dimanche 5 mai 2024

தொழிலாளர் திருநாள்

 

தொழிலாளர் திருநாள் சிந்தனை?

 

காடும் மேடும் வயலாக்கிக்

       கடமை புரிந்த நல்லுழவர்

பாடு பட்டும் பசியேனோ?

       பஞ்சம் வாட்டும் நிலையேனோ?

வீடு காட்டும் மனையாக

       விளையும் வயலை யாக்குவதோ?

நாடும் நாளை உணவின்றி

       நலிந்து குன்றும் உணருகவே!

 

ஒருநாள் கூலிப் பணிசெய்ய

       ஊரில் இல்லை தொழிலாளர்!

வருநாள் தோறும் ஏமாற்றி

       வருவாய் ஈட்டிப் பொய்பேசித்

திருநாள் போலே வாழ்கின்றார்!

       திருடர் வெள்ளை உடைகொண்டார்!

தெருநாய் கூட உணவிற்குத்

       திரிந்து திரிந்து வந்திடுமே!

      

ஊரை நன்றே ஏமாற்றி

       உருவை வளர்க்கும் மனிதர்கள்!

யாரை நாடி நான்சொல்ல

       இனிய மே..நாள் வாழ்த்துக்கள்“!

பாரை மாற்ற யார்வருவார்?

       பசுமை வாழ்வை யார்தருவார்?

கூரை பிய்த்துக் கொட்டுவதாய்க்

       குந்தி வானம் பார்க்கின்றார்!

 

வேலை செய்ய ஆளில்லை!

       வேர்வை சிந்த மனமில்லை!

காலை யாட்டி வீட்டுக்குள்

       கனவு காணும் சோம்பேறி!

சாலை யெங்கும் தரகர்கள்

       சாயம் பூசி நடித்திடுவார்!

காலை யென்ன? இரவென்ன?
       காசே கடவுள் ஆனதடா!

 

காலம் முழுதும் உழைக்காமல்

       கள்ளர் நன்றே வாழ்கின்றார்!

ஞாலம் உழைப்பை மறுப்பதுமேன்?

       நல்லோர் நெறியை வெறுப்பதுமேன்?

பாலம் போடப் பத்தாண்டு!

       பாதை போடப் பத்தாண்டு!

சாலஞ் காட்டித் திரிகின்றார்!

       தமிழர் விழித்தல் எந்நாளோ?

 

ஈயும் உழைக்கும் பூமேலே!

       எறும்பும் உழைக்கும் மண்மேலே!

மேயுங் காளை நன்றாக

       விரைந்தே உழைக்கும் வயல்மேலே!

வாயும் பேசா வாற்குரங்கு

       வந்து வித்தை செய்கிறது!

நாயும் உழைக்கும் வீட்டுக்கு

       நாமேன் உழைக்க மறுக்கின்றோம்?

 

கைக்கண் மாற்றுங் தொழில்பெருகிக்

       காலங் கோல மாறியதே!

மைக்கண் உள்ள கருப்பாக

       மண்டை யிருண்டு போனதுவே!

பைக்கண் பணத்தைக் கண்டவுடன்

       பற்கள் இளித்து வாலாட்டும்!

தைக்கண் கண்ட பசுமையினைத்

       தரணி பெறுதல் எந்நாளோ?

 

கடனே வங்கி உண்ணுவதோ?

       கால்கை பிடித்து வாழுவதோ?

திடமே யின்றிக் கொழுப்பேறித்

       திருத்த மின்றிக் கிடப்பதுவோ?

முடமே யுள்ளம் அடைவதுவோ?

       முடங்கி முடங்கி இருப்பதுவோ?

புடமே போட்டால் பொன்னொளிரும்!

       புவியே உழைப்பால் பொலிவுபெறும்!

 

உழைப்பே யின்றி உயர்வடைய

       உறங்கிக் கிடக்கும் உலகம்..கேள்!

அழைப்பே யின்றிக் காற்றுவரும்!

       அழகாய் முளைத்து நாற்றுவரும்!

பிழைப்பே யின்றிக் கல்லாகப்

       பிறப்பைக் கழித்தல் பேரிழிவு!

விழைப்பே யின்றித் துாங்காதே!

       வீணே யாகி ஏங்காதே!

 

பணத்தை யீட்டும் தொழிலாகப்

       பாரில் ஆகும் அரசியலே!

மணத்தை வீசி வலையிடுவார்!

       வாக்குக் கேட்டுப் பொருள்தருவார்!

குணத்தை இழந்த மனிதர்கள்

       கொள்கை யின்றித் தாவிடுவார்!

பிணத்தை யெரிக்கும் சுடுகாட்டில்

       பெருகிச் சுழலும் கையூட்டே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

01.5.2024

 

செகவான் சிறப்புப் பாயிரம்

 

கவிஞர் செகவான் படைத்த  

விருத்தமாயிரம் நுாலுக்குச்

சிறப்புப் பாயிரம்

 

கொடிமீன் பறக்குங் கூடற் றமிழால்

அடித்..தேன் சுரக்கும் அருமைக் கவிஞர்!

உழவுத் தொழிலை உயிராய்ப் போற்றி

ஒழுகும் குடியில் உதித்த சீலர்! 

வில்லி புத்துார்க் கல்விக் கூடம்

அள்ளி யளித்த அமுதப் பாடம்

தந்த திறனால் தகைசேர் பணியால்

முந்து புகழில் முகிழ்த்த வீரர்!

கண்துறை மருத்துவங் கற்றுச் சிறந்து

பண்துறை யாப்பைப் பாடிப் பயின்று

பாவலர் மணியாய்ப் பட்டம் பெற்று

நாவலர் போற்றும் நற்புகழ் பெற்றார்!

பாட்டின் அரசன் பாரதி தாசன்

காட்டிய நெறியில் தீட்டிய கவிகள்

விருத்த மாயிரம் வியன்பெயர் சூடிப்

பொருத்த மாகப் பொலியும் இந்நுால்!

ஈடில் கம்பன் எழுதிய வழியில் 

சூடிய படையல்! தொன்மைப் புதையல்!

மன்னர் வாழ்வை மரத்தின் வாழ்வைத்

தன்னுள் கொண்டு  தழைத்த சுவடி
ஆண்ட தமிழின் அழகைக் கூறும்!

நீண்ட மரத்தின் நிலையைச் சொல்லும்!

ஆசான் கேட்க அளித்த ஏடு

வாச மலராய் மணத்தை வழங்கும்!

பாவலர் பயிலும் பைந்தமிழ் அரங்கில்

காவலர் பலர்முன் களமே யேறி

யாப்பின் நுட்பம் யாவும் மீட்டித்

தோப்பின் கனியாய்ச் சுவையைக் கூட்டிக்

கற்றோர் வாழ்த்தக் கனிந்த யாக்கம்!

பற்றுடன் மொழியைப் பாது காக்கும்!  

இருமுறை ஆயிரம் இணையும் ஐம்பது

ஒருமுறை ஐந்தாம் ஒண்குறள் ஆண்டில்

பாரதம் என்னும் பழம்பெரு நாட்டில்

தேருலாச் செல்லும் செந்தமிழ்த் தாயின்

முகமே இமயம்! முக்கடல் சூழும்!

அகமே அறத்தின் ஆலய மாகும்!

மரபைக் கற்கும் மாணவர்க் கெல்லாம்

உரமே யாகி உயர்வைக் கொடுக்கச்

செகவான் என்ற செம்பெயர் புனைந்தே  

அகவான் ஒளிர அளித்தார் நுாலே!

கவி.சு. செல்வக் கடுங்கோ வாழியார்

புவியே போற்றும் புலமை பொலிகவே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம் - பிரான்சு,

உலகத் தமிழ்ச் சிறகம்,

தொல்காப்பியர் கழகம் - பிரான்சு,

பாவலர் பயிலரங்கம் - பிரான்சு.

01.05.2024

 

சாற்றுகவி

 

கலைமாமணி கோ. கலியபெருமாள் எழுதிய

விருத்தமாயிரம் நுாலுக்குச்

சாற்றுகவி

 

கலைமா மணியார்! கனிவுடைக்..கோ

         கலிய பெருமாள்! தமிழ்த்தொண்டர்!

மலைமாங் கனியாய்ச் சுவையூற

         வடித்த இந்நுால் கவிக்கோட்டை!

சிலைமா வடிவாய்ச் சீர்மின்னும்!

         செம்மைத் தமிழால் ஊர்மின்னும்!

அலைமாக் கடலாய்ப் பொருளாழம்!

         ஆகா படித்து மகிழ்ந்தேனே!

 

கடமை மறவர்! திறனுடைக்..கோ

         கலிய பெருமாள்!  நற்கவிஞர்!

உடைமை உரிமை நெறியேந்தி

         உலகம் வாழக் கவிசெய்தார்!

அடிமைப் போக்கு நீங்கிடவும்

         அறிவாம் ஆற்றல் ஓங்கிடவும்

குடிமை யன்பைத் தாங்கிடவும்

         கொள்கை யூட்டும் இந்நுாலே!

 

கம்பன் இளங்கோ மரபில்..கோ

         கலிய பெருமாள் யாப்புற்றார்!

அம்மன் அருளை அகங்கொண்டார்!

         அல்லும் பகலும் தமிழ்கற்றார்!

எம்மண் புலவர் போற்றிடவே

         என்றும் எழுதிப் புகழ்பெற்றார்!

செம்பொன் னாக இந்நுாலைச்

         செய்தார் வாழ்க பல்லாண்டே!

 

 

கன்னல் புதுவை நகரின்..கோ

         கலிய பெருமாள்! தமிழ்நெஞ்சர்!

இன்னல் இல்லா வுலகத்தை

         இயற்கை செழிக்கும் இன்பத்தைப்

பின்னல் சரமாய் மனிதத்தைப்

         பேணிப் படைத்தார் விருத்தங்கள்!

உன்னல் யாவும் உயர்வென்பேன்

         ஓதும் உள்ளம் ஒளிபெறுமே!

 

கருணை கமழும் மனத்தர்..கோ

         கலிய பெருமாள்! கவிப்பித்தர்!

அருணை கமழும் எண்ணத்தால்

         அமுதக் கவிகள் படைத்திட்டார்!

சுருணை கமழும் அழகாகச்

         சொற்கள் சுழலும்! தேன்பொழியும்!

வருணை யம்மன் திருவாருளால்

         வடித்த இந்நுால் தமிழ்மழையே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம் - பிரான்சு,

உலகத் தமிழ்ச் சிறகம்,

தொல்காப்பியர் கழகம் - பிரான்சு,

பாவலர் பயிலரங்கம் - பிரான்சு.

05.05.2024