புத்துலகைப் படைத்திடுவோம்!
சீருடைய செந்தமிழில் கவிதை தீட்டிச்
சிறப்புடைய புத்துலகைப் பாட வந்தார்
பேருடைய நற்கவிஞர் நால்வர்! பாடும்
பீடுடைய கருத்தெல்லாம் இனிக்கும் ஐயா!
கூருடைய அம்பெனவே பாய, நெஞ்சுள்
கொளுவுடைய மடமையெலாம் மடிய இங்கே
யாருடைய சிந்தனைகள் தீயை மூட்டும்
அன்னவரின் வரலாற்றை உலகம் போற்றும்!
பாலைவனம் போல்கிடக்கும் நெஞ்சம் தன்னைப்
பசுமையுறச் செய்கின்ற மருந்தும் யாது?
சோலையெனச் சாலையெலாம் பூத்தே ஆடச்
சுடரொளியைத் தந்தருளும் பொருளும் யாது?
நாளைவரும் புத்துலகில் இன்பம் பொங்க
நாம்கொடுக்கும் நல்லதொரு நெறியும் யாது?
பாளைதரும் மதுநிகர்த்த அன்பே யாகும்!
பண்பருளும் அன்பமுதைப் பருகி வாழ்வோம்!
பொல்லாத பூகம்பம் வடக்கே வந்தால்
புதுவையிலே இடம்மாறும் காணிக் கற்கள்!
தள்ளாத வயதினிலும் வழக்கு மன்றில்
தப்பான வழக்குகளைத் தொடுப்பார் காணீர்!
எல்லோரும் இன்புற்று வாழ வேண்டின்
எழில்கொஞ்சும் ஒற்றுமையை ஏற்பீர் ஐயா!
நல்லோரே! நற்றமிழ்நாட் டோரே! இன்ப
நலங்கொழிக்கும் புத்துலகைப் படைப்போம் வாரீர்!
தானுயர்ந்து மற்றவரை அழுத்தி வாழும்
சதிகாரர் படைத்ததுவே கொடிய சாதி!
நானுயர்ந்தோன்! நீ..தாழ்ந்தோன்! என்றே கூறி
நமையழித்த சாதிகளை வளர்த்து விட்டீர்!
வானுயர்ந்த புத்துலகைப் படைக்க வேண்டின்
மண்மூடி மறையட்டும் சாதிப் பேய்கள்!
கூன்விழுந்த மடமையெலாம் ஒழிய, நன்மை
கொண்டொளிரும் பொதுவுடைமை பூக்கச் செய்வீர்!
மனம்கெடுக்கும் பழமூடப் பழக்கம் நீங்க,
மதம்கொடுக்கும் மதம்பிடித்த புன்மை தீர,
தினம்கொழிக்கும் சாதிவெறி முற்றும் ஓட,
திறம்அழிக்கும் தாழ்வென்னும் கீழ்மை மாய,
வனங்கமழும் தென்றலெனக் காதல் வீசும்!
மண்ணுலகைப் பொன்னுலகாய் மாறச் செய்யும்!
மணங்கமழும் புத்துலகைப் படைக்க வேண்டின்
மனம்இணைக்கும் காதல்மலர் பூத்தல் நன்றாம்!
அன்பு மலரட்டும்
தன்பிள்ளை, தன்மனைவி என்றே அன்பைத்
தானடக்கிச் சிறையிட்டு வாழும் நெஞ்சே!
என்சொல்லை இவ்வரங்கில் சற்றே கேளாய்!
எல்லைபல கடந்துன்றன் அன்பை வீசு!
இன்முல்லைக் காடாக வாழ்க்கை பூக்கும்!
இன்பமொளிர் புத்துலகை அன்பே ஆக்கும்!
பொனில்லை! பொருளில்லை என்ற போதும்
பொழிகின்ற அன்புமழை உன்னைக் காக்கும்!
அன்பாம் அமுதை அளிக்க வருகிறார்
பண்பின் செல்வர் பார்த்த சாரதி!
நல்ல நண்பர்! நற்றமிழ் அன்பர்!
வல்ல தமிழை வழங்கும் நெஞ்சர்!
இன்றைய இதழ்களில் இவரின் படைப்புகள்
நன்றாய் மின்னும்! நம்மை மயக்கும்!
பாக்கி யாவிற்கு இவரின் கவிதைகள்
இராக்கெட் வேகத்தில் செல்லும்! இராணி
இவரை இராசாவாய் ஏற்று மகிழ்ந்தாள்!
எவர்தாம் இவருக்கு இணையாய் நிற்பர்?
பார்த்த சாரதி! பைந்தமிழ்ச் சாரதி!
ஆர்த்து எழுகவே! அன்பைப் பொழிகவே!
ஒற்றுமை ஓங்கட்டும்
சுற்றிவரும் உலகத்தை உடைய வண்ணம்
உயிர்காக்கம் ஒற்றுமையே! தமிழர் உன்..கை
பற்றிவரும் நாள்என்றோ? வரப்புச் சண்டை!
பாய்ந்தோடும் நீருக்குக் கத்தி குத்து!
சுற்றியுள அமைப்புகளிள் தலைவர் மோதல்!
துலங்கிடுமோ நற்றமிழர் வாழ்வு? நெஞ்சுள்
முற்றிவரும் சிந்தனையைக் கவிதை யாக்கி
முழங்கிடுவார் பலராமன்! இனிதே கேட்போம்!
நற்பல ராமனே! நற்செயல் இராமனே!
வளமார் தமிழை வழங்கும் இராமனே!
பகையை வெல்லும் வகையை அறிந்து
போற்றும் தொண்டை ஆற்றும் இராமனே!
என்னுள் இருக்கும் இனிய இராமனே!
உன்னுள் இருக்கும் உணர்வை இங்குத்
துணிவுடன் பாடத் துள்ளி வருகவே!
அணியுடன் தமிழை அள்ளித் தருகவே!
பலராம பெருந்தகையே! - தருக
பசுந்தமிழ்க் கனிச்சுவையே!
சாதிகள் ஒழியட்டும்
கூர்ஈட்டி, மின்னும்வாள், உயிரைப் போக்கும்
குண்டு,தடி, வல்லிரும்பும. இவைகள் யாவும்
பேரிட்டி நிற்கின்ற சாதி முன்னே
பின்முதுகு காட்டுமடா! சாதிப் பேயால்
மார்காட்டி இறந்தவர்கள் கோடி! பொல்லா
மடமையிருள் நீங்கிடவே வேண்டும் என்று
பா..கூட்டிப் படைத்திடவே வந்தார்! நல்ல
பண்புடைய திருமதிநற் சீமோன் இங்கே!
அருமதி படைத்த திருமதி சீமோன்
தருமதி யாவும் தமிழ்மதி யன்றோ!
நன்றே பேசும் நற்றமிழ்ப் புலமை
என்றும் இவர்பால் இருக்கக் கண்டேன்!
பெருமை பலவும் பேறெனப் பெற்றே
அருமைத் தொண்டை அளிக்கக் கண்டேன்!
சாதிப் பேயை மோதி மிதித்துச்
சோதி உலகைச் சூட்டுக இனிதே!
திருமதி சீமோன் வருகவே - உம்
தீந்தமிழ்ப் பாக்களைத் தருகவே!
காதல் கமழட்டும்
விண்கதிரும், வெண்மதியும், வீசும் காற்றும்
வியனுலகைக் காப்பதுபோல், அன்பே மின்னும்
நன்மதியால் பூத்தவுயர் காதல் என்றும்
நலங்கொடுத்து வாழ்வுதனைக் காக்கும்! இங்குத்
துன்மதியால் துயர்கூடும் செயலைப் போக்கும்!
சுரக்கின்ற தேனூற்றாம்! கரும்பின் சாறாம்!
பொன்தமிழில் சொல்லெடுத்துக் காதல் பாக்கள்
பொழிந்திடுவார் நடராசன்! உண்போம் நாமே!
காதல் மணத்தால் கமழ்ந்து வாழும்
காதல் நெஞ்சர்! கன்னித் தமிழ்மேல்
காதல் கொண்ட கவிதைப் பித்தர்!
மோதும் விழிகளின் தூதை அறிந்தவர்!
நம்மின் தமிழை நன்றே காக்கும்
கம்பன் கழகக் கடமை வீரர்!
காதல் கமழ ஒளிரும் உலகை
ஓத வருகவே! உயர்தமிழ் தருகவே!
தில்லைக் கூத்தனே நடராசா! - தமிழ்ச்
சொல்லை முத்தெனத் தொடு..ராசா
நடராசா.. தமிழ்ப்பாட்டில் நட...ராசா!
இன்பக் கவிதைக் கூடத்தில்
இனிதே பயிலும் பிள்ளையிவர்!
துன்பந் தந்த நபர்களையே
துரத்தி ஓட்டும் வீரரிவர்!
அன்பே இவரின் இருப்பாகும்!
அழகுத் தமிழே விருப்பாகும்!
நன்றே செய்யும் நண்பர்அலன்
நலமாய்ப் புதுமைக் கவிதருவார்!
அலன் வருகவே! - இன்ப
அருந்தமிழ் தருகவே!
அருமைத் தமிழின் சீர்பாட
அரங்கில் வந்தார் அப்பாவு!
பெருமை யாவும் இவர்கவியின்
பிடியில் இருந்து தப்பாது!
உரிமை யோடு செந்தமிழர்
உயர்ந்து வாழ்தல் எப்போது?
அரிய கருத்தை மழையாக
அளிப்பார் நண்பர் இப்போது!
அப்பாவு வருகவே - கவிதைச்
சாப்பாடு தருகவே!
அடுத்துப் பாட அழைக்கின்றேன்
அன்பர் இராச இந்திரனை!
எடுத்துக் கொடுக்கும் கருத்தெல்லாம்
இனிக்கும் தேனே! நண்பரிவர்
படுத்துத் தூங்கும் பொழுதினிலும்
படரும் கனவில் தமிழொளிரும்!
தொடுத்துக் கவிதை அளித்திடவே
துள்ளி வருக மேடையிலே!
இராசேந்திர நண்பா! - தருகவே
வாசம் ஏந்தும் நற்...பா!
வாசம் ஏந்தும் நற்...பா!
தொடரும்
இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்.
RépondreSupprimer
RépondreSupprimerபுத்துலகம் வேண்டிப் புனைந்த விருத்தங்கள்
முத்தெனக் கண்முன் ஒளிந்தனவே! - இத்தரை
பூத்து மணக்கும் பொழிலாக! உன்சொல்லைக்
காத்துச் சிறப்போம் களித்து!
Supprimerவணக்கம்!
சாதி இலாமல் சமுகம் தழைத்தோங்க!
நீதி நெறிகள் நிலைத்தோங்க! - மோதி
அழிகின்ற மூர்க்கம் அகன்றோட! அன்பின்
பொழிலாய் வாழ்வைப் புதுக்கு!
வணக்கம் ஐயா!
RépondreSupprimerபுத்துலகு காணப் புகன்றீரே பாக்களால்!
அத்தனையும் நல்வித்தே ஆம்!
அருமையான பாக்கள் ஐயா!
அறிவுக் கண்களைத் திறக்க வைக்கும்
ஒப்பற்ற சிந்தனைச் சிறப்பு மிக்க
பாக்கள் இங்கு காண்கின்றேன்!
மிக்க நன்றி ஐயா!
அறிவுச் சுடரேற்றி ஆன்றோராய் வாழ
நெறியோடு நீருகந்த வாழ்வு! - பெரிதாம்
பிறப்பின் பெரும்பயன் பெற்றோமே! உங்கள்
சிறப்பாலே தேறினோ மே!
என் பணிவான ஆசிரியர் தின
நல் வாழ்த்துக்களும் உங்களுக்கு ஐயா!
அருமையான பகிர்வு
RépondreSupprimerசிறந்த பாவரிகள்
தொடருங்கள்
வணக்கம் !
RépondreSupprimerஒப்பற்ற சிந்தனையால் உருவெடுத்த நற் கருத்துக்களைக் கண்டு
உள்ளம் மகிழ்ந்ததையா ! அருமையான பாவரிகள் ! அனைவருக்கும்
வாழ்த்துக்கள் !மிக்க நன்றி பகிர்வுக்கு .
வணக்கம் ஐயா !
RépondreSupprimerஇன்பத் தமிழில் இனிக்கும் அருமையான பாமாலைகளைத் தினமும்
வழங்கி வரும் தங்களுக்கு இந்த அம்பாளடியாள் விருது ஒன்றினை
வழங்கிக் கௌரவிப்பதில் பெருமை கொள்கின்றேன் .தயவு கூர்ந்து
அதனைப் பெற்றுக்கொள்ள வருமாறு அன்போடு அழைக்கின்றேன் .
http://rupika-rupika.blogspot.com/2014/09/blog-post_14.html
சாதியறும் புத்துலகின் சத்தியங்கள் பாராளும்
RépondreSupprimerஆதியின நோய்கள் அகன்றிட - மோதியெழும்
நீரலையாய் மூடரணை நீக்கிடுவோம் ! எம்மக்கள்
சீரமைக்க கொள்வர் செழிப்பு !
விருத்தம் எனக்கு விரும்பிய பாட்டு
அருந்தி மகிழ்ந்தேன் அகத்து !
அனைத்தும் அருமை ஐயா
படித்தேன் ரசித்தேன்
வாழ்க வளமுடன்
தம 7
பள்ளிக் கூடப் பாடப் பதிவு.
RépondreSupprimerஅள்ளி அருந்தினேன் - அமுது.
தள்ளி இருந்தேன் நேர நெருக்கடி
வேதா. இலங்காதிலகம்.