பாவலர்மணி திருமகள் எழுதிய
திருவருள் இயேசு அந்தாதி நுாலுக்குச்
சாற்றுகவி
கருணைக் கடலாம் இயேசுபிரான்
கால்கள் சென்ற பாதையினைப்
பொருநை நீர்போல் சொல்பாயப்
புனைந்த பொன்னார் அந்தாதி!
உரு..நெய் யாக உருகிடவே
உரைத்தார் பாக்கள் திருமகளார்!
திருநெய் யூற்றி விளக்கேற்றித்
தினமும் படித்தால் உலகுயரும்!
அன்பின் கடலாம் இயேசுபிரான்
அளித்த அமுத நெறிகளையே
தன்பின் வருவோர் கற்றிடவே
தந்த இந்த அந்தாதி
பொன்மின் மணியாய் எழின்மேவப்
புனைந்தார் எங்கள் திருமகளார்!
முன்பின் தொடர்ச்சி மிகவருமை!
முன்னைத் தமிழின் தனிப்பெருமை!
அறத்தின் கடலாம் இயேசுபிரான்
அகிலம் வாழ்ந்த வரலாற்றை
மறத்தின் தமிழால் வடித்திட்ட
மாட்சி மிக்க அந்தாதி
புறத்தின் புகழ்சேர் ஈழத்தின்
புலமை காட்டும்! திருமகளார்
திறத்தின் உயர்வை வாழ்த்துகிறேன்!
திசைகள் போற்ற வாழியவே!
உண்மைக் கடலாம் இயேசுபிரான்
உடலில் தரித்த ஆணிகளை
தண்மைக் கடலாம் தமிழ்மொழியில்
தழைத்த தகைசேர் அந்தாதி
வண்மைக் கடலாம்! மலர்வனமாம்!
மண்ணே செழிக்கும் மறையொளியாம்!
கண்..மைக் கடலாம் துயர்நீக்கும்!
கருத்துள் இறையின் ஒளியேற்றும்!
ஈகைக் கடலாம் இயேசுபிரான்
இம்மண் உதித்த காதையினை
தோகை விரித்த பேரழகாத்
தொடுத்த துாய அந்தாதி
வாகை சூடும் வண்ணத்தில்
வடித்தார் வண்ணத் திருமகளார்!
ஓகை யுற்று வாழ்த்துகிறேன்
உயர்ந்து வாழ்க பல்லாண்டு!
பாசக் கடலாம் இயேசுபிரான்
பார்வை யளித்த பேரொளியை
வாசத் தமிழில் எடுத்தோதி
மனத்தை மயக்கும் அந்தாதி
நேச வாழ்வின் வழிகூறும்!
நெஞ்ச மினிக்கும் மொழிகூறும்!
பேசப் பேசச் சுவையூறும்!
பெருமை பெற்றார் திருமகளார்!
துாய்மைக் கடலாம் இயேசுபிரான்
சுமந்த சிலுவைப் பாரத்தை
வாய்மைக் கடலாம் வளர்தமிழில்
வடித்த வளஞ்சேர் அந்தாதி
காய்மைக் குணத்தை யோட்டிடுமே!
கடவுள் மனத்தைக் காட்டிடுமே!
தாய்மைத் தலைவன் திருவருளால்
தழைத்து வாழ்க திருமகளார்!
கன்னல் கடலாம் இயேசுபிரான்
காற்றை மழையை யாட்கொண்டே
இன்னல் போக்கி உயிர்காத்த
எழிலை போற்றும் அந்தாதி
பின்னல் மலர்போல் மணம்வீசும்!
பிணிகள் போக்கி நலம்பேசும்!
மின்னல் என்ன? தமிழொளியால்
விஞ்சும் இந்நுால் வாழியவே!
அருளின் கடலாம் இயேசுபிரான்
அலைமேல் நடந்த காட்சியினைப்
பொருளின் கடலாம் பூந்தமிழில்
புனைந்த புகழ்சேர் அந்தாதி
கருவின் கடலாம் நம்வாழ்வைக்
காத்துக் கரைமேல் ஏற்றிடுமே!
திருவின் கடலாம் இன்பத்துள்
திளைக்கும் இந்நுால் வாழியவே!
ஞானக் கடலாம் இயேசுபிரான்
நமக்குத் தந்த செய்திகளை
மானக் கடலாம் வண்டமிழில்
வடித்த இந்த அந்தாதி
மோனக் கடலாம் இன்பத்துள்
முழுகித் திளைக்க வழிகாட்டும்!
கானக் கடலாம் பாட்டரசன்
கற்றுக் களித்து வாழ்த்துகிறேன்!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு,
உலகத் தமிழ்ச் சிறகம்,
தொல்காப்பியர் கழகம் - பிரான்சு,
பாவலர் பயிலரங்கம் - பிரான்சு.
21.06.2024