பாவலர் கவிப்பாவை பிறந்தநாள் வாழ்த்துமலர்
கன்னல் தமிழ்மேல் காதல் பூண்டு
களிக்கும் கவிப்பாவை!
பின்னல் பூவாய்ப் பிறந்து சொற்கள்
பேணும் சுவை..நாவை!
மின்னல் விழிகள் மீட்டும் இசையுள்
விளையும் தமிழ்க்கோவை!
என்னுள் கமழும் இன்பத் தமிழாய்
என்றும் வாழியவே!
வடலுார்
வள்ளல் வழியை ஏற்று
வாழும் கவிப்பாவை!
மடலுார் மணமாய் மனத்தின் எண்ணம்
வழங்கும் செயல்மாட்சி!
கடலுார் ஆழம் கருத்தே ஊறும்
கவிதைப் புகழாட்சி!
உடலுார் உணர்வில் உயர்ந்தோர் நெறிகள்
ஒளிர வாழியவே!
அல்லும் பகலும் அருட்பா அமுதை
அருந்தும் கவிப்பாவை!
சொல்லும் செயலும் துாய்மை காக்கும்
துாயோர் மனமாக!
வெல்லும் கவிதை துள்ளும் மான்போல்
வித்தை பலகாட்டும்!
செல்லும் இடத்தில் சிறப்பை ஏற்றுச்
செழித்து வாழியவே!
அருளார் மனமும் அமைதிக் குணமும்
அமைந்த கவிப்பாவை!
திருவார் பத்தி சோ்த்த சத்தி
தேனின் சுவையூட்டும்!
வருவார் போவார் வாழ்த்தும் வண்ணம்
வழங்கும் கொடையுள்ளம்!
பொருளார் தமிழில் பொங்கும் புலமை
பொலிந்து வாழியவே!
கம்பன் கவியால் கண்ணன் கழலால்
கனிந்த கவிப்பாவை!
நம்மண் மரபை நன்றே போற்றி
நடக்கும் தமிழச்சி!
செம்பொன் நுால்கள் செப்பும் வழியில்
திளைத்து வாழியவே!
அம்மன் கோவில் அழகாய் வாழ்க்கை
அமைந்து வாழியவே!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
பாலவர் பயிலரங்கம் பிரான்சு

