dimanche 10 février 2019

மடக்கணி வெண்பா


வெண்பா மேடை - 135
  
மடக்கணி வெண்பா
  
'மடக்கு' என்பது வந்த சொல்லோ, சொற்றோடரோ மீண்டும் வந்து பொருள் வேறுபட்டு நிற்பதாகும். யமகம் என்றாலும் மடக்கு என்றாலும் ஒரு பொருளையே குறிக்கும். யமகம் என்பது வடசொல்.
  
அம்மடக்கு, 1. ஆதிமடக்கும், 2. இடைமடக்கும், 3. கடைமடக்கும், 4. ஆதியோடு இடைமடக்கும், 5. ஆதியோடு கடைமடக்கும், 6. இடையோடு கடைமடக்கும், 7. முழுதும் மடக்கும் என ஏழுவகைப்படும்.
  
1. ஆதிமடக்கு [அடியில் முதலிருசீர் மடங்கி வருவது]
2. இடைமடக்கும் [அடியில் இடையிருசீர் மடங்கி வருவது]
3. கடைமடக்கும், [அடியில் ஈற்றிருசீர் மடங்கி வருவது]
4. ஆதியோடு இடைமடக்கும், [அடியில் முதற்சீரும் மூன்றாம் சீரும் மடங்கி வருவது]
5. ஆதியோடு கடைமடக்கும், [அடியில் முதற்சீரும் ஈற்றுச்சீரும் மடங்கி வருவது]
6. இடையோடு கடைமடக்கும், [அடியில் இரண்டாம் சீரும் நான்காம் சீரும் மடங்கி வருவது]
7. முழுதும் மடக்கும் [அடியில் நான்கு சீர் மடங்கி வருவது]
  
ஓரடி மடக்கு நான்கு வகைப்படும்.
  
1. முதலடியில் மட்டும் மடங்கி வருவது
2. இரண்டாமடியில் மட்டும் மடங்கி வருவது
3. மூன்றாமடியில் மட்டும் மடங்கி வருவது
4. நான்காமடியில் மட்டும் மடங்கி வருவது
  
1. முதலடியில் ஆதிமடக்கு, 2. முதலடியில் இடைமடக்கு, 3. முதலடியில் கடைமடக்கு, 4. முதலடியில் ஆதியோடு இடைமடக்கு, 5. முதலடியில் ஆதியோடு கடைமடக்கு, 6. முதலடியில் இடையோடு கடைமடக்கு, 7. முதலடியில் முற்று மடக்கு என ஏழு எழுவகைப்படும். இவ்வாறே, இரண்டாமடியும், முன்றாமடியும், நான்காமடியும் மடக்கைப் பெறும். ஆக ஓரடி மடக்கு 28 ஆகும்.
  
ஈரடி மடக்கு ஆறு வகைப்படும்.
1. முதல் ஈரடியில் மட்டும் மடங்கி வருவது [இணை மடக்கு]
2. முதலடியிலும் மூன்றாமடியிலும் மட்டும் மடங்கி வருவது [பொழிப்பு மடக்கு]
3. முதலடியிலும் நான்காமடியிலும் மட்டும் மடங்கி வருவது [ஒரூஉ மடக்கு]
4. இறுதி இரண்டடியில் மட்டும் மடங்கி வருவது
5. இடையிலுள்ள இரண்டடியில் மட்டும் மடங்கி வருவது
6. இரண்டாமடியிலும் நான்காமடியிலும் மட்டும் மடங்கி வருவது
  
1. முதலீரடி ஆதிமடக்கு, 2. முதலீரடி இடைமடக்கு, 3. முதலீரடி கடைமடக்கு, 4. முதலீரடி ஆதியோடு இடைமடக்கு, 5. முதலீரடி ஆதியோடு கடைமடக்கு, 6. முதலீரடி இடையோடு கடைமடக்கு, 7. முதலீரடி முற்று மடக்கு என ஏழு வகைப்படும். இவ்வாறே மேற்கூறிய மற்ற ஈரடிகளும் அமையும். ஆக, ஈரடி மடக்கு 42 ஆகும்.
  
மூவடி மடக்கு நான்கு வகைப்படும்.
1. ஈற்றடி ஒழித்த ஏனைய மூன்றடியில் மடங்கி வருவது [கூழை மடக்கு]
2. ஈற்றயலடி ஒழித்த ஏனைய மூன்றடியில் மடங்கி வருவது [கீழ்க்கதுவாய் மடக்கு]
3. இரண்டாமடி ஒழித்த ஏனைய மூன்றடியில் மடங்கி வருவது [மேற்கதுவாய் மடக்கு]
4. முதலடி ஒழித்த ஏனைய மூன்றடியில் மடங்கி வருவது
  
1. ஈற்றடி ஒழித்த ஏனைய மூன்றடி ஆதிமடக்கு, 2. ஈற்றடி ஒழித்த ஏனைய மூன்றடி இடைமடக்கு, 3. ஈற்றடி ஒழித்த ஏனைய மூன்றடி கடைமடக்கு, 4. ஈற்றடி ஒழித்த ஏனைய மூன்றடி ஆதியோடு இடைமடக்கு, 5. ஈற்றடி ஒழித்த ஏனைய மூன்றடி ஆதியோடு கடைமடக்கு, 6. ஈற்றடி ஒழித்த ஏனைய மூன்றடி இடையோடு கடைமடக்கு, 7. ஈற்றடி ஒழித்த ஏனைய மூன்றடி முற்று மடக்கு என ஏழு வகைப்படும். இவ்வாறே மேற்கூறிய மற்ற மூவடிகளும் அமையும். ஆக, முவடி மடக்கு 28 ஆகும்.
  
நான்கடி மடக்கு ஒன்று
  
1. நான்கடியில் மடங்கி வருவது [முற்று மடக்கு]
  
1. நான்கடி ஆதிமடக்கு, 2. நான்கடி இடைமடக்கு, 3. நான்கடி கடைமடக்கு, 4. நான்கடி ஆதியோடு இடைமடக்கு, 5. நான்கடி ஆதியோடு கடைமடக்கு, 6. நான்கடி இடையோடு கடைமடக்கு, 7. நான்கடி முற்று மடக்கு. ஆக நான்கடி மடக்கு 7 ஆகும்.
  
ஓரடியில் அமையும் மடக்கு 28, ஈரடியில் அமையும் மடக்கு 42, மூவடியில் அமையும் மடக்கு 28, நான்கடியில் அமையும் மடக்கு 7, ஆக மொத்தம் நுாற்றைந்து மடக்குகளாகும். இந்த நுாற்றைந்தும் இடையிட்டு வருவன, இடையிடாது வருவன, இடையிட்டும் இடையிடாதும் வருவனவாகிய மூவகையோடும் விகற்பிக்க [105x3 = 315] முந்நுாற்றொருபத்தைந்து மடக்குகளாகும்.
  
மடக்காக வந்த சொற்கள் பிரிந்து பொருள் தருவன இடையிட்டு வருவன ஆகும்.
  
பல்லாண்டு - பல்லை ஆண்டு
பல்லாண்டு - பல ஆண்டு
  
மடக்காக வந்த சொற்கள் பிரியாமல் பொருள் தருவன இடையிடாது வருவன ஆகும்.
மரை - மானே
மரை - தாமரை
  
மடக்காக வந்த சொற்கள் பிரிந்தும் பிரியாமலும் பொருள் தருவன இடையிட்டும் இடையிடாதும் வருவனவாகும்.
  
அப்பா - தந்தை
அப்பா - அந்தப் பாட்டு
  
1.
முதலடி முதல் மடக்கு [ ஆதி மடக்கு]
  
மென்மையால் மென்மையால் வித்தை புரிகின்றாள்!
இன்கையால் இன்பம் இடுகின்றாள்! - பொன்மையால்
நெஞ்சத்துள் தீட்டுகிறாள் நேயத்தை! சொர்க்கத்தை
மஞ்சத்துள் காட்டுகிறாள், வாழ்த்து!
  
மென்மையால் - மென்மைத்தன்மையால்
மென்மையால் - மென்மையான மையால்
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
2.
இரண்டாமடி முதல் மடக்கு
  
தப்பாவே வாழ்ந்தவெனைத் தாங்கி உயர்வளித்த
அப்பாவே! அப்பாவே ஆழ்ந்தளிப்பாய்! - முப்பொழுதும்
முத்தமிழில் நான்மூழ்க முத்தளிப்பாய்! என்னுடைய
சித்தமதில் வாழ்வாய் செழித்து!
  
அப்பாவே - தந்தையே
அப்பாவே - அந்தப் பாடலை
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
3.
மூன்றாமடி முதல் மடக்கு
  
காயென்ன? கன்னல் கனியென்ன? முற்றிய
வேயென்ன? ஆட்டு விலாவென்ன? - வாயுற்ற
பல்லாண்டு பல்லாண்டு பற்றிச் சுவைத்திட்டேன்
சொல்லாண்டு தேனைச் சுவைத்து!
  
பல்லாண்டு - பற்களை ஆண்டு
பல்லாண்டு - பல ஆண்டுகள்
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
4.
நான்காமடி முதல் மடக்கு
  
பூக்கும் கவிகோடி! பொங்கும் உணர்வலைகள்!
ஊக்கும் உயர்வாழ்வை! ஏக்கமுறத் - தாக்கும்
நிரையை யுடைய..உன் நீள்விழிகள் காட்டும்
மரையை மரையை வடித்து!
  
மரையை - மானை
மரையை - தாமரையை
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
இவ்வாறு அமைந்த 'முதல் மடக்கு வெண்பா' ஒன்றை விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து முதல் மடக்கு வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
    
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
10.02.2019

1 commentaire: