காதல் ஆயிரம் [பகுதி - 76]
751.
கும்மென்(று) இருக்கின்ற கோதை முகம்பார்த்தும்
உம்மென்(று) இருந்திடுமோ என்னுள்ளம்!
- இம்மென்று
சொல்லி முடிக்கும்முன் தூயவளை அப்படியே
அள்ளிக் குடிக்கும் அணைத்து!
752.
காயா? பழமா? கருத்தை உரைத்திடுக!
வாயால் வளர்க்கின்ற சண்டையேன்? - தீயாய்
எரிக்கின்ற பார்வையேன்? என்னவளே இன்பத்தைத்
தரிக்கின்ற சொற்களைத் தா!
753.
கண்ணென வந்தாள்! கருத்தைக் கவர்ந்திடும்
பண்ணென வந்தாள்! பசுந்தமிழ்ப் - பெண்ணவள்
என்னெனச் சொல்வேன்! இனியவள் பேரழகு
பொன்னென மின்னும் பொலிந்து!
754.
கண்ணிரண்டும் தண்குவளை! கார்க்குழலில்
மல்லிகை!
முன்னிரண்டும் முத்துடைத் தாமரை! - இன்னிதழ்
செம்மலர்! பல்முல்லை! சீர்முக்கௌ் பூ!அகத்திற்(கு)
எம்மலர் ஒக்கும் இயம்பு!
755.
ஆசையுடன் அன்றளித்த முத்தங்கள்! எப்பொழுதும்
ஓசையுடன் நெஞ்சுள் ஒலித்தனவே - மீசையுடன்
கொஞ்சிக் களித்தாலும் குத்தும் சிலுசிலுப்பு
விஞ்சிப் படைக்கும் விருந்து!
(தொடரும்)
இன்னும் இளமை உணர்வு குறையாமல் இப்படியும் தெளிவாக எழுதும் ரகசியம் என்னவோ?
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
என்றும் இளமையாய் மின்னும் நினைவுகள்
என்னுள் இருந்து கவியெழுதும்! - இன்பூறும்
சந்தத் தமிழொலியைச் சிந்தும் சலங்கையொலி
தந்த இனிமையெனச் சாற்று!
அருமை... வர்ணிப்பை ரசித்தேன்...
RépondreSupprimerவாழ்த்துக்கள் ஐயா...
Supprimerவணக்கம்!
கோடி மகளிர் குவிந்திருக்க! என்விழிகள்
தேடி மகிழும் திருமகளை! - கூடிவரும்
ஆசைப் பெருக்கை அளிக்குமவள் பாட்டெழுத
ஓசை கொடுக்கும் உவந்து!
நாள்தோறும் ஓயாமல் நற்றமிழில் வெண்பாவை
RépondreSupprimerவாள்போலும் கூர்மைமிக வாக்கியத்தில் - பால்போன்றே
தெள்ளத் தெளிவாக தேனாக தித்திக்க
வெள்ளம்போல் தந்திடுவீர் வேண்டி
Supprimerவணக்கம்!
வாள்போன்றும் கூா்விழிகள்! வஞ்சி வடிவெண்ணி
நாள்தோன்றும்! பாடும் நலம்தோன்றும்! - தோள்தோன்றும்
என்றன் உணா்வுகளை எப்படி தீட்டிடுவேன்
உன்றன் கவிபோல் உணா்ந்து!
ஐயா வணக்கம்!
RépondreSupprimerஇலகுவான எதுகை மோனையுடன் தினமும் அருமையான சொற்களால் பாவியற்றி எமக்கும் கற்கும் ஆவலைத் தூண்டிவிடுகிறீர்கள்.
அத்தனையும் மிகமிக அற்புதமாக இருக்கின்றது.
மிக்க நன்றி ஐயா!
தொடர்ந்து படிக்கின்றேன்...
என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!
Supprimerவணக்கம்!
எதுகையும் மோனையும் ஒட்டி இனிக்கப்
புதுமையும் போற்றும் புலமையும் தந்தவள்
அன்னவள் அன்பில் அடியேன் தினம்முழுகிச்
சொன்னவவை யாவும் சுகம்!
RépondreSupprimerவணக்கம்!
கொட்டிக் கொடுத்த குளிர்த்தமிழ்மேல், மல்லிகையால்
கட்டிக் கொடுத்த கருத்துக்கள்! - மட்டிலா
இன்பம் அடைந்தேன்! இனிய கவிபாடி
துன்பம் மறந்தேன் தொடா்ந்து!