Pages

mardi 6 mars 2018

வெண்பா மேடை - 63

வெண்பா மேடை - 63
  
பரணித் தாழிசை!
  
அளவொத்த இரண்டிகள் பயின்று வருவது பரணித் தாழிசையாகும். பரணி நுால்கள் இவ்வகைத் தாழிசைகளால் மட்டுமே பாடப்பட்டன. இத்தாழிசைகளில் இருக்கும் ஓசை நயம் படித்துச் சுவைக்கத்தக்கது. ஈரடியால் வரும் குறள் வெண்செந்துறை அறம் பற்றிப் பாடப்படும். பரணித் தாழிசை மறம் பற்றிப் பாடப்படும்.
  
பரணித் தாழிசை விருத்தத்தின் பாதியாய் இருக்கும். [ பரணித் தாழிசையை இரட்டித்து ஒரு விருத்தம் இயற்றலாம்] பரணி இலக்கியங்களில் இருசீர் முதல் பதினாறு சீர்வரை தாழிசைகள் வந்துள்ளன.
  
இருசீரடித் தாழிசை
  
1.
பற்று முற்றும்
வெற்றி கொட்டும்!
  
2.
இத்தரை இசைக்கும்
முத்தமிழ் மொழியே!
  
3.
பாட்டுப் பணியே
நாட்டும் நலமே!
  
4.
கொடியேந்திக் கூத்திடுக!
விடிவேந்தி வித்திடுக!
  
5.
வெள்ளையரை ஓட்டினோம்
கொள்ளையரைக் கூட்டினோம்!
  
6.
எங்கும்நலம் எழுதும்மொழி!
பொங்கும்புகழ் பொலியும்வழி!
  
4.
திங்கள்தரும் செம்மைக்கதிர்!
எங்கள்தமிழ் செம்மைப்பொழில்!
  
         [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
இருசீரடிப் பரணித் தாழிசையில் எவ்வகைச் சீரும், தளையும் வரலாம். ஓசை நயம் இருத்தல் வேண்டும். ஈரடியும் ஓரெதுகை பெறவேண்டும். மோனை கட்டாயமில்லை. இயற்கையாக மோனை அமையுமெனில் நன்றாம்.
  
இருசீரடித் தாழிசை ஒன்றை, விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் குறட்டாழிசையைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
06.03.2018

1 commentaire: