jeudi 20 septembre 2012

ஏக்கம் நுாறு [ பகுதி - 5 ]




ஏக்கம் நுாறு [பகுதி - 5]
 
தேடுகிறேன்! இதயத்தைத் திருடிச் சென்ற
     தேவியுனை! காணாமல் கோடைப் புல்போல்
வாடுகிறேன்!  வதங்குகிறேன்! உன்னைப் பார்க்க
     வளம்வந்து வளம்வந்து கால்கள் ஏங்கும்!
ஓடுகிறேன் மாலைவரும் முன்னே கோயில்
     உன்வரவை எதிர்நோக்கி! எங்கே சென்றாய்!
பாடுகிறேன் பைத்தியம்போல்! பாவை உள்ளம்
     பாறையென இருப்பதுவே! பாவம் யானே! 21

பொன்னகையும் அணிந்ததுமேன்? பூவே உன்றன்
     புன்னகைக்குக் கவிபுனையச் சொற்கள் வேண்டும்!
என்னகையும் இனிவேண்டாம்! எடுப்பாய் நிற்கும்
     எழில்மூக்கு, கயற்கண்கள், செவ்வாய் போதும்!
மென்னடையும் மின்னொளியும் ஒன்றாய் வாழும்
     விந்தையடி உன்னுருவம்! என்றன் பாட்டில்
இன்னடையும் பல்லணியும் மின்னும் வண்ணம்
     இருசெவியின் நல்லழகு போதை ஏற்றும்! 22

மருதாணி உதட்டழகில் அமா்ந்து மெல்ல
     மனத்தேனி மதுவருந்த! மின்மூக் குத்தி
திருவாணி போலிருந்தே உன்னைத் தீண்டித்
     திளைக்கின்ற திருவருள! நிறங்கள் மின்னும்
ஒருகாணி மலா்த்தோட்டம் போன்றே உன்றன்
     திருமேனி பளபளக்க! காதல் தீட்டும்
திருஞானி நானானேன்! சொர்க்கம் காட்டும்
     அருந்தோணி நீஆனாய்! அன்பே வா!வா! 23

இன்றுவரை பாவலா்கள் பாடி வைத்த
     இனியகவி அத்தனையும் சிறிதே என்பேன்!
என்றுகரை சோ்வேனோ? பெண்ணே உன்றன்
     எழில்பாடப் புதுச்சொற்கள் பூக்க வேண்டும்!
அன்றுவரை ஆசைகளை நெஞ்சக் கூட்டில்
     அடைகாத்து வைத்திருப்பேன்! பார்வை ஒன்றால்
வென்றுசிறை யிட்டவளே! அழகே! அன்பே!
     வேதமடி நீஎனக்கு! விருந்தே வாராய்! 24

இளம்பஞ்சி மெத்தையெனப் பாவை உள்ளம்
     இரும்பாக மாறியெனைத் தடுத்தல் ஏனோ?
உளம்நஞ்சிக் கிடக்கின்றேன்! உதவும் எண்ணம்
     ஒருபிடியும் இல்லாமல் இருத்தல் ஏனோ?
குலம்விஞ்சிப் பாய்ந்தோடும் தண்ணீா் போன்று
     குதித்தாடும் இளமையினைக் கொல்லல் ஏனோ?
வளம்கொஞ்சி வந்தாட மௌனம் நீக்கி
     வாய்மலா்ந்தே ஒருவார்த்தைச் சொல்வாய் கண்ணே! 25
                                               (தொடரும்) 

8 commentaires:

  1. அருமையான படைப்பு. எதுகை ,மோனை, சந்தம் தழுவி மிக மிக இலகுவாக கவி புனைந்து மனம் கவர்ந்து நிற்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள் ஐயா.மிக மிக கவலையுற்றேன், இப்படியொரு கவிப்பதிவினை இவ்வளவு காலமும் தவறவிட்டமைக்காக.
    சிறியவனான நானும் உங்கள் பதிவில் கருத்திட ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மனம் மகிழ்கிறேன்.
    தொடர்ந்தும் இனி இணைந்திருப்பேன் கவியின்பம் பெற்றுதிளைப்பேன்.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!

      நெற்கொழு தாசன் தந்த
      நெகிழ்ந்துரை நெஞ்சுள் நிற்கும்!
      சொற்கொழுத் தாடும் வண்ணம்
      சுடா்கவி சூடும் யானும்
      நற்கொழுத் தாடும் நட்பை
      நாடியே நன்றி சொன்னேன்!
      பற்கொழுத் தாடும் பொல்லாப்
      பகைவரைச் சாய்ப்போம் தோழா!

      Supprimer
  2. அருமை... (என்) மனதை அறியும் மாயக் கண்ணாடி வேண்டும்...

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!!

      அருமைக் கருத்துக்(கு) அளித்தேன்பொன் நன்றி!
      பெருமை பெருகும் பிணைந்து!

      பணத்தைப் போட்டுப் பகலிரவாய்ப்
      பாரில் தேடித் திரிந்தாலும்
      மனத்தைக் காட்டும் கண்ணாடி
      மண்ணில் கிடைக்க வழியுண்டோ?
      குணத்தைத் துாய்மை செய்திடுக!
      குற்றம் குறையை நீக்கிடுக!
      மனத்தைக் காட்டும் கண்ணாடி
      மனக்கண் முன்னே ஒளிர்ந்திடுமே!

      Supprimer
  3. காதல் கொப்பளிக்கும் வரிகள்.அருமை ஐயா!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!

      நன்றி! நன்றி!!

      கொப்பளிக்கும் சொல்யாவும் என்றன் நெஞ்சுள்
      கொலுவிருக்கும்! குளிரடிக்கும்! வெப்பம் ஏற்றும்!
      இப்படிக்கும் அப்படிக்கும் தாவித் தாவி
      இரவெல்லாம் கண்விழிக்கும்! ஏங்கிப் பாடும்!
      கப்படிக்கும் இடங்கூடக் காதல் சோலை!
      கடுகளவாய்ப் பெருமலையும் தெரியும்! நீரில்
      தப்படிக்கும் சிறுவனைப்போல் ஆசை பொங்கித்
      தத்தளிக்கும் போராட்டம்! உயிரின் தன்மை!

      Supprimer

  4. வணக்கம்!

    ஏக்கம் இடுகின்ற நுாறு விருத்தங்கள்
    ஆக்கம் அளிக்கும் அமுதென்பேன்! - ஊக்கமுடன்
    கற்கும் பொழுதெல்லாம் காதல் உணர்வூறும்
    சற்றும் அகலா தமர்ந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஏக்கம் எடுத்து..நான் ஈந்த கவிதைகளை
      ஊக்கம் எடுத்து..நீ ஒதுகின்றீா்! - பூக்கும்
      பகலா? இரவா? பசுந்தமிழை நாடி
      அகலா தமர்ந்தே அருந்து!

      Supprimer