mercredi 10 septembre 2025

வேற்றொலி வெண்டுறை

 


வேற்றொலி வெண்டுறை


கீழடி

 

மூத்த குடியாகும் மொழியுலகத் தாயாகும் கீழடி!

காத்த நற்புகழைக் கணக்காக மறைத்திடுவார்!

ஆத்தாடி துாங்காதே அவர்நம்மைப் புதைத்திடுவார்!

 

நேர்கொண்ட சாலைச் சீர்கொண்ட செந்தமிழின் கீழடி!

வேர்கொண்ட தமிழை விரைந்திங்கு மறைத்திடுவார்!

கார்கொண்ட குழலி! போர்கொண்டு வென்றிடுவோம்!

 

தொன்மை மிக்குடைய துாயதமிழ் மாண்பொளிரும் கீழடி!

வன்மைத் தமிழுடைய வரலாற்றை மறைத்திடுவார்!

நன்மை மனத்தவளே! நம்மொழியைக் காத்திடுவோம்!

 

அலைகடல் அழித்தென்ன? அருந்தமிழின் ஆண்டுரைக்கும் கீழடி!

கொலைவெறி கொண்டுள்ள கொடுங்கொடியர் மறைத்திடுவார்!

கலைவிழிக்  காரிகையே! காத்திடவே முன்னிற்போம்!

 

பண்டைமிகு  தமிழினமே மண்ணில் முதலென்னும் கீழடி!

மண்டைக் கொழுப்புடையோர் வரலாற்றை மறைத்திடுவார்!

கெண்டை விழியழகே! நம்அண்டைப் பகையொழிப்போம்!

 

அன்னைத்தமிழ் மொழியின் முன்னைப் புகழ்சாற்றும் கீழடி!

தன்னைப் பெரிதென்னும் தருக்கர் மறைத்திடுவார்!

பொன்னை நிகர்த்தவளே! இன்றே புறப்படுவோம்!


ஓங்குந்தமிழ் காத்த ஒப்பிற்றமிழ் பூத்த கீழடி!

வீங்கு வெறியுடைய வீணர் மறைத்திடுவார்!

தாங்கு புலிக்கொடியைத் தீமை அகன்றிடுமே!

 

முன்னோர் அடி ஐந்து சீர்களையும் பின்னிரண்டு அடிகள் நான்கு சீர்களையும் பெற்றுச் சிறப்பில்லா ஏழு தளையாலும் வந்த  மூன்றடி வேற்றொலி வெண்டுறை.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

10.09.2025

Aucun commentaire:

Enregistrer un commentaire