vendredi 21 novembre 2025

ஓம் ஓம் ஓம்

 


ஓம்.. ஓம்.. ஓம்

 

கலமுடைந்[து] ஆழ்கடலில் கத்துகிறேன்! என்மெய்

பலமுடைந்து சோர்ந்தேன்! பரமன் - அலையுடைந்து

சென்றதுபோல் பாதை தெரிந்திடுமே! ஓம்..ஓம்..ஓம்..

என்றதுமே நீங்கும் இடர்!

 

காக்கும் வழியின்றிக் கத்துகிறேன்! முன்வினைகள்

தாக்கும்! துணையின்றித் தத்துகிறேன்! - வாக்கற்ற

கோது..மன நீங்கிக் குளிர்ந்திடுமே! ஓம்..ஓம்..ஓம்..

ஓதுமனம் காணும் ஒளி! 

 

பொய்யர் உறவால் புழுங்கி மனநொந்தேன்!

மெய்யர் எதிர்ப்பால் மெலிவுற்றேன்! - உய்வின்றி

வாழ்ந்த நிலைமாறும்! வாய்..மனம் ஓம்..ஓம்..ஓம்..

ஆழ்ந்த ஒளியால் அறி!

 

திருடும் தொழிலுற்றுச் சேர்த்த வளங்கள்

உருளும்! உனையுருட்டும்! உள்ளம் - கருகுதுயர்

முற்றும் ஒழிய மொழிந்திடுவாய் ஓம்..ஓம்..ஓம்..

பற்றும் பரம பதம்!

 

அடியாள் பலர்கொண்டே ஆடிய ஆட்டம்

இடியாய் விழும்நம் மிடமே! - படிபடியாய்

வந்த வினைநீங்கும்! வாய்திறந்[து] ஓம்..ஓம்..ஓம்..

தந்த ஒலியே தவம்!

 

பட்ட அடியென்ன? நட்ட வினையென்ன?

சுட்ட நெருப்பென்ன? துன்பென்ன? - இட்டவென்

ஆணைத் திமிரென்ன? அத்தனையும் ஓம்..ஓம்..ஓம்..

ஆனை முகனே அகற்று!

 

வறுமை வதைப்பட்டு வாழ்வுநிலை கெட்டுக்

கருமை மனமுற்றுக் காய்ந்தேன்! - ஒருமை

உளங்கொண்டு பாடுகிறேன் உன்னை!ஓம்.. ஓம்..ஓம்..

வளங்கொண்டு ஞானம் வழங்கு!

 

பாட்டரசா வென்று பழித்திடுவார்! வீண்வெற்று

வேட்டரசா வென்று வெறுத்திடுவார்! - நாட்டரசா!

ஏட்டரசா! உன்முன் இரங்குகிறேன்! ஓம்..ஓம்..ஓம்..

வீட்டரசா தீராய் வினை!

 

நாடி நலிவுற்றேன்! நம்பிப் பறிபோனேன்!

கூடிக் குணங்கெட்டேன்! குன்றினேன்! - வாடியே

நிற்கின்றேன்! அத்தனையும்  நீக்கிடுவாய்! ஓம்..ஓம்..ஓம்..

கற்கின்றேன் உள்ளம் கனிந்து!

 

ஆசையலை சிக்கி அழிவுற்றேன்! நெஞ்சத்துள்

வேசையலை சிக்கி வினையுற்றேன்!- மாசெல்லாம்

தங்கும் அகமுற்றேன்! தாழ்வுற்றேன்! ஓம்..ஓம்..ஓம்..

தொங்குங் கரங்கொண்டு துாக்கு!

 

எங்குக் குறைவிட்டேன்? என்ன பிழைவிட்டேன்?

இங்குச் சுழலும் எதிர்ப்பலைகள்! - தங்கு

தடையின்றித் தண்டமிழைத் தாராய்!ஓம்.. ஓம்..ஓம்..

இடையின்றி வேண்டும் எழுத்து!

 

அம்மைத் தமிழ்கொண்டு தும்பை மலரிட்டேன்!

வெம்மை வினைகளை வேரறுப்பாய்! - மும்மை

மலம்போக்கிக் காத்திடுவாய்! வாழ்வில்..ஓம் ஓம்..ஓம்..

நலந்தேக்கி ஞானம் நவில்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு.

27.08.2025

dimanche 12 octobre 2025

கம்பன் விழா 2025

 

இருபத்து நான்காம் ஆண்டு
பிரான்சு கம்பன் விழாப் பாட்டரங்கம்


தமிழ் வணக்கம்

 

மனமோங்கு தமிழே..உன் இனமோங்கு கவிபாட

          மலர்ஊறும் தேனள்ளி யூட்டு - உன்

          மடியேந்தி மகனைத்தா லாட்டு!

மதியோங்கு தமிழே..உன் நதியோங்கு கவிபாட

          மத்தாப்பு வண்ணங்கள் காட்டு! - பொன்

          மகரத்து யாழ்கொண்டு மீட்டு!

 

தினமோங்கு தமிழே..உன் திணையோங்கு கவிபாடச்

          தித்திக்கும் வித்தள்ளிக் கூட்டு! - மின்னும்

          சிங்கார அணியள்ளிச் சூட்டு!

சீரோங்கு தமிழே..உன் பேரோங்கு கவிபாடச்

          சிந்தைக்குள் சந்தத்தைக் கூட்டு! - தான

          தந்தான தாளங்கள் போட்டு!

 

வனமோங்கு தமிழே..உன் வளமோங்கு கவிபாட

          மானாக மயிலாகத் தீட்டு! - இந்த

          மன்றத்துள் இன்பத்தை மூட்டு!

மகிழ்வோங்கு தமிழே..உன் அகமோங்கு கவிபாட

          வார்த்தைக்குள் இன்பத்தை நீட்டு! - பெரு

          மலையாகப் புகழள்ளி நாட்டு!

 

பனியோங்கு தமிழே..உன் கனியோங்கு கவிபாடப்

          படர்கின்ற வண்ணத்தைத் தீட்டு! - வருக

          பறந்தோடி என்சொல்லைக் கேட்டு!

பாட்டுக்கே அரசாக்கி நாட்டுக்கே உரமாக்கிப்

          பாசத்தால் என்னைச்பா ராட்டு! -  தாயே

          பணிகின்றேன் உன்னைச்..சீ ராட்டு!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

28.10.2025

samedi 13 septembre 2025

கம்பன் விழா

 


கம்பன் கழகம் பிரான்சு

24 ஆம் ஆண்டுத்

தெய்வமாக்கவி 

கம்பன் விழா


இடம்:

Le Gymnase Victor Hugo

rue  Auguste Renoir

95140 Garges les Gonesse

France


நாள்:

28/09/2025
ஞாயிறு 15.00 மணிமுதல் 20.30 மணிவரை

அனைவரும் வருகவே! அருந்தமிழ் பருகவே!

 

jeudi 11 septembre 2025

ஓரொலி வெண்டுறை



ஓரொலி வெண்டுறை
 
அரசியலார்!
 

ஊழல் முதலைகளை உளமாரப் பாடி உவக்கும் புலவர்

சூழல் அனைத்தையும் சுருட்டுகின்ற தலைவ தம்மால்

ஏழை  துயர்நீங்க எள்ளளவும் வழியுண்டோ?

 

பூட்டியுள வீட்டைப் பொறிக்கிகள் தாம்கொண்டு சொந்த மாக்கி

நாட்டியுள சொத்து நாலிரு தலைமுறைக்கு வருமே! இவர்கள்

நாட்டிலுள வஞ்ச நரியெனச் சாற்றுகவே!

 

அடியாள் கொண்டாச்சி நடத்துவதா? அன்பின்றிக் கூர்மைக் கத்தி

தடியால் கொண்டாச்சி தள்ளுவதா? துடிதுடிக்க அழிவே நல்கும்

வெடியால் கொண்டாச்சி  மிரட்டுவதா? என்னாடே!

 

தலைவனின் இருதாள்கள் தழுவி நக்குகின்ற தொண்டன் தானே
கொலையனின் மிகுகொடியன்! கொள்ளை யிடுகின்ற கள்ளன்! பதவி
விலையனின் அடிவேரை வெட்டி வீழ்த்துகவே!


கால்நக்கிப் பதவி பெறுகின்ற கட்சித் தலைவன்! பத்தி

வேல்நக்கிப் பதவி பெறுகின்ற வெற்றுத் தொண்டன்! பணத்தில்

மேல்நக்கிப் பதவி விளைகின்ற என்னாடே!

 

மாடேயிலா நிலைமைக்கும்,  மனையேயிலா வீட்டுக்கும்

கடன்தருவார்! விளையும்

காடேயிலா உழவுக்கும், கடையேயிலாத் தொழிலிக்கும் 

கடன்தருவார்! சின்ன

ஏடேயிலாக் கணக்கெழுதி ஏப்பமிடும் என்னாடே!

 

நாட்டுப்பணம் என்ன? நல்லோர் பணமென்ன? நம்பித் தந்த  

காட்டுப்பணம் என்ன? கண்ணீர்ப் பணமென்ன? ஆட்டை போட்டு

வீட்டுப்பணம் ஆக்கும் விந்தை நாடிதுவே! 

 
முன்னே ஈரடிகள் ஆறு சீர்களையும் பின்னோர் அடி நான்கு சீர்களையும் பெற்றுச் சிறப்பில்லா  ஏழு தளையாலும் வந்த ஓரொலி வெண்டுறை.
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு
உலகத் தமிழ்ச் சிறகம்
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
பாவலர் பயிலரங்கம், பிரான்சு.
11.09.2025