கலிப்மேடை - 60
கலித்தாழிசை – 3
கலித்தாழிசை இரண்டு அடிகளிலும் வரும். பல அடிகளிலும் வரும்.
ஈற்றடியில் மற்ற அடிகளை விடச் சீர்கள் மிகுந்து வரும். மற்ற அடிகளின் சீர்கள் அளவொத்தும்
வரும். அளவொவ்வாமலும் வரும். மடக்குப் பெற்றும் வரும்.
கலித்தாழிசை தனிப்பாட்டாகவும் வரும். ஒரு பொருளில் மூன்று
பாடல்கள் அடுக்கப்பட்டும் வரும். ஒரு பொருண்மேல் மூன்றாய் வருவனவற்றைக் கலியொத்தாழிசை
என்பர்.
கலியொத்தாழிசை - 2
வெண்டளையால் வந்த கலியொத்தாழிசை
1.
செல்லார் பொழிற்றில்லைச் சிற்றம் பலத்தெங்கள்
பொல்லா மணியைப் புகழ்மினோ வம்மின் புலவீர்காள்!
2.
முத்தேவர் தேவை முகிலுார்தி முன்னான
புத்தேளிர் போலப் புகழ்மினோ வம்மின் புலவீர்காள்!
3.
அங்கற் பசுங்கன் றளித்தருளும் தில்லைவனப்
பூங்கற் பகத்தைப் புகழ்மினோ வம்மின் புலவீர்காள்!
[சிதம்பரச் செய்யுட் கோவை]
1.
கொய்தினை காத்தும், குளவி அடுக்கத்தெம்
பொய்தல் சிறுகுடி வாரல்,நீ ஐய, நலம்வேண்டின்!
2.
ஆய்வினை காத்தும் அருவி அடுக்கத்தெம்
மாசில் சிறுகுடி வாரல்,நீ ஐய, நலம்வேண்டின்!
3.
மென்தினை காத்தும் மிகுபூங் கமழ்சோலைக்
குன்றச் சிறுகுடி வாரல்,நீ ஐய, நலம்வேண்டின்!
[யாப்பருங்கலக் காரிகை - 34 மேற்கோள் பாடல்]
1.
சாதிவெறிப் பித்தேந்திச் சண்டையிடும் இவ்வுலகம்
நீதிநெறி நெஞ்சேந்தி நிம்மதியாய் வாழ்வுபெறல் எந்நாளோ?
2.
பொல்லாச் சமயவெறிப் போர்நடத்தும் இவ்வுலகம்
எல்லாம் ஒருநிலையே என்றெண்ணி வாழ்வுபெறல் எந்நாளோ?
3.
மண்பறித்துக் கூத்தாடும்! புண்ணரித்த இவ்வுலகம்
கண்பறித்துக் கூத்தாடும்! காப்புரிமை வாழ்வுபெறல் எந்நாளோ?
[பாட்டரசர்]
1.
பண்ணெழிலால் பாட்டரசன் பார்புகழைப் பெற்றாலும்
கண்ணெழிலால் வாட்டுகின்ற காரிகையே! காதல் மழைபெழிவாய்!
2.
சீர்க்குழலால் பாட்டரசன் பேரின்பம் பெற்றாலும்
கார்க்குழலால் வாட்டுகின்ற காரிகையே! காதல் மழைபெழிவாய்!
வேலழகால் பாட்டரசன் வெற்றிகளைப் பெற்றாலும்
காலழகால் வாட்டுகின்ற காரிகையே! காதல் மழைபெழிவாய்!
[பாட்டரசர்]
இவை வெண்டளையால் அமைந்த ஈரடிப் பாடல்கள். ஒரே பொருள்மேல் மூன்றடிக்கி வந்த கலியொத்தாழிசை.
முதல் அடியில் நான்கு சீர்கள். இரண்டாம் அடியில் ஐந்து சீர்கள். இரண்டடியும் ஓரெதுகை.
சீர்கள் ஒன்றில் மூன்றில் மோனை. மூன்று பாடல்களிலும் ஈற்றில் மடக்கமையும்.
முதல் பாடலில் ‘புகழ்மினோ வம்மின் புலவீர்காள்’ என்றும்,
இரண்டாம் பாடலில் ‘சிறுகுடி வாரல்,நீ ஐய, நலம்வேண்டின்’ என்றும், மூன்றாம் பாடலில்
‘வாழ்வுபெறல் எந்நாளோ’ என்றும் நான்காம் பாடலில்
‘வாட்டுகின்ற காரிகையே! காதல் மழைபெழிவாய்!’ என்றும் மடக்கு அமைந்தன.
விரும்பிய பொருளில் இவ்வகைக் கலியொத்தாழிசை ஒன்று பாடுபாடு
அன்புடன் வேண்டுகிறேன்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
உலகத் தமிழ்ச் சிறகம்
பாவலர் பயிலங்கம்
15.11.2024