இருபத்து நான்காம்
ஆண்டு
பிரான்சு கம்பன் விழாப் பாட்டரங்கம்
தமிழ் வணக்கம்
மனமோங்கு தமிழே..உன் இனமோங்கு கவிபாட
மலர்ஊறும்
தேனள்ளி யூட்டு - உன்
மடியேந்தி
மகனைத்தா லாட்டு!
மதியோங்கு தமிழே..உன் நதியோங்கு கவிபாட
மத்தாப்பு
வண்ணங்கள் காட்டு! - பொன்
மகரத்து
யாழ்கொண்டு மீட்டு!
தினமோங்கு தமிழே..உன் திணையோங்கு கவிபாடச்
தித்திக்கும்
வித்தள்ளிக் கூட்டு! - மின்னும்
சிங்கார
அணியள்ளிச் சூட்டு!
சீரோங்கு தமிழே..உன் பேரோங்கு கவிபாடச்
சிந்தைக்குள்
சந்தத்தைக் கூட்டு! - தான
தந்தான தாளங்கள்
போட்டு!
வனமோங்கு தமிழே..உன் வளமோங்கு கவிபாட
மானாக மயிலாகத்
தீட்டு! - இந்த
மன்றத்துள்
இன்பத்தை மூட்டு!
மகிழ்வோங்கு தமிழே..உன் அகமோங்கு கவிபாட
வார்த்தைக்குள்
இன்பத்தை நீட்டு! - பெரு
மலையாகப்
புகழள்ளி நாட்டு!
பனியோங்கு தமிழே..உன் கனியோங்கு கவிபாடப்
படர்கின்ற
வண்ணத்தைத் தீட்டு! - வருக
பறந்தோடி
என்சொல்லைக் கேட்டு!
பாட்டுக்கே அரசாக்கி நாட்டுக்கே உரமாக்கிப்
பாசத்தால்
என்னைச்பா ராட்டு! - தாயே
பணிகின்றேன்
உன்னைச்..சீ ராட்டு!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
28.10.2025