சொல்லோவியம்
41.
பூக்கட்டும் அழகாகப்
பாக்கட்டும் பாவரசே!
நாக்கொட்டும் தேன்மழையில்
நலங்கொட்டும் நாவரசே!
42.
மண்வாசம் மணக்கின்ற
பெண்வாசம் இக்கவிகள்!
தண்வாசத் தமிழேந்தத்
தாவிவரும் உம்செவிகள்!
43.
தைப்பிறந்த மகிழ்ச்சியிலே
தாளமிடும் எண்ணங்கள்!
மைப்படர்ந்த கண்ணுக்குள்
மாமா..உன் வண்ணங்கள்!
44.
அண்ணாந்து பார்த்தபடி
அலையுதடா என்மனது!
என்னென்று நான்சொல்ல?
இனிக்குதடா என்வயது!
45.
மாடுமேய்க்கும் நேரத்தில்
மனம்மேய்க்கும் கண்ணாளா!
சூடு..வைத்த துயராகத்
துவளுகிறேன் நெடுநாளா!
46.
ஆமணக்குத் தழையெல்லாம்
வா..மணக்கும் நமைப்பார்த்து!
கா..மணக்கும்! கனி..மணக்கும்!
நா..மணக்கும் நலஞ்சேர்த்து!
47.
கொடுக்காய்ப்புளி பழம்பறிக்கும்
கொல்லையிலே கொஞ்சினியே!
தடுத்தாலும் கேட்காமல்
தந்திரமாய் மிஞ்சினியே!
48.
நள்ளிரவுக் காலத்தில்
நரிபோல நடிப்பவனே!
வெல்லுறவு கதைபேசி
வேண்டியதை முடிப்பவனே!
49.
ஓரக்கண் காட்டியெனை
உசுப்புகிற கண்ணழகா!
ஆரவணைத்து எனைத்தழுவி
அசத்துகிற தோளழகா!
50.
வைகறையில் தான்வந்து
கைவரிசை காட்டியவா!
மை..கரைய மனங்..கரைய
மயக்கத்தை ஊட்டியவா!
(தொடரும்)
ஆகா... ரசிக்க வைக்கும் வரிகள் ஐயா...
RépondreSupprimerவாழ்த்துக்கள்...
Supprimerவணக்கம்!
சுவைக்கும் அடிகள்! சுடா்தமிழ் வீட்டின்
அவைதாம் படிகள் அறி!
சொல்லோவியம் சுவையோவியம்...
RépondreSupprimerஅருமை ஐயா.
Supprimerவணக்கம்!
சொல்லோ வியம்!நற் சுவையோ வியம்! நெஞ்சை
வெல்லோ வியம்!வான் விருந்து!
வணக்கம் !
RépondreSupprimerஅருமையான சொல்லோவியம் கண்டு
அகம் குளிர்ந்து நின்றேன் ஐயா !!
வாழ்த்துக்கள் மென்மேலும் வண்ணம் குறையாமல்
வளர்க நின் கவிதையெல்லாம் .
Supprimerவணக்கம்!
வண்ணத் தமிழெடுத்து வாயார வாழ்த்துரைத்தீா்!
எண்ணம் பறக்கும் இனித்து
47.
RépondreSupprimerகொடுக்காய்ப்புளி பழம்பறிக்கும்
கொல்லையிலே கொஞ்சினியே!
தடுத்தாலும் கேட்காமல்
தந்திரமாய் மிஞ்சினியே!
49.
ஓரக்கண் காட்டியெனை
உசுப்புகிற கண்ணழகா!
ஆரவணைத்து எனைத்தழுவி
அசத்துகிற தோளழகா!
இது இரண்டிலும் சீர் அதிகமாகி விட்டதோ....?
Supprimerவணக்கம்
சீரெண்ணிப் பாப்படித்தீா்! சிந்தை செழிப்புற்று
பேரெண்ணி ஓங்கும் பிணைந்து!
புணா்ந்து படித்தால் பொலிந்தொளிரும் சீா்கள்
உணா்ந்து படித்தால் உயா்வு!
ஆரவணைத் தெனைத்தழுவி எனப்புணா்ந்து படிக்கவும்
கொடுக்காய்ப்பு ளி..பறிக்கும் என்றே எழுதினினேன்
வகையுளி சிறப்பன்று
எனவே
கொடுக்காய்ப்புளி பழம்பறிக்கும் என்று எழுதியுள்ளேன்
கொடுக்காய்ப்புளி என்ற சொல் வரவேண்டும் என்று நான் விரும்பியதால்
யாப்பின் விதி சற்றே நெகிழ்ந்தது
[கொடுக்காய்ப்புளி கனிச்சீராகினும் அதற்குள் காய் இருப்பதைக் காண்க]
அவள்பாடும் காட்சியினை
RépondreSupprimerஅகக்கண்ணில் நிறைத்தேனே!
சிவப்பான என்முகத்தைச்
சீக்கிரத்தில் மறைத்தேனே!
Supprimerவணக்கம்!
பா..படைத்த வெற்றியினைப்
பாவலன்யான் அடைந்திட்டேன்!
பூ..படைத்த பேரழகாய்ப்
புகழ்த்தமிழைக் கடைந்திட்டேன்!
RépondreSupprimerகொள்ளையிடும் ஓவியம்! கொஞ்சும் தமிழழகைக்
கொள்ளையிடும் ஓவியம்! கூத்தாடித் - துள்ளுகிறேன்!
நாட்டுப. புறமணக்கப. பாட்டுப் படித்தனையே
கூட்டும் சுவையைக் குவித்து!
Supprimerவணக்கம்!
மங்கை மனத்தழகை, மண்ணின் மணத்தழகைத்
தங்கத் தமிழினிக்க தந்துள்ளேன்! - உங்கள்
கருத்தொளிரும் வெண்பா! கமழ்ந்தொளிரும் இன்..பா!
பெருத்தொளிரும் என்னுள் பிணைந்து!
அருமையான சொல்லோவியம் ரசித்தேன் அனைத்தும்!
RépondreSupprimerவாழ்க வளமுடன்.....!
Supprimerவணக்கம்!
வாழ்க வளத்துடன் வண்ணத் தமிழுரைத்தீா்!
சூழ்க கவிதையில் தோய்ந்து!
சொல்லில் சுவையிருக்க சொல்லவந்த கருத்தினையே
RépondreSupprimerவில்லில் அம்பெனவே விடுக்கின்றீர் கவிதையிலே!
புல்லில் பனித்துளியாய் பொலிவுதரும் முத்தணையாய்
கல்லில் வடித்திட்ட கற்சிலையாய் கவிதையிலே!
Supprimerவணக்கம்!
புலவா் உரைத்த புகழ்மொழி கேட்டே
குலவும் இனிமை கொழித்து