samedi 21 septembre 2024
dimanche 15 septembre 2024
கவிக்கோ துரை. வசந்தராசனார்
கவிக்கோ துரை. வசந்தராசனார்
71 ஆம் அகவை வாழ்த்து
பல்லாண்டு வாழ்க!
வண்ணத் தமிழ்காக்கும் பண்ணைத் திருவூரார்
எண்ண மனைத்தும் இனிப்பாகும்! - அண்ணாவின்
பொன்னெறி போற்றும் புகழ்ப்புலவர் வாழியவே
இன்னெறி யாவும் இசைத்து!
துாய கவிக்கோ துரைவசந்த ராசனார்
நேய மனத்துள் நிறைந்திருக்கும் - தாயன்பு!
பாட்டரசன் பாடுகிறேன் பல்லாண்டு! காண்கவே
நாட்டரசர் சூட்டும் நலம்!
விந்தைமிகு சந்தம் விளையாடும்! எந்நாளும்
சிந்தைமிகு வண்ணம் செழித்தாடும்! - செந்தமிழின்
தொண்டர் கவிக்கோ துரைவசந்த ராசனார்
கண்டார் கவிதைக் களம்!
பகுத்தாறிவு வாழ்வும், படிப்பகமும் கொண்டு
தொகுத்தறிவு தந்தார் தொடர்ந்து - மிகுத்தபுகழ்
தோற்றும் கவிக்கோ துரைவசந்த ராசனார்
ஆற்றும் பணியே அழகு!
வாழ்க வளத்துடனே! வண்டமிழ்ச் சீருடனே!
சூழ்க நிறைந்து நலமெல்லாம்! - ஏழ்பிறப்பும்
தொன்மைக் கவிக்கோ துரைவசந்த ராசனார்
நன்மை புரிவார் நமக்கு!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம், பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
உலகத் தமிழ்ச் சிறகம்
பாவலர் பயிலரங்கம், பிரான்சு
15.09.2024
samedi 7 septembre 2024
யானைமுகன் வெண்பா
யானை முகத்தனை வேண்டுதல்!
முன்னே இருந்து முழுநலம் தந்துவக்கும்
பொன்னே! புதுத்தேனே! பூமணமே! - என்னே..யுன்
இன்னருள்! இங்கு..நீ என்னை மறந்ததுமேன்?
வன்னிருள் போக்கவே வா!
எலியுடை வானத்தை இன்றுடன் மாற்று!
புலியுடை வாகனம் போதும்! - உளியுடன்
வந்து வினையொழிப்பாய்! என்னை மறந்ததுமேன்?
நொந்து கிடக்குமெனை நோக்கு!
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் படைத்திட்டேன் நானுனக்கு! - நுாலுமே
இ்ங்கு வடித்திட்டேன்! என்னை மறந்ததுமேன்?
தொங்கு கரங்கொண்டு துாக்கு!
வங்கக் கடலருகே வாழ்கின்ற வள்ளலே!
தங்கத் தமிழிட்டுத் தாழ்பணிந்தேன்! - செங்கதிராய்
எங்கும் ஒளிர்கின்றாய்! என்னை மறந்ததுமேன்?
தங்குந் துயர்போக்கித் தாங்கு!
யானை யுருக்கொண்டாய்! பானை வயிறுற்றாய்!
மோனைத் தொடையாக முன்னின்றாய்! - பூனையென
இங்[கி]யான் சுழல்கின்றேன்! என்னை மறந்ததுமேன்?
மங்கிய என்மனம் மாற்று!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம், பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
உலகத் தமிழ்ச் சிறகம்
பாவலர் பயிலரங்கம், பிரான்சு
07.09.2024
mercredi 4 septembre 2024
பைந்தமிழ்ப் பாமணி
பைந்தமிழ்ப்பாமணி
சரசுவதி பாற்கரனார் பிறந்தநாள் வாழ்த்து
தண்மனங் கொண்ட சரசுவதி பாற்கரனார்
பண்மனங் கொண்ட பழச்சுவையார்! - விண்மனங்
கண்டு வியந்து கவிதந்தேன்! பைந்தமிழைக்
கொண்டு செழிக்குங் குலம்!
தாலாட்டும் தாய்போல் சரசுவதி பாற்கரனார்
நுாலுாட்டும் மேன்மை நுவன்றிடுவார்! - மாலுாட்டும்
ஞான வழியுடையார்! நற்றேன் மொழியுடையார்!
மானத் தமிழ்கொண்டு வாழ்த்து!
தம்மை நினையாச் சரசுவதி பாற்கரனார்
செம்மைப் பணியாற்றும் சீருடையார்! - அம்மை
திருவருள் சூழ்க! செழித்தபுகழ் காண்க!
அரும்பொருள் வாழ்வை அணிந்து!
தாவிவரும் வண்ணம் சரசுவதி பாற்கரனார்
மேவிவரும் பாக்கள் வியப்பூட்டும்! - தேவியருள்
பெற்ற பெரும்புலமை! பேறுகள் பதினாறும்
உற்று மகிழ்க உயர்ந்து!
தங்க மனத்துச் சரசுவதி பாற்கரனார்
எங்கும் தமிழை யிசைக்கின்றார்! - வங்க
அலையென அன்புறும் ஆழகத்துள் என்றும்
நிலையென வாழும் நிறை!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம், பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
உலகத் தமிழ்ச் சிறகம்
பாவலர் பயிலரங்கம், பிரான்சு