முதலாய் முடிவாய் இருப்பவனே!
உன்னை யன்றி எனக்குதவ
உலகில் ஒருவன் இனியுண்டோ?
முன்னைச் செய்த வினைகளினால்
முடியாத் துயரில் உழல்கின்றேன்!
பொன்னை நிகர்த்த மேனியனே!
புல்லாங் குழலை இசைப்பவனே!
கண்ணைக் காக்கும் இமைபோலக்
கண்ணா என்னைக் காப்பாயே!
படியா திருந்த நெஞ்சத்தைப்
படியச் செய்யும் பரம்பொருளே!
அடியேன் வாழ்வில் கரையேறும்
ஆற்றல் இன்றித் தவிக்கின்றேன்!
படியாய்க் கிடந்துன் கோயிலிலே
பாவி யானும் கெஞ்சுகிறேன்!
முடியா தொன்றும் உனக்கில்லை
முதலாய் முடிவாய் இருப்பவனே!
29.10.2000
முதலாய் முடிவாய் இருப்பவனே!
RépondreSupprimerஅருமை அய்யா
Supprimerவணக்கம்!
முதலாய் முடிவாய் இருப்பவனே! என்றன்
இதயம் இருப்பாய் இனித்து!
கண்ணன் என்றும் காப்பான்...
RépondreSupprimerவாழ்த்துக்கள் ஐயா... நன்றி...
Supprimerவணக்கம்!
கண்ணன் கழலினணக் கண்களில் ஏந்துகிறேன்
எண்ணம் இனிக்கும் இசைத்து!
கடகடவெனப் படிகளில் இறங்குவதுபோன்று அழகிய தமிழில் வார்த்தைகள் வசமாய் வந்து விழ, தமிழின் இனிமையிலும், கண்ணனின் கனிவிலும் மனங்குளிர்ந்தேன். நன்றி ஐயா.
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
கீதை கொடுத்தஎழிற் சீதை தலைவனே!
கோதைபோல் அன்பைக் கொடு!
அருமையான கவிதை....
RépondreSupprimerத.ம. 3
Supprimerவணக்கம்!
திருமலை நாதனைச் சேரும் மனத்துள்
அருங்கலை மேவும் அணைத்து!
விந்தை நிறைந்ததே வேங்கடன் பேரருள்
RépondreSupprimerசிந்தை நிறைக்கும் சிறந்து!
மிக அருமையான பாக்களையா!
// படியா திருந்த நெஞ்சத்தைப்
படியச் செய்யும் பரம்பொருளே!
அடியேன் வாழ்வில் கரையேறும்
ஆற்றல் இன்றித் தவிக்கின்றேன்!//
என்னை மிகவே கவர்ந்த வரிகள்!
என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!
Supprimerவணக்கம்!
அடியவா் உள்ளத்துள் ஆழ்ந்தொளிரும் கண்ணா!
அடியவா்க்கு அன்பனாய் ஆக்கு!
கண்ணன் கவிதை சிறப்பு! வாழ்த்துக்கள்!
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
மிகவும் சிறியவன்என் பல்வினை நீக்கிப்
புகழுறச் செய்தான் பொலிந்து!
வணக்கம் ஐயா!
RépondreSupprimerமனம் ஒன்றித்திளைத்தேன் உங்கள் கவியினில்!
கண்களில் நீர் பெருக...
Supprimerவணக்கம்!
கண்கள் கசிந்துருகி வேண்டுவா்க்கு இப்பிறவிப்
புண்கள் மறையும் புதைந்து!
வணக்கம் !
RépondreSupprimerஅருமையான வரிகளினால் இதயத்தில் இறைவனையும்
காண வைத்தீர்கள். உங்கள் கவிதைகளின் தனிச் சிறப்பே
இது தான் !...வாழ்த்தி வணகுகின்றேன் .மிக்க நன்றி பகிர்வுக்கு .
Supprimerவணக்கம்!
கல்லாய் இருந்தவெனைக் கற்றுப் கவியெழுத
எல்லாம் அவனின் இலக்கு!
RépondreSupprimerவணக்கம்!
புல்லாங் குழல்கொடுத்த புண்ணியனை! வாழ்வுயர
எல்லாம் அளிக்கும் இனியவனை! - வல்லவனை
ஓங்கி உலகளந்த உத்தமனைப் போற்றினால்
தேங்கி இருக்கமோ தீது?
Supprimerவணக்கம்!
நெடியவனை! எங்கும் நிறைந்தவனை! இந்த
அடியவனைக் காப்பவனை! அன்பைக் - குடிப்பவனை!
ஆழிமழை ஆனவனை! ஆயா்குலச் செல்வனை
வாழியென வாழ்த்துமென் வாய்!
RépondreSupprimerவலைத்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!
வேங்கட நாதனின் விண்மலா் தாள்தொழுதால்
ஓங்கிடும் வாழ்வின் ஒளி!
nice
RépondreSupprimer