dimanche 28 juillet 2024

செந்தமிழாழன்

 


சேந்தன்குடிச் செந்தமிழாழன் எழுதிய

விருத்தமாயிரம் நுாலுக்குச்

சிறப்புப் பாயிரம்

 

அன்புப் பாட்டி ஆவிடைப் பொட்டம்மாள்

நன்கு வளர்த்த நற்குடி மக்கள்

பசுந்தங் கையனும் பத்மா வதியும்

இசையுடன் இனித்த இல்லற வாழ்வில்

முன்னே பிறந்த முத்தமிழ் மைந்தன்

தன்னே ரில்லாத் தண்டமிழ்த் தொண்டன்!

சேந்தன் குடியின் சிறப்பை யேந்திக்

காந்த விசையாய்க் கவருங் கவிஞன்!

செந்தமி ழாழன் சீர்பெயர் ஏற்றுச்

சந்தம் சிந்து வண்ணம் பாடும்

புலமை மின்னும் புதுமை நெஞ்சன்!

வலிமை மிக்க மரபின் செல்வன்!

கணிதங் கற்ற முத்து லட்சுமி

மணந்து மலர்ந்த வந்தனா ஆசினி,

பால சதுர்த்தியன் பாசப் பொழிவில்

கால மினிக்க ஞாலஞ் சிறக்க

ஓதுந் தொழிலை உயிரெனக் கொண்டு 

மாதுறை பாகனை மனத்துள் கண்டு     

விருத்த மாயிரம் வியன்புகழ் நுாலைப்

பொருத்த மாகப் புனைந்த புலவன்! 

சிந்தா மணியும் சிலம்பும் வில்லும்

நந்தா விளக்காம் நற்றிரு முறைகளும்

காட்டி நெறியுள் தீட்டிய இந்நுால்

நாட்டின் நிலையை நன்றே நவிலும்!

அடிமை வாழ்வை அடியோ டகற்றும்!

குடிமை செழிக்கக் கொள்கை புகட்டும்!

மனிதம் படைக்கும்! மதவெறி உடைக்கும்!

கனிமிகு காடாய்க் கவிதை கமழும்!

முகநுால் அரங்கில் முன்னே நடக்கும்

அகநுால் புறநுால் அணிநுால் உரைக்கும்

பாட்டின் அரசன் பாரதி தாசன்

நாட்டிய அரங்கம்! நற்றேன் தரங்கம்!

பாவலர் பயிலும் பண்ணருள் சுரங்கம்!

நாவலர் போற்ற நற்கவி இயம்பும்!

என்றன் மொழியை ஏற்றங்[கு] அளித்த

இன்னுால் இந்நுால்! ஈடில் பொன்னுால்!

உலக மெங்கும் உயர்ந்த தமிழர்

குலவுந் தமிழைக் கொஞ்சிக் களிப்பதால்

ஊரின் எல்லை உயிர்நாட் டெல்லை

பேருக் குரைத்தல் பெருமை யன்று!

தமிழின் எல்லை தரணி யாகும்!

அமுதின் எல்லை தமிழே யாகும்!

இருமுறை ஆயிரம் ஒருமுறை ஐம்பது

திருநிறை ஐந்து சேர்ந்த ஆண்டு

வள்ளுவர் பெயரை வாழ்த்தி வழங்கும்!

உள்ளுந் தமிழை ஓங்கி முழங்கும்!

குயிலுடைப் புலவனும் குளிர்ந்த தமிழ்மேல்

உயிருடை வேந்தனும் உலவிய கவியூர்!

சாலை யழகும் சோலை யழகும்

காலை யழகும் ஆலை யழகும்

கொண்ட புதுவையில் கூத்தும் பாட்டும்

கண்ட அரங்கில் கற்றோர் முன்னே

களமே புகுந்தும் வளமே அளந்தும்

உளமே நிறைந்தும் ஒளிர்ந்த இந்நுால்

மரபைக் காக்கும் அரணாய் இருக்கும்!

வரமாய் நமக்கு வழங்கும் நலமே!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம், பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

28.07.2024

28.07.2024

பாவலர்மணி இராம. வேல்முருகன்

 


தமிழ்ச்செம்மல், பாவலர்மணி

வலங்கைமான் இராம. வேல்முருகன் எழுதிய

விருத்தமாயிரம் நுாலுக்குச்

சாற்றுகவி

 

பாட்டரசர் பயிலரங்கில் விருத்தப் பாக்கள்

         பளபளக்க ஆயிரத்தைப் படைத்தார்! வல்ல

ஏட்டரசர் இராம.வேல் முருகர்! ஈடில்

         எழில்தஞ்சைப் புகழ்பாடும் இனியர்! அஞ்சாக்

காட்டரசர் அரிமாபோல் மேடை தன்னில்

         காட்சிதரும் மாமறவர்! முன்னை வாழ்ந்த

நாட்டரசர் போலிங்குத் தமிழைக் காக்க

         நாடோறும் பணிபுரிந்தார்! வாழ்த்து கின்றேன்!

 

பகலென்ன இரவென்ன எழுத்து வேலை

         பயன்கருதா நோக்கமுடன் செய்தார்! வண்ணப்

புகழ்மின்ன இராம.வேல் முருகர் இப்பார்

         புரட்டுகின்ற விருத்தங்கள் நெய்தார்! வாழ்வின்

நிகரென்ன நிறையென்ன நன்றே ஆய்ந்து

         நிலமோங்க நல்வழிகள் சொன்னார்! போற்றும்

அகமின்னப் புறமின்ன அளித்த பாக்கள்

         அமுதன்ன சுவையூட்டும்! வாழ்த்து கின்றேன்!

 

முகநுாலில் தமிழ்வளர்க்குந் தொண்டால், என்றன்

         அகநுாலில் பதிவான மொழியின் செல்வர்!

தகைநுாலில் இராம.வேல் முருகர் நற்பேர்

         தழைத்தோங்கும்! தனித்தோங்கும்! தமிழே யோங்கும்!

தொகைநுாலில் மனமொன்றி நன்றே கற்றுத்

         தொடர்நுால்கள் படைக்கின்ற ஆற்ற லோங்கும்!  

பகைநுாலில் அருஞ்சீர்கள் இருக்கு மென்றால்

         பாராட்டுங் குணமோங்கும்! வாழ்த்து கின்றேன்!

 

 என்செய்வார் எதுசெய்வார் எண்ணும் முன்னே

         இனிக்கின்ற விழாச்செய்வார்! பாடும் பாட்டுள்

பொன்செய்வார்! பொழில்செய்வார்! புதுமை செய்வார்!

         புதுக்கவிஞர் வளர்ந்திடவே வழிகள் செய்வார்!

முன்செய்வார் பின்செய்வார்! நலமே செய்வார்!

         முத்தமிழே மணக்கின்ற தொண்டே செய்வார்!

மின்செய்வார் எழுத்துக்குள்! உலகே பாட

         விண்செய்வார் பண்ணுக்குள்! வாழ்த்து கின்றேன்!

 

மண்செழிக்கும் தஞ்சையிலே மரபைக் காத்துப்

         பண்செழிக்கும் பணிகொண்டார்! பண்பே பூண்டார்!

தண்செழிக்கும் இராம.வேல் முருகர் வாழ்வில்

         தமிழ்செழிக்கும்! தகைசெழிக்கும்!  கற்றுக் கற்றுக்

கண்செழிக்கும்! கவிசெழிக்கும்! கால மெல்லாங்

         கற்றோரின் கனிவாழ்த்துச் செழிக்கும்! வெற்றி

எண்செழிக்கும் வண்ணத்தில் புகழாம் நற்றேர்

         எண்டிசையும் ஆளட்டும்! வாழ்த்து கின்றேன்!

 

 பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம் - பிரான்சு

உலகத் தமிழ்ச் சிறகம்

தொல்காப்பியர் கழகம் - பிரான்சு.

பாவலர் பயிலரங்கம் - பிரான்சு

28.07.2024