Pages

mercredi 7 mars 2018

வஞ்சித்துறை - 1


வஞ்சிப்பா மேடை - 1
  
வஞ்சித்துறை - 1
  
இருசீர் அடிகள் இரண்டு ஓரெதுகை பெற்று வந்தால் பரணித் தாழிசை என்பர். இருசீர் அடிகள் நான்கு ஓரெதுகை பெற்று வந்தால் வஞ்சித்துறை என்பர்.
  
பரணித் தாழிசை இரண்டு அடிகளைப் பெற்ற காரணத்தால் குறளின் இனமாக வைக்கப்பட்டது.
  
ஓரடியில் இரண்டு சீர்கள் பெற்று நான்கடிகள் பெற்ற காரணத்தால் வஞ்சித்துறை குறளடி வஞ்சிப்பாவின் இனமாக வைக்கப்பட்டது.
  
வஞ்சித்துறையின் சீர் வாய்பாடுகளை எந்நுாலும் வரையறுத்துக் கூறவில்லை. முன்னை இலக்கியங்களில் உள்ள சான்றுகளைப் பார்த்து எழுத வேண்டும்.
  
வஞ்சித்துறை - 1
[தேமா + விளம்]
  
ஓற்றி ஊரனைப்
பற்றி நெஞ்சமே!
நிற்றி நீஅருள்
பெற்றி சேரவே!
  
         [திருவருட்பா - 1350]
  
வானோர் வழிபடு
கோனே குமரவுன்
தேனார் திருவடி
தானே தனிநிலை
  
         [பாம்பன் சுவாமிகள்]
  
1.
கண்ணைக் கைகளால்
புண்ணாய்ச் செய்வரோ?
பெண்ணை அடிமையாய்
மண்ணில் கொள்வதோ?
  
2.
கங்கை வளமென
எங்கும் எழில்வரும்!
மங்கை கற்றிடப்
பொங்கும் புகழ்வரும்!
  
3.
இல்லம் எழிலுறும்!
உள்ளம் உயர்வுறும்!
அல்லல் அகன்றிடும்
வல்ல மாதினால்!
  
4.
வாடும் கன்னியர்
ஏடும் பயின்றிட
நாடும் ஓங்கிடும்!
வீடும் ஓங்கிடும்!
  
5.
இளமைக் கண்களால்
உளம்..தை காணுமே!
புலமைப் பெண்களால்
வளமை சேருமே!
  
6.
காடும் கமழ்ந்திட,
பீடு்ம் பிணைந்திட,
பாடும் பாவையை
நாடும் பணியுமே!
  
7.
கோதை குளிர்விழி
போதைக் களிதரும்!
சீதை தரும்மொழி
பாதை ஒளிபெறும்!
  
8.
அன்பின் ஊற்றென,
தென்றல் காற்றென,
இன்பின் கூட்டென
என்றும் தாய்மனம்!
  
9.
முன்னை முகிழ்தவம்
பொன்னைப் பொழியுமே!
அன்னை அருண்மொழி
உன்னை உயர்த்துமே!
  
10.
உண்மை சூடுக!
வண்மை கூடுக!
திண்மை பூணுக!
பெண்மை பேணுக!
  
         [பாட்டரசர் கி. பாரதிதாசன்]
    
தேமா + விளம் என்ற வாய்பாட்டில் ஓரடி அமைய வேண்டும். இவ்வாறு நான்கடிகள் ஓரெதுகை பெற்று வரவேண்டும். [ஓரடியில் இருசீர்கள் வருகின்ற காரணத்தால் மோனை கட்டாயமன்று]
  
தந்தையின் சிறப்பினை உரைக்கும் வண்ணம் இவ்வகை வஞ்சித்துறை ஒன்றைப் பாடுமாறு பாவலர்களை அன்புடன் வேண்டுகிறேன்.
      
"பாவலர் பயிலரங்கம்" என்ற முகநுால் குழுவில் இணைந்து தங்கள் விருத்தத்தைப் பதிவிட வேண்டுகிறேன்!
    
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
07.03.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire