கலித்துறை மேடை - 5
கட்டளைக் கலித்துறை - 3
முதல் இருசீர் மா அல்லது விளம் + மா + தேமா + தேமா
முதல் 3 சீர்கள் வெண்டளையைப் பெற்றிருக்கும்
ஏய வரங்கள் இரண்டின் ஒன்றி னால்என்
சேயர[சு] ஆள்வது, சீதை கேள்வன் ஒன்றால்
போய்வன மாள்வ தெனப்பு கன்று நின்றாள்,
தீயவை யாவை யினும்சி றந்த தீயாள்!
[கம்பர், அயோ. கைகே. சூழ். - 14]
நேரசையில் தொடங்கிய இக்கட்டளைக் கலித்துறையில் ஓரடியில் எழுத்தெண்ணிக்கை ஒற்று நீக்கி 12 இருக்கும்.
வரங்கொள இத்துணை மன்னும் அல்லல் எய்தி
இரங்கிட வேண்டவ தில்லை, ஈவன், என்பால்
பரங்கெட இப்பொழு தே..ப கர்ந்தி[டு] என்றான்,
உரங்கொள் மனத்தவள் வஞ்சம் ஓர்கி லாதான்.
[கம்பர், அயோ. கைகே. சூழ். - 13]
நிரையசையில் தொடங்கிய இக்கட்டளைக் கலித்துறையில் ஓரடியில் எழுத்தெண்ணிக்கை ஒற்று நீக்கி 13 இருக்கும்.
ஆங்கில யாண்டும் அமுதே நல்க வேண்டும்!
பூங்குள மாகப் புவியே பூக்க வேண்டும்!
ஈங்குள யாவும் இனிமை யாக வேண்டும்!
மாங்குளத் தாயே! மகிழ்வே மண்ணில் வேண்டும்!
அருளே மணக்க, அறமே யாள, உண்மைப்
பொருளே சிறக்கப், புகழே சேர, வாழ்வில்
திருவே செழிக்கச், செகமே ஒன்றி வாழக்
குருவே! சிவனே! கொடுப்பாய் என்றும் காப்பே!
[பாட்டரசர்] 31.12.2023
ஓரடியில்
ஐந்து சீர்கள் இருக்கும். நான்கு அடிகளைப் பெற்று வரும். நான்கடிகளும் ஓரெதுகை பெறும்.
1.3 ஆம் சீர்களில் மோனை யமையும்.
முதல் மூன்று சீர்கள் இயற்சீர் வெண்டளையைப் பெற்றிருக்கும். மூன்றாம் சீர் மாவாக அமையும். நான்காம் ஐந்தாம் சீர்கள் தேமாவாகும்.
மேற்கண்ட கட்டளைக் கலித்துறை ஒன்றே ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம், பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
பாவலர் பயிலரங்கம், பிரான்சு
01.01.2024
Aucun commentaire:
Enregistrer un commentaire