எங்கும் தமிழே ஒலிக்கட்டும்!
இணைந்து
தமிழர் உழைக்கட்டும்!
பொங்கும் அமுதத் தமிழ்ச்சீரைப்
புவியோர்
உண்டு களிக்கட்டும்!
அங்கும் இங்கும் நாய்போன்றே
அலையும்
ஆசை அகலட்டும்!
சங்கே முழங்கு! வான்வெளியைத்
தாண்டும்!
தாண்டும்! தமிழோசை!
குளிர்ந்த இளநீர் தருமினிமை!
கொஞ்சும்
குமரி தருமின்பம்!
மலர்ந்த மலர்கள் தரும்சுவைத்தேன்!
மகிழ்வை
ஊட்டும் மழலைமொழி!
வளர்ந்த பலா..மா தரும்கனிகள்!
வள்ளல்
பசுக்கள் தரும்நற்பால்!
விளைந்த பசுமை! அத்தனையும்
விஞ்சும்!
விஞசும் தமிழோசை!
பூக்கள் மலரும் பேரழகாய்ப்
புலவர்
பாடும் மெல்லோசை!
ஈக்கள் பறந்து தேனுண்டே
இணையும்
சேர்க்கை இன்னோசை!
ஆக்கம் ஊட்டும் ஆற்றலுடன்
ஆளும்
திண்மை வல்லோசை!
ஊக்கம் தந்து தமிழுணர்வை
ஊட்டும்
என்றன் தமிழோசை!
கண்ணன் மீட்டும் குழலோசை!
காதல்
ஊட்டும் வளையோசை!
மன்னன் மாண்பின் மணியோசை!
மருளை
நீக்கும் அருளோசை!
வண்ண மயிலின் அருமோசை!
சின்னக்
குயிலின் குரலோசை!
எண்ணம் நிறைந்தே உயிராக
இனிக்கும்!
இனிக்கும் தமிழோசை!
அய்யா. தங்கள் தமிழில் சொக்கினேன்.
RépondreSupprimerபடிக்க படிக்கத் தேனாய் இனிக்கிறது.
தங்களின் வலை அறிமுகம் கிடைத்ததில் அகமகிழ்ந்து போகிறேன்.
நன்றி
இனிய நண்பருக்கு வணக்கம்
Supprimerவரவேற்று மகிழ்கின்றேன்
உங்கள் வலையைக் கண்ணுற்றேன்
சிறந்த கவிஞருக்கான முத்திரையை அனைத்துப் பக்கங்களிலும் உள்ளன.
நம்தாய்த்தமிழ் மொழியில் நாம் கற்றது கொஞ்சம்!
கற்க வேண்டியவைக் கடலையும் விஞ்சும்
இனிய நண்பா் சிவகுமாரன்
இங்கே அளித்த கருத்துரையில்
கனியின் சுவையை நான்பெற்றேன்!
கவிஞன் என்ற உரமுற்றேன்
பனியின் பொழிவை இந்நாடு
பார்க்கத் தொடங்கும் காலமிது!
இனியென் பாட்டில் குளிருக்கும்
இதயக் கூட்டில் பதித்திடுவீா்!
என் வெகு நாள் ஆசை இலக்கண தமிழில் கவிதை எழுதுவது முடியவில்லை தங்கள் செந்தமிழ் கவிதையை படித்து மகிழ்ந்தேன் ஐயா
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
கன்னல் கவிதைகளைக் கற்றுக் களித்தாலே
மின்னும் கவிதை விளைந்து!
மிக்க நன்றி அய்யா
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி! வளரும்
அ்ருமைக்கு வேண்டுமே அன்பு!
எட்டுத் திசைகளையும் எட்டி முழங்கட்டும்
RépondreSupprimerகொட்டு மழையாய்க் குளிரட்டும்! - மொட்டுளம்
பூத்து மணக்கட்டும்! பூந்தமிழே உன்னெறியைக்
காத்துக் களிக்கட்டும் கண்!
Supprimerகண்ணுடன் காதும் கமழ்நெஞ்சும் உட்கொண்டு
பண்ணுடன் வாழுமுயர் பாவலனே! - தண்ணுடன்
கூடிக் கொடுக்கின்ற கோலக் கவிதைகளைப்
பாடிப் பறப்பேன் பணிந்து!