Pages

mercredi 10 septembre 2025

ஓரொலி வெண்டுறை

 


ஓரொலி வெண்டுறை

 

அடிமை மனிதன்!

 

அயலார் மொழியைப் போற்றிடுவான்!

……….அல்லும் பகலும் கற்றிடுவான்!

உயிராம் தமிழை மறந்திடுவான்!

……….உலகில் தன்னைப் புகழ்ந்திடுவான்!

புயலார் கடலே பொங்கு!

 

மையூட்டு மங்கையரின்

……….மார்பூட்டு மின்பத்தில் மயங்குந் தலைவன்!

கையூட்டுஞ் செல்வத்துள்

……….கலையூட்டும் பெருமனையிற் களிக்குந் தலைவன்!

பையூட்டும் வாக்குகளைப் பார்!

 

வெள்ளை யாடை கொள்ளைக் கூட்டம் வேண்டித் தொழுது

பல்லைக் காட்டும்! பாடிப் போற்றும்! பாதப் பற்றுக்[கு]

எல்லை இல்லை இவர்க்கு!

 

மதவெறி நிறவெறி மண்ணை மாய்க்கும்! மனிதா உன்றன்

மதிவெறி மனவெறி வாழ்வை மாய்க்கும்! மனிதங் குன்ற

விதிவெறி பிடித்தெழும் மிரண்டு!

 

திரைத்துறையில் இருப்பவரை

……….மனத்திரையில் பதிக்கின்ற அடிமைப் போக்கும்

இறைத்துறையில் இருப்பவரை

……….இறைவனெத் துதிக்கின்ற  மடமைப் போக்கும்

நிறைதுறையில் ஒளிர்ந்திடுமா நிலம்?

 

வாக்கேயிடப் பணமேபெறும்

……….மதியில்லா மனிதர்காள்! வாதும் துாதும்

நாக்கேயிடத் தொழுதேயெழும்

……….நரம்பில்லா மனிதர்காள்! நாட்டில் உம்மைத்

துாக்கேயிட நினைத்தேன்தினம் தொடர்ந்து!

 

சாதியைத்தலை மேல்சுமந்திடும்

……….தந்நலத்து வாதிகளே! ஒன்று சொல்வேன்

நீதியைத்தலை மேல்சுமந்திடும்

……….நிலையுற்றால் வாழ்வோங்கும்! இல்லை சங்கம்

ஊதியேத்தலை மேல்நெருப்பிடும் உணர்!

 

முன்னே ஈரடிகள் ஆறு சீர்களையும் பின்னோர் அடி மூன்று சீர்களையும் பெற்றுச்  சிறப்புடைய ஏழு தளையாலும் வந்த ஓரொலி வெண்டுறை.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

10.09.2025


Aucun commentaire:

Enregistrer un commentaire