காதல் ஆயிரம் [பகுதி - 96]
851.
கொஞ்சும் கிளியவள்! கோலக் குயிலவள்!
விஞ்சும் இளமை விருந்தவள்! - நெஞ்சே..நீ
கெஞ்சிக் கிடந்து கிறுக்கும் மலர்க்கவிகள்
மஞ்சம் கொடுக்கும் மணந்து!
852.
நஞ்சுமொழி பேசி நடந்தவளைத்! துன்பத்துள்
துஞ்சுவழி காட்டித் தொடர்ந்தவளை! - நெஞ்சே..நீ
எண்ணி இருப்பதுமேன்? ஏங்கித் தவிப்பதுமேன்?
வெண்ணீர் கொதிப்பதுபோல் வேர்த்து!
853.
அஞ்சும் செயல்புரிந்து அப்படியே என்னயிரைக்
கஞ்சிபோல் காய்ச்சிக் களித்தவளை - நெஞ்சே..நீ
பாடிப் பறப்பதுமேன்? பார்த்துக் கிடப்பதுமேன்?
தேடித் திரிவதுமேன் தேறு!
854.
கெஞ்சம் அவள்என்று கேட்டறிந்த பின்னாலும்
தஞ்சம் அடையத் தவிப்பதுமேன்? - நெஞ்சே..நீ
போதை பிடித்துப் புலம்புவதேன்? பூந்தமிழ்ப்
பாதை மறந்து படுத்து!
855.
பஞ்சம் படர்ந்ததுபோல் பாழ்பட்டு நிற்கின்றேன்!
வஞ்சம் வகுத்த வளர்மதியால் - நெஞ்சே..நீ
இன்னும் இளையவளை எண்ணி எழுதுகிறாய்!
துன்னும் துயரில் தொடர்ந்து!
856.
மஞ்சள் முகத்தழகில் மாட்டி மடிந்தாயோ?
விஞ்சும் மொழியழகில் வீழ்ந்தாயோ? - நெஞ்சே..நீ
ஆசை அலைப்பெருக்கில் ஆழ்பட்டு அலைகின்றாய்!
ஓசை முழுதும் உறைந்து!
857.
இஞ்சி இடுப்பழகில் ஏனோ சிறைப்பட்டாய்!
நஞ்சிக் கிழிந்து நலிவுற்றாய்! - நெஞ்சே..நீ
அல்லும் பகலும் அவளழகில் ஆழ்பட்டுச்
சொல்லும் கவியைச் சுருட்டு!
858.
வஞ்சிக் கொடியவள்! வண்ண மலரவள்!
செஞ்சித் திருநகர் தேவியவள்! - நெஞ்சே..நீ
வேண்டிக் கிடந்தாய்! விழுங்கும் துயருற்றாய்!
தூண்டில் புழுவாய்த்; துடித்து!
859.
மஞ்சி விரட்டும் மறவனைச் சீர்கொண்ட
மஞ்சு மனத்தால் மடக்கியவள்! - நெஞ்சே..நீ
ஏக்கம் நிறைந்த எழுத்தெழுதி, நல்லிரவில்
தூக்கம் தொலைப்பாய்த் துவண்டு!
860.
பிஞ்சு மனமென்று பெண்ணை உரைத்திடுவார்!
அஞ்சும் நிலையை அளித்திட்டாள்! - நெஞ்சே..நீ
வாடிக் கிடப்பதேன்! வஞ்சி நினைவுகளைச்
சூடிக் கிடப்பதேன் சொல்லு?
(தொடரும்)
நெஞ்சே... தவிக்கும் நெஞ்சே... கவி வரிகளைக் கண்டு ஆறுதல் கொள்வாய்...
RépondreSupprimerவாழ்த்துக்கள் ஐயா...
Supprimerவணக்கம்!
நெஞ்சே! தவிக்கின்ற நெஞ்சே! குளிர்ந்திடுக!
அஞ்சாது அருந்தமிழ் ஈந்திடுக! - பஞ்சு
பறக்கும்! கொடிபறக்கும்! பாடும் கவிகள்
பறக்கும் மனத்துள் பதிந்து!
நெஞ்சேநீ என்று கொஞ்சிய காதல்
RépondreSupprimerதுஞ்சும் கவியாக துயரம் தருதே
கெஞ்சித் தரும் பிஞ்சு மொழியிலும்
மிஞ்ச யாருண்டு மேவிஉங்களை.!.
த ம.3
Supprimerவணக்கம்!
விஞ்சும் சுவையில் விளைந்த..கவி! என்னுடைய
நெஞ்சச் சுமையாய் நினைத்திடுக! - அஞ்சாத
வஞ்சி இளமதி வார்த்த கருத்துக்குள்
தஞ்சம் தழைக்கும் தமிழ்!
வஞ்சியவள் பேரழகை தினம்
RépondreSupprimerநெஞ்சம் இனிக்க கவியாக தந்திடவே
தஞ்சமென நானுமிங்கே சரணடைந்தேன்
பஞ்சமினி இங்கேது தமிழே.
Supprimerவணக்கம்!
கொஞ்சி மகிழ்ந்திட்ட கோதையிடம் ஆட்பட்டுக்
கெஞ்சிக் கிடந்திட்ட கீழ்நிலையை - நெஞ்சுருகிப்
பாடிப் படைத்தவை! பஞ்சமெனும் துன்பத்துள்
வாடிப் படைத்தவை! வாழ்த்து!
அஞ்சிக் கெஞ்சி மிஞ்சிப் போனதோ துயர்
RépondreSupprimerஆர்ப்பரிக்கும் கவிதை வரிகள் ஆறென ஓடிட இங்கே !! :))
வாழ்த்துக்கள் ஐயா சிறப்பான வரிகள் இதற்க்கு .
Supprimerவணக்கம்!
பெண்ணவள்! அன்பிற் பெரியவள்! என்னிரு
கண்ணவள்! கன்னற் கவியவள்! - மின்னிடும்
பொன்னவள்! பூவவள்! பொங்கும் புகழவள்!
என்னவள் உற்ற எழில்!
வணக்கம்
RépondreSupprimerகெஞ்சும் புலவனின் கேள்விகளைக் கண்டவள்
அஞ்சி பயந்தாளோ! அல்லலுரும் - நெஞ்சத்தாள்
கொஞ்சும் கவிபடைக்கும் கோவைக் கவிமனத்தை
மிஞ்சுவதன் காரண மேது?
Supprimerவணக்கம்!
புலவன் மனத்தைப் புரியாத மங்கை!
குலவும் கலையொளிர் கோயில்! - நலமுற
உற்ற அழகோ உயா்அறிவோ காரணம்?
கற்ற கவியறியேன் காண்!
வணக்கம் கவிஞர் ஐயா!
RépondreSupprimerஅழகிய காதல் கவிதைகள் இவை!
இவ்வளவு காலதாமதமாக இங்கு வந்தேனென கவலையடைகிறேன்.
இதற்குமுன் உள்ள உங்கள் கவிதைகளையும் படிக்க ஆவல். தொடருகிறேன்.
வாழ்த்துக்கள்!
Supprimerவணக்கம்!
தேங்கொடி நல்கும் சுவையெனச் சொல்தீட்டும்
பூங்கொடித் தோழியைப் போற்றுகிறேன்! - மாங்குயில்
கூவும்! மயில்ஆடும்! குளிர்தழுவும்! என்வலையில்
மேவும் மனத்துள் விரைந்து!
Supprimerவணக்கம்!
உங்கள் வலைத்தளம் உற்ற முகவரியை
இங்கே தருக இனித்து
RépondreSupprimerநெஞ்சுள் நிலைத்த நினைவுகளைத் தாம்எண்ணிக்
கொஞ்சும் தமிழில் கொடுத்துள்ளீா்! - விஞ்சிவரும்
கற்பனை மாட்சியும் கம்பன் கவிவளமும்
பொற்புடன் பெற்றீா் பொலிந்து!
Supprimerவணக்கம்!
இனிய தமிழ்ச்செல்வா! என்றன் வலைக்குள்
கனியக் கருத்தெழுதி நின்றீா்! - நனிநன்றி!
சொற்றுணை நாதனின் துாய தமிழாக
நற்றுணை ஆனதுன் நட்பு!
இஞ்சி இடுப்பழகில் ஏனோ சிறைப்பட்டாய்!
RépondreSupprimerநஞ்சிக் கிழிந்து நலிவுற்றாய்!
வஞ்சிக் கொடியவள்! வண்ண மலரவள்!
செஞ்சித் திருநகர் தேவியவள்!
மஞ்சி விரட்டும் மறவனைச் சீர்கொண்ட
மஞ்சு மனத்தால் மடக்கியவள்!
அழகிய தமிழின் எதுகை கொண்டு இயல்பாய் கவிதை வடித்துள்ளீர்கள் ஐயா... கலக்கல் கவிதை...
Supprimerவணக்கம்!
கலக்கல் அழகவளைக் காணும் பொழுது
குலுக்கல் பரிசெனப்..பா கொட்டும்! - இலக்கை
மறந்து சுவைப்பேன்! மலரழுத வண்டாய்ப்
பறந்து படைப்பேன் படைப்பு!
RépondreSupprimerவணக்கம்!
வஞ்சி விழிகளின் வஞ்சம் அறியாமல்
கொஞ்சிக் கிடந்து குலைந்திட்டேன்! - நெஞ்சை
மயக்கி மகிழ்ந்தாள்! மறவன்என் வாழ்வை
இயக்கி மகிழ்ந்தாள் இனித்து!