பெண்ணின் பெருந்தக்க யாவுள?
குறள் வெண்பா!
பெண்ணின் பெருமையைப் பேணும் உலகினில்
மண்ணும் மணக்கும் மலர்ந்து!
நேரிசைச் சிந்தியல் வெண்பா
பெண்ணின் அழகால் பெருகிவரும் பாட்டாறு!
கண்ணுள் புகுந்து களிப்பூட்டும்! - தண்மலரின்
வண்ணம் மணக்கும் மலர்ந்து!
இன்னிசைச் சிந்தியல் வெண்பா
பெண்ணின் விடுதலையைப் பேணாத் திருநாட்டில்
நண்ணும் இருளே! நரிகள் அரசாண்டால்
மன்னும் மடமை மலர்ந்து?
நேரிசை வெண்பா
பெண்ணின் சிறப்பால் பெருகும் வளம்ஏற்போம்!
பண்ணின் இனிய பயனேற்போம்! - விண்ணருளின்
ஆட்சி மணக்கும் அழகேற்போம்! அந்தமிழின்
மாட்சி மணக்கும் மலர்ந்து!
இன்னிசை வெண்பா
பெண்ணின் தவமுணர்ந்து பேசும் நிலத்தினிலே
எண்ணிலா ஏற்ற எழில்மேவும்! நல்லியற்கைத்
தண்மை தழைக்கும்! தமிழ்அருள் வள்ளலென
வண்மை தழைக்கும் மலர்ந்து!
பஃறொடை வெண்பா
பெண்ணின் வடிவமாய்ப் பேசும் மொழிகொண்டோம்!
மண்ணின் வடிவமாய் மாண்பளித்தோம்! - தண்ணதிக்கும்
அன்னை பெயர்படைத்தோம்! அன்பு வயலென்றோம்!
பொன்னை நிகர்த்த பொலிவென்றோம்! - உன்னை
அளித்த அருமறையே அம்மா! இதனை
உளத்துள் பதித்தால் உயர்வோம்! - வளமெய்தக்
கண்ணின் மணியாய்க் கவிக்கருத்தைக் காத்திடுவோம்!
உண்மை உணர்ந்தே உலகம் உருண்டால்
நலங்கள் மணக்கும்! நறுஞ்சோலை போன்றே
வளங்கள் மணக்கும் மலர்ந்து!
இலக்கண விளக்கம்
வெண்பா கொத்தெனும் இப்பாட்டில் குறள் வெண்பா, நேரிசைச் சிந்தியல்
வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா
இடம்பெறவேண்டும்.
அனைத்து வெண்பாக்களிலும் முதல் சீர் ஒன்றாக வரவேண்டும். ஈற்றுச்சீரும் ஒன்றாக வரவேண்டும்.
மேல் உள்ள வெண்பாக்கள் 'பெண்ணின்', என்ற சீரை முதல் சீராகக் கொண்டுள்ளன.
'மலர்ந்து' என்ற சீரை ஈற்றுச் சீராகக் கொண்டுள்ளன.
09.08.2015