dimanche 5 mai 2024

சாற்றுகவி

 

மரபு பாவலர் மு. விசய சாமுண்டீசுவரி எழுதிய

புறநானுற்றுப் புதுமை நுாலுக்குச்

சாற்றுகவி

 

புறநா னுாற்றுப் புதுமையெனப்
         புனைந்த பாக்கள்! தேன்பூக்கள்!

மறநாப் புலவர் மாட்சியினை

         வல்ல தமிழர் ஆட்சியினை

அறநாத் தமிழின் நீட்சியினை

         அணிகள் மின்னும் காட்சியினை

விறனா கொண்டு படைத்திட்டார்

         விசய சாமுண் டீசுவரியார்!

 

ஆரங் கொண்ட பேரழகாய்

         அளித்த பாட்டுக் கனிக்கூட்டு!

காரங் கொண்ட கருத்துக்கள்!

         கருத்தைக் கவரும் அருஞ்சொற்கள்!

ஈரம் கொண்ட நல்லடிகள்!

         இன்பத் தமிழின் மனைப்படிகள்!

வீரங் கொண்ட தமிழ்தந்தார்

         விசய சாமுண் டீசுவரியார்!

 

சங்கத் தமிழின் புகழேந்தித்

         தந்த யாப்புத் தமிழ்க்காப்பு!

தங்கத் தமிழின் முக்கொடிகள்

         தரித்த இமயம் புகழ்கூறும்!

சிங்க மென்ன? தமிழ்த்தோள்கள்

         சிலிர்த்தால் வெற்றிப் பூக்கொட்டும்!

வெங்கண் வீரர் பேர்காத்தார்!

         விசய சாமுண் டீசுவரியார்!

 

மண்ணார் வாச மரபினிலே

         மலர்ந்த சீர்கள்! தமிழ்வேர்கள்!

பண்ணார் தமிழர் பண்பாட்டைப்

         பசுமை படர்ந்த வரலாற்றைக்

கண்ணார் வண்ண ஓவியமாய்க்

         காலங் காக்கும் காவியமாய்

விண்ணார் முகில்போல் பொழிந்திட்டார்

         விசய சாமுண் டீசுவரியார்!

 

ஓங்கு புலமை உரமோங்கி

         உதித்த பாடல்! தமிழ்க்கூடல்!

தேங்கு வளமை நிலமோங்கித்

         தென்றல் பொதுமை நிலையோங்கித்

தாங்கு வன்மை மனமோங்கித்

         தமிழ்த்தாய் தந்த குணமோங்கி

வீங்கு புகழால் வாழியவே

         விசய சாமுண் டீசுவரியார்!

 

விறல் + நா = விறனா

வெற்றி, பெருமை, வன்மையுடைய நாக்கு

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்

கம்பன் கழகம் - பிரான்சு,

உலகத் தமிழ்ச் சிறகம்,

தொல்காப்பியர் கழகம் - பிரான்சு,

பாவலர் பயிலரங்கம் - பிரான்சு.

05.05.2024

Aucun commentaire:

Enregistrer un commentaire