விருத்த மேடை -
4
அறுசீர்
விருத்தம் - 4
[குறிலீற்றுமா
+ கூவிளம் + விளம் + விளம் + விளம் + மாங்காய்]
தமிழ்க்கல்வி!
செல்லும்
ஊரெலாம் சிறப்புறச்
சீரினைத் தந்திடும் செழுங்கல்வி!
வெல்லும்
ஆற்றலை மேவியே
வியன்மதி மின்னிடும் விண்ணாக!
சொல்லும்
தேனினைச் சுரந்திடும்!
சுடருளம் சூட்டிடும்! என்தோழி!
இல்லும்
ஓங்கிட நற்புகழ்
எய்திடத் தாய்மொழி ஏற்பாயே!
இப்பாடல் " குறிலீற்றுமா + கூவிளம் + விளம் + விளம் + விளம் + மாங்காய்"
என்ற சீரமைப்பை ஓரடியாகக் கொண்டது. இவ்வமைப்பிலேயே நான்கடிகள் அமைந்திருக்க வேண்டும்.
நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும். ஒன்று, ஆறாம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.
மாச்சீரின்
இறுதியில் குறில் எழுத்தைப் பெற்று வருவதும் [பேசு] , குறில் ஒற்றைப் பெற்று வருவதும்
[பேசும்] குறிலீற்றுமா ஆகும்.
இப்பாடலில்,
விளம் வரும் இடங்களில் மாங்காய்ச்சீர் அருகி வருவதுண்டு.
இலக்கணம் நுாற்பா
குறிய வீற்றுமாக் கூவிளம் முவ்விளம்
காயொடுங் குறிகொள்ளே
- விருத்தப் பாவியல் [4]
இலக்கணம் நுாற்பா
குறிய வீற்றுமாக் கூவிளம் முவ்விளம்
காயொடுங் குறிகொள்ளே
- விருத்தப் பாவியல் [4]
கல்வியின் சிறப்பை
உணர்த்தும் வண்ணம் இவ்வகை அறுசீர் விருத்தம் ஒன்றைப் பாடுமாறு
பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்பாவைப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
113.03.2017
Aucun commentaire:
Enregistrer un commentaire