samedi 13 septembre 2025

கம்பன் விழா

 


கம்பன் கழகம் பிரான்சு

24 ஆம் ஆண்டுத்

தெய்வமாக்கவி 

கம்பன் விழா


இடம்:

Le Gymnase Victor Hugo

rue  Auguste Renoir

95140 Garges les Gonesse

France


நாள்:

28/09/2025
ஞாயிறு 15.00 மணிமுதல் 20.30 மணிவரை

அனைவரும் வருகவே! அருந்தமிழ் பருகவே!

 

jeudi 11 septembre 2025

ஓரொலி வெண்டுறை



ஓரொலி வெண்டுறை
 
அரசியலார்!
 

ஊழல் முதலைகளை உளமாரப் பாடி உவக்கும் புலவர்

சூழல் அனைத்தையும் சுருட்டுகின்ற தலைவ தம்மால்

ஏழை  துயர்நீங்க எள்ளளவும் வழியுண்டோ?

 

பூட்டியுள வீட்டைப் பொறிக்கிகள் தாம்கொண்டு சொந்த மாக்கி

நாட்டியுள சொத்து நாலிரு தலைமுறைக்கு வருமே! இவர்கள்

நாட்டிலுள வஞ்ச நரியெனச் சாற்றுகவே!

 

அடியாள் கொண்டாச்சி நடத்துவதா? அன்பின்றிக் கூர்மைக் கத்தி

தடியால் கொண்டாச்சி தள்ளுவதா? துடிதுடிக்க அழிவே நல்கும்

வெடியால் கொண்டாச்சி  மிரட்டுவதா? என்னாடே!

 

தலைவனின் இருதாள்கள் தழுவி நக்குகின்ற தொண்டன் தானே
கொலையனின் மிகுகொடியன்! கொள்ளை யிடுகின்ற கள்ளன்! பதவி
விலையனின் அடிவேரை வெட்டி வீழ்த்துகவே!


கால்நக்கிப் பதவி பெறுகின்ற கட்சித் தலைவன்! பத்தி

வேல்நக்கிப் பதவி பெறுகின்ற வெற்றுத் தொண்டன்! பணத்தில்

மேல்நக்கிப் பதவி விளைகின்ற என்னாடே!

 

மாடேயிலா நிலைமைக்கும்,  மனையேயிலா வீட்டுக்கும்

கடன்தருவார்! விளையும்

காடேயிலா உழவுக்கும், கடையேயிலாத் தொழிலிக்கும் 

கடன்தருவார்! சின்ன

ஏடேயிலாக் கணக்கெழுதி ஏப்பமிடும் என்னாடே!

 

நாட்டுப்பணம் என்ன? நல்லோர் பணமென்ன? நம்பித் தந்த  

காட்டுப்பணம் என்ன? கண்ணீர்ப் பணமென்ன? ஆட்டை போட்டு

வீட்டுப்பணம் ஆக்கும் விந்தை நாடிதுவே! 

 
முன்னே ஈரடிகள் ஆறு சீர்களையும் பின்னோர் அடி நான்கு சீர்களையும் பெற்றுச் சிறப்பில்லா  ஏழு தளையாலும் வந்த ஓரொலி வெண்டுறை.
 
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் - பிரான்சு
உலகத் தமிழ்ச் சிறகம்
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
பாவலர் பயிலரங்கம், பிரான்சு.
11.09.2025

mercredi 10 septembre 2025

ஓரொலி வெண்டுறை

 


ஓரொலி வெண்டுறை

 

அடிமை மனிதன்!

 

அயலார் மொழியைப் போற்றிடுவான்!

……….அல்லும் பகலும் கற்றிடுவான்!

உயிராம் தமிழை மறந்திடுவான்!

……….உலகில் தன்னைப் புகழ்ந்திடுவான்!

புயலார் கடலே பொங்கு!

 

மையூட்டு மங்கையரின்

……….மார்பூட்டு மின்பத்தில் மயங்குந் தலைவன்!

கையூட்டுஞ் செல்வத்துள்

……….கலையூட்டும் பெருமனையிற் களிக்குந் தலைவன்!

பையூட்டும் வாக்குகளைப் பார்!

 

வெள்ளை யாடை கொள்ளைக் கூட்டம் வேண்டித் தொழுது

பல்லைக் காட்டும்! பாடிப் போற்றும்! பாதப் பற்றுக்[கு]

எல்லை இல்லை இவர்க்கு!

 

மதவெறி நிறவெறி மண்ணை மாய்க்கும்! மனிதா உன்றன்

மதிவெறி மனவெறி வாழ்வை மாய்க்கும்! மனிதங் குன்ற

விதிவெறி பிடித்தெழும் மிரண்டு!

 

திரைத்துறையில் இருப்பவரை

……….மனத்திரையில் பதிக்கின்ற அடிமைப் போக்கும்

இறைத்துறையில் இருப்பவரை

……….இறைவனெத் துதிக்கின்ற  மடமைப் போக்கும்

நிறைதுறையில் ஒளிர்ந்திடுமா நிலம்?

 

வாக்கேயிடப் பணமேபெறும்

……….மதியில்லா மனிதர்காள்! வாதும் துாதும்

நாக்கேயிடத் தொழுதேயெழும்

……….நரம்பில்லா மனிதர்காள்! நாட்டில் உம்மைத்

துாக்கேயிட நினைத்தேன்தினம் தொடர்ந்து!

 

சாதியைத்தலை மேல்சுமந்திடும்

……….தந்நலத்து வாதிகளே! ஒன்று சொல்வேன்

நீதியைத்தலை மேல்சுமந்திடும்

……….நிலையுற்றால் வாழ்வோங்கும்! இல்லை சங்கம்

ஊதியேத்தலை மேல்நெருப்பிடும் உணர்!

 

முன்னே ஈரடிகள் ஆறு சீர்களையும் பின்னோர் அடி மூன்று சீர்களையும் பெற்றுச்  சிறப்புடைய ஏழு தளையாலும் வந்த ஓரொலி வெண்டுறை.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

10.09.2025


வேற்றொலி வெண்டுறை

 


வேற்றொலி வெண்டுறை


கீழடி

 

மூத்த குடியாகும் மொழியுலகத் தாயாகும் கீழடி!

காத்த நற்புகழைக் கணக்காக மறைத்திடுவார்!

ஆத்தாடி துாங்காதே அவர்நம்மைப் புதைத்திடுவார்!

 

நேர்கொண்ட சாலைச் சீர்கொண்ட செந்தமிழின் கீழடி!

வேர்கொண்ட தமிழை விரைந்திங்கு மறைத்திடுவார்!

கார்கொண்ட குழலி! போர்கொண்டு வென்றிடுவோம்!

 

தொன்மை மிக்குடைய துாயதமிழ் மாண்பொளிரும் கீழடி!

வன்மைத் தமிழுடைய வரலாற்றை மறைத்திடுவார்!

நன்மை மனத்தவளே! நம்மொழியைக் காத்திடுவோம்!

 

அலைகடல் அழித்தென்ன? அருந்தமிழின் ஆண்டுரைக்கும் கீழடி!

கொலைவெறி கொண்டுள்ள கொடுங்கொடியர் மறைத்திடுவார்!

கலைவிழிக்  காரிகையே! காத்திடவே முன்னிற்போம்!

 

பண்டைமிகு  தமிழினமே மண்ணில் முதலென்னும் கீழடி!

மண்டைக் கொழுப்புடையோர் வரலாற்றை மறைத்திடுவார்!

கெண்டை விழியழகே! நம்அண்டைப் பகையொழிப்போம்!

 

அன்னைத்தமிழ் மொழியின் முன்னைப் புகழ்சாற்றும் கீழடி!

தன்னைப் பெரிதென்னும் தருக்கர் மறைத்திடுவார்!

பொன்னை நிகர்த்தவளே! இன்றே புறப்படுவோம்!


ஓங்குந்தமிழ் காத்த ஒப்பிற்றமிழ் பூத்த கீழடி!

வீங்கு வெறியுடைய வீணர் மறைத்திடுவார்!

தாங்கு புலிக்கொடியைத் தீமை அகன்றிடுமே!

 

முன்னோர் அடி ஐந்து சீர்களையும் பின்னிரண்டு அடிகள் நான்கு சீர்களையும் பெற்றுச் சிறப்பில்லா ஏழு தளையாலும் வந்த  மூன்றடி வேற்றொலி வெண்டுறை.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

10.09.2025

samedi 6 septembre 2025

முனைவர் கி. சிவகுமார் வாழியவே!

 

திருவாவடுதுறை ஆதீனப் புலவர்

முனைவர் கி. சிவகுமார் வாழியவே!

 

செஞ்சொல் வேண்டும் பாட்டுக்குச்

சீர்ச்சொல் தந்த நம்முனைவர்

வெஞ்சொல் வேண்டாம் பாட்டுக்கு

வேர்ச்சொல் கண்டு பாடுகவே!

தஞ்சொல் யாவும் அமுதுாறிச்

சாற்றும் ஆற்றல் வாழியவே!

அஞ்சொல் தாசன் வியக்கின்றேன்

ஆகா வென்று புகழ்கின்றேன்!

 

முல்லை எங்கள் ஊரில்லை!

முத்தாய் மின்னும் அருஞ்சொல்லை

எல்லை யில்லா வண்ணத்தில்

எடுத்தே உரைத்த நம்முனைவர்!

கொல்லைப் புறத்துக் கிளிக்கூட்டம்

கொறித்தே உண்ணுஞ் சுவையாக

நெல்லை யப்பன் திருவருளால்

நேயத் தமிழை யாமுண்டோம்!

 

சேல்கொள் வாணன் நற்சீரைச்

சீர்கொள் வண்ணம் நம்முனைவர்

பால்கொள் சுவையாய்ப் படைத்திட்டார்!

பண்கொள் இனிமை யாமுற்றோம்!

வேல்கொள் வேந்தன் அருளென்பேன்!

வேர்கொள் தமிழின் புகழென்பேன்!

மால்கொள் மங்கை யழகாக

மனங்கொள் தமிழைக் கற்றோமே!

 

நம்பி தந்த அகப்பொருளை

நம்பி நமக்குக் கொடுத்திட்டார்!

தும்பி போன்று பன்மலரில்

துய்த்துத் தேனை அளித்திட்டார்!

தம்பி தங்கை அனைவருமே

தண்மைத் தமிழைச் சுவைத்திட்டோம்!

எம்பி நின்று கவிகேட்டேன்!

ஏற்றங் கண்டு புகழ்ந்திட்டேன்!

 

தஞ்சை வாணன் கோவையினை

நெஞ்சம் மகிழ உரைத்திட்டார்!

நஞ்சை வயலின் விளைவாக

நல்ல தமிழைப் படைத்திட்டார்!

பஞ்சை ஊதிப் விடுவதுபோல்

பாட்டின் அரசன் பறக்கின்றேன்!

மஞ்சை உலவும் வானளவு

வாழ்த்தை வழங்கி வணங்குகிறேன்!

 

சொல்லின் சந்தம் விளையாடத்

துாய புலமை விளையாட

இல்லின் இன்பம் விளையாட

இதயக் காதல் விளையாடக்

கல்லின் உடலில் நற்சிற்பி

கலையைத் தந்து விளையாட

வில்லின் கூர்மைப் பாட்டரசன்

வெற்றி பாடி வாழ்த்துகிறேன்!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

06.09.2025