கவரும் மதியொளியே!
   மனத்தைக் கவரும் மாதொளியே!
பெண்ணைக் கவரும் அணியொளியே!
   பிறப்பைக் கவரும் அருளொளியே!
விண்ணைக் கவரும் தமிழொளியே!
   வேண்டு! வேண்டு! மெய்யொளியே!
  
8.
வடலுார் நல்கும் திருவொளியால்
   வளமாய் வளரும் நன்மனிதம்!
உடலுார் உணர்வில் உறுமொளியால்
   உயரும் வாழ்க்கை யெனும்பாதை!
மடலுார் காலைக் கதிரொளியால்
   மலர்ந்து மணக்கும் குளிர்சோலை!
வடமூர் தேரின் அழகொளியால்
   மயங்கி மகிழும் மெய்யுள்ளம்!
  
9.
உலகின் முதலே ஒளியாகும்!
   உயிரின் தன்மை ஒளியாகும்!
நிலவின் வருகை இராப்பொழுதை
   இனிக்கச் செய்யும் ஒளியாகும்!
குலவும் தமிழும் ஒளியாகும்!
   கூத்தன் உருவும் ஒளியாகும்!
நிலமும் செழிக்க எழுகதிரோன்
   நிகரே இல்லா ஒளியாகும்!
  
10.
ஒளியே போற்றி! ஓமென்னும்
   ஒலியே போற்றி! அருளிதயத்
தெளிவே போற்றி! தித்திக்கும்
   தேனே போற்றி! வான்கொண்ட
வெளியே போற்றி! இவ்வுலகின்
   விளைவே போற்றி! வாழ்விக்கும்
வளியே போற்றி! வண்டமிழின்
   வளமே போற்றி! சீர்..போற்றி!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

1 commentaire: