lundi 30 octobre 2017

வெளிவிருத்தம்


மூன்றடியால் வந்த வெளிவிருத்தம்
[மா + காய் + மா + காய் + தனிச்சொல்]
  
என்மகளே!
  
1.
சின்ன விழிதிறந்து சிரிக்கும் எழில்கண்டு - என்மகளே!
தின்னுஞ் சுவையாவும் திரண்டு வந்ததடி - என்மகளே!
என்ன தவம்செய்தேன்? இன்பம் பெருகுதடி - என்மகளே!
  
2.
பிஞ்சி விரலழகும் பேச வருமழகும் - மல்லிகையே!
நெஞ்சில் கால்வைத்து நிற்கும் பேரழகும் - மல்லிகையே!
கொஞ்சிக் கொடுத்தநலம் கோடிப் பொன்னிணையோ - மல்லிகையே!
  
3.
கண்ணில் மையிட்டுக் கண்ணார் பொட்டிட்டுப் - பூங்குயிலே!
வண்ண மலரிட்டு வாசப் பொருளிட்டுப் - பூங்குயிலே!
விண்ணின் முழுநிலவு வீட்டில் தவழுதடி - பூங்குயிலே!
  
4.
பட்டில் உடையணிந்து பவள மணிசூடி - இளங்கிளியே!
தொட்டில் உனைக்கிடத்தித் துாங்கத் தாலாட்டி - இளங்கிளியே!
எட்டுத் திசையழகும் என்முன் தோன்றுதடி - இளங்கிளியே!
  
5.
முல்லை அடிகளை..நான் முகரும் பொழுதெல்லாம் - வெண்குருகே!
தொல்லை மறக்கின்றேன்! சொக்கி மகிழ்கின்றேன் - வெண்குருகே!
கொல்லை மலர்களின் கூட்டே உன்னுருவம் - வெண்குருகே!
  
6.
முழந்தாள் இட்டழகாய் முன்னே நகர்ந்துவரும் - பூஞ்சிட்டே!
கொழுந்தாய்த் தலையாட்டிக் கொஞ்சிச் சிரிக்கின்ற - பூஞ்சிட்டே!
பழந்தான் பழுக்குதடி! பாக்கள் பிறக்குதடி - பூஞ்சிட்டே!
  
7.
ஆடும் செங்கீரை அழகை நான்கண்டு - என்னுயிரே!
பாடும் புலமைமிகும்! படரும் பசுமைமிகும் - என்னுயிரே!
வாடும் நிலையாவும் வற்றி வரண்டுவிடும் - என்னுயிரே!
  
8.
கொட்டும் சப்பாணி கோல எழில்கண்டு - பொன்மயிலே!
தட்டும் இசையாவும் தாங்கும் செவிகொண்டு - பொன்மயிலே!
கட்டும் ஆசைக்குக் கணக்கே இல்லையடி - பொன்மயிலே!
  
9.
வட்டில் அமுதேந்தி வள்ளல் குணமேந்தி - மலர்கொடியே!
வட்ட மாமதியை வா..வா.. என்றழைத்தாய் - மலர்கொடியே!
முட்டும் இனிமைக்கு முடிவே இல்லையடி - மலர்கொடியே!
  
10.
மெல்ல நடந்துவரும் விந்தை அடியழகை - மின்தேரே!
சொல்ல மொழியில்லை! தொடரும் கடலலையாய் - மின்தேரே!
வெல்லச் சுவைபாயும்! வேண்டும் நலங்கூடும் - மின்தேரே!
  
11.
அந்த அப்பூச்சி அழகுக் கிணையேது - மென்காற்றே!
சந்த மணியொளியைச் சாற்ற சுவையேது - மென்காற்றே!
தந்த முத்தத்தின் தண்மைக் கீடேது - மென்காற்றே!
  
12.
தலைமேல் உனைத்துாக்கித் தாங்கி நடந்ததையும் - என்மகளே!
கலைபோல் உனையெண்ணிக் காத்துக் கிடந்ததையும் - என்மகளே!
மலைபோல் மனங்கொண்டே யாவும் மறந்ததுமேன் - என்மகளே?
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
0.10.2017.

1 commentaire: