dimanche 1 septembre 2013

கும்பகருணன்




இன்றுலகின் நிலைகண்டு இவர்பேச வாய்திறந்தால் கும்பகருணன்

அழைத்தவுடன் எழுந்துவரும் பழக்கம் என்றன்
     அடிச்சுவற்றில் என்றுமில்லை! தூக்கம் என்னுள்
தழைத்தவுடன் இவ்வுலகை மறப்பேன்! அண்ணன்
     தனைப்பார்க்க யான்ஏழுவேன்! தமிழைப் பாட
விழைத்தவுடன் உறங்குவதும் முறையா? இன்று
     வியனுலகின் நிலைகண்டு பேச வந்தேன்!
நுழைந்தவுடன் தமிழமுதை நோக்கிச் செல்வேன்!
     அருந்திடுவேன்! பசிதீரும்! பின்இங் கீவேன்!

தமிழ் வணக்கம்

ஈழத் தமிழர் உயிர்மூச்சாய்
     இயங்கும் தமிழே! என்னிறையே!
வாழும் வாழ்வு நீயானாய்!
     வந்த பகைக்குத் தீயானாய்!
சூழும் புகழே! சுடரொளியே!
     சுவைத்தேன் குடமே! மலர்வனமே!
வீழ்வேன் என்று நினைப்பவரை
     வெல்லும் திறனை விளைத்தருளே!

திருமால் வணக்கம்

மல்சேர் தோள்கள்! வண்டமிழின்
     வளஞ்சேர் தொண்டு! குடிக்கின்ற
கள்சேர் போதை கொடுக்கின்ற
     கவிதை! கருணை எனைமேவ
வில்சேர் அழகா! எழில் இராமா!
     வெற்றி வீரா! உன்னடியைச்
சொல்சேர் என்றன் நாவினிலே
     சூடி மகிழ விரைந்தே..வா!

தலைவர் வணக்கம்

மரபின் மைந்தா! முத்தையா!சீர்
     மணக்கும் தமிழுன் சொத்தையா!பேர்
பரவும்! கமழும்! உரைவீச்சு!
     பசுந்தேன் பொழியும் உன்பேச்சு!
உருவில் நீட்டம்! நான்குள்ளம்!
     மரபின் மைந்தர்! நான் குழந்தை!
இரவும் பகலும் உனைப்போன்றே
     இயங்கும் ஆற்றல் எனக்குண்டு!

உனக்கும் எனக்கும் ஒன்றுடனே
     ஒன்றும் தொடர்பு! முதல்தேதி
கணக்கு போட்டு மண்ணுலகில்
     கால்ப தித்தோம்! பாரீசில்
மணக்கும் கவிதை மன்றத்தில்
     கும்ப கருணன் நீயானாய்!
குணமும் பணமும் குவிசுவிசில்
     கும்ப கருணன் நான்ஆனேன்!

தூக்கம் மறந்து தமிழ்ப்பணியைத்
     தொடரும் தொண்டன்! மடமைகளை
தாக்கிப் பொசுக்கும் கவிதைகளைச்
     சாற்றும் கவிஞன்! முத்தையா!உன்
ஆக்கம் அளிக்கும் முன்னேற்றம்!
     அழகாய் மின்னும் கவிரசனை!
ஊக்கம்! உயர்ந்தோர் நெறிதாக்கம்
     ஊட்டும் தலைவா! வணங்குகிறேன்!

அவையடக்கம்

கம்பன் கவிதை என்வீடு!
     கம்பன் இல்லம் என்னெஞ்சம்!
கம்பன் நினைவே என்வாழ்வு!
     கவித்தேன் பருகும் அவையோரே!
கும்ப கருணன் மொழியாகக்
     கொடுக்கும் கவிதை சுவைத்திடுவீர்!
நம்பி உம்மை வணங்குகிறேன்
     நன்றே கைகள் தட்டிடுவீர்!

விட்ணு துர்க்கையின் வெற்றி அடிகளைப்
பற்றி வாழும் பக்தர்! தொண்டர்!
சரவண பவநந்த குருக்கள்! தமிழை
வரமாய்ப் பெற்றார்! வடித்தேன் வணக்கம்!

வாகீசன் ஆற்றும் வளர்தமிழ்ப் பணியை
ஓகோ என்றே உயர்த்தி வாழ்த்தினேன்!

தத்துவ கம்பனைப் புத்தியில் தரித்த
நற்சிவக் கொழுந்தை வணங்கினேன் நன்றே!

கம்பன் காவியம்! நம்மொழி செல்வம்!
செம்மலர்ச் சீதை, சீர்நிறை இராமன்
காதல் மொழியைக் கருணை ஒளியை
ஈதல் மகிழ்வை, இனிக்கும் நட்பை,
அன்பின் அமுதைப், பண்பின் மாண்பை,
இன்றமிழ்த் தாயின் ஈடிலா எழிலை,  
உலகுக்  கூட்டி உயர்ந்தான் கம்பன்!

அலகிலாப் புகழை அடைந்த கம்பனைப்
பாரீசு நகரம் பணிந்த போற்றும்!
சீருடைச் சுவிசும் பேர்பெறப் புகழும்!

அருட்சொல் வேந்தர் அன்புடன் வந்தே
பெரும்புகழ்க் கம்பனின் பெருமையை உரைத்தார்!
நற்சுகி. சிவனார் அற்புத ஆற்றலைப்
பற்றிட யானும் பகர்ந்தேன் வணக்கம்!

சண்முக வடிவேல் பன்முகம் கொண்டவர்!
அன்பின் ஊற்று! அருந்தமிழ்க் காற்று!
நகைச்சுவை அருவி! நவின்றேன் வணக்கம்!

சித்தன் கவிக்கு முத்தம் கொடுத்துப்
பித்தம் பிடித்துப் பெற்றேன் இன்பம்!
அத்தன் அடிகளை நித்தம் போற்றும்
சித்தன் அவர்க்குப் செப்பினேன் வணக்கம்!

அகத்துள் கம்பனை அமர்த்தி கொண்டு
சுகத்தைக் காணும் சுந்தர மதியர்!
கம்ப காவலர் கனித்தமிழ் பரப்பும்
செம்பணி செழிக்கச் செப்பினேன் வணக்கம்!

கல்யாண சுந்தரம்! கடமை வீரர்!
பல்யானை பலத்தைப் படைத்தவர் என்பேன்!
வல்லார் இவரை வணங்கி னேனே!

கும்ப கருணன் உருவேந்திக்
     கொடுக்கும் என்றன் பாட்டெல்லாம்
இம்மி அளவும் உறக்கத்தை
     இங்கே அளிக்கா தென்றுரைப்பேன்!
இம்மா நிலத்தில் இழிவுகளை
     எரிக்கும் பாடல் என்பாடல்!
அம்மா தமிழே! என்னகத்தில்
     அமர்ந்து நன்றே இயக்கிடுக!

கும்பகருணன் பேசுதல்

தூக்கம் என்றன் உயிர்நண்பன்!
     தூங்கித் தூங்கி நாள்கழித்தேன்!
நீக்கம் இன்றிச் சிலர்வாழ்வில்
     நீண்ட உறக்கம்! வறுமையை
போக்கும் வழியைச் செய்யாமல்
     புகழைப் பேசும் தலைவர்களைத்
தாக்கத் தோள்கள் துடிக்காமல்
     தாழ்வ தேனோ? தமிழினமே!

உணர்வின் தூக்கம், உரிமையினை
     ஒடுங்கச் செய்யும்! கல்லான
மனத்தின் தூக்கம் மாண்புகளை
     மடியச் செய்யும்! சிறந்துள்ள
இனத்தின் தூக்கம் அடிமையெனும்
     இழிவை நல்கும்! பொன்னான
குணத்தன் கும்ப கருணன்யான்
     கொடுக்கும் கவியை உணர்ந்திடுவீர்!

சிலபேர் தூக்கம் வந்ததுபோல்
     சிறப்பாய் நடிப்பர்! நோயுற்றுப்
பலபேர் இரவில் உறங்காமல்
     படுத்து கிடப்பர்! உயர்ந்தபெரும்
மலைபோல் உருவம் யான்உற்றேன்!
     வரமாய்ப் பெற்றேன் தூக்கத்தை!
உளம்சீர் உடல்சீர் கொண்டொளிர
     உறக்கம் தேவை! எனைப்போற்று!

எட்டுத் திக்கும் எம்தமிழர்
     ஏகி வாழும் அகதிநிலை
விட்டு வாழும் நாள்என்றோ?
     வெறியே பிடித்துச் சிங்களன்செய்
கட்டுக் கடங்காக் கொடுமைகளைக்
     கண்டும் கேட்டும் இவ்வுலகு
தட்டும் தமிழர் குரலொலியைச்
     சற்றும் கேளா துறங்குவதேன்?

அன்னைத் தமிழாள் அறமோங்க
     ஆட்சி புரிந்த அழகெங்கே?
பொன்னை நிகர்த்த பொலிவோடு
     புவியை ஆண்ட புகழெங்கே?
முன்னைப் பெருமை அறியாமல்
     முடங்கித் தூங்கும் தமிழர்களே
கண்ணைத் திறப்பீர்! மொழிகாப்பீர்!
     கடமை உணர்ந்து செயல்புரிவீர்!

நன்றி என்ற சொல்மறந்து
     நரிபோல் வாழும் தமிழர்களைக்
கண்டு நெஞ்சம் வலிக்கிறது!
     காக்கை பிடித்து! கால்பிடித்து!
நின்று கிடந்த செயல்முடித்து
     நிலத்தில் குழியைப் பறிப்பதுவோ?
நன்றிக் கென்றே என்படைப்பு!
     நன்றே உணர்வீர்! திருந்திடுவீர்!

வீரம் விளையும் நிலம்ஈழம்!
     வெற்றிக் கனியோ இலைதூரம்!
நேரம் முழுதும் மண்நினைவு!
     நெஞ்சுள் பொங்கும் தமிழுணர்வு!
ஆரம் சூடி, அறம்சூடி,
     ஆண்ட காலம் மீண்டுமுற
பாரம் நீங்க, மாவீரர்
     படையைக் கண்டு வியக்கின்றேன்!

நேற்றோர் கட்சி நின்றிடுவார்!
     இன்றோர் கட்சி தாவிடுவார்!
ஏற்றோர் கொள்கை எடுவுமிலை!
     உண்ணம் முமுதும் பணமேதான்!
மாற்றோர் அணியை வீடணன்தான்
     வந்து சேர்ந்த பழிச்செயலைத்
தோற்கும் படியே தலைவர்பலர்
     துணிந்து கட்சி மாறுகிறார்!

சொந்த தம்பி அண்ணனையே
     சூழ்ச்சி செய்து கொல்கின்றான்!
இந்த உலகின் நிலைகண்டு
     என்றன் நெஞ்சம் எரிகிறது!
அந்தக் கால நினைவோடே
    அடியேன் உறங்கச் செல்கின்றேன்!
சந்தக் கவிஞன் என்நன்றி!
    அடுத்த ஆண்டு சந்திப்போம்!

(சுவிற்சர்லாந்து கம்பன் விழா 07-10-2007)


3 commentaires:

  1. அருமையான கவிதை கவிஞரே!

    இன்றுவரைக்கும் அதேநிலைதான் சில இடங்களில்.:)

    RépondreSupprimer
  2. தமிழா தரணியிற் தூக்கமோ இன்னும்
    அமிழாது ஆவன செய்!

    ஒவ்வொன்றும் மனந்தொட்ட கவியடிகள்!
    சொல்ல வார்த்தைகள் இல்லை...
    மிகமிக அருமை! சிறப்பு!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
  3. கம்பன் விழாவில் கம்பன் இல்லாமல் போனால் என்ன அதை ஈடு செய்ய தான் உமை ஈன்றார் உம் அன்னை. இது ஈழம் சேரும் பெருமை. இது நிஜமான உண்மை. வாழ்த்த வார்த்தைகள் வரவில்லை தேடுகிறேன். வாயடைத்து விட்ட தய்யா

    செப்பிடும் சொற்கள் எல்லாம் சித்திரமே,
    அதில் சிலைகள் வடிப்பதும் அற்புதமே

    RépondreSupprimer