Pages

samedi 6 janvier 2024

கலித்துறை - 6

 


கலித்துறை மேடை 6

 

கட்டளைக் கலித்துறை - 4

[நேரசை 15 எழுத்து, நிரையசை 16 எழுத்து]

 

மாயம் அறிபவர் மாயவற் காளன்றி யாவரோ

தாயம் செறுமொரு நுாற்றுவர் மங்கவோர் ஐவர்க்காய்த்

தேச மறியவோர்  சாரதி யாய்ச்சென்று சேனையை

நாசம்செய் திட்டு நடந்தநல் வார்த்தை யறிந்துமே.

 

[பெரியாழ்வார். திருவாய்மொழி. கற்பார் - 9]

 

நேரசையில் தொடங்கிய இக்கட்டளைக் கலித்துறையில் ஓரடியில் எழுத்தெண்ணிக்கை ஒற்று நீக்கி 15  இருக்கும்.

 

தெளிவுற்று வீவின்றி நின்றவர்க் கின்பக் கதிசெய்யும்

தெளிவுற்ற கண்ணனைத் தென்குரு கூர்ச்சட கோபன்சொல்

தெளிவுற்ற ஆயிரத் துள்ளிவை பத்தும்வல் லாரவர்

தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.

 

[பெரியாழ்வார். திருவாய்மொழி. கற்பார் -11]

 

நிரையசையில் தொடங்கிய இக்கட்டளைக் கலித்துறையில் ஓரடியில் எழுத்தெண்ணிக்கை ஒற்று நீக்கி 16  இருக்கும்.

 

கண்ணா உனையே கருத்தில் இருத்தியான் காண்கிறேன்

எண்ணா யிரஞ்சுகம்! என்னுள் புதுமனம் ஏற்கிறேன்!

பண்ணா! படர்தமிழ் பாடியுன் தாள்கள் பணிகிறேன்!

வண்ணா! மதுமொழி மன்னா! மணந்தெனை வாழ்கவே!

 

[பாட்டரசர்] 06.12.2023

 

மயக்கம் கொடுக்குமே! வண்ணக் கனவுகள் வார்க்குமே!

இயக்கம் தொடுக்குமே! என்னை யிழுத்துயிர் ஏந்துமே!

முயக்கம் படைக்குமே! மோக நினைவுகள் முந்துமே!

தயக்கம் துடைக்கமே! தண்மலர்க் கண்ணன் திருத்தாளே!

 

[பாட்டரசர்] 06.12.2023

 

ஓரடியில் ஐந்து சீர்கள் இருக்கும். நான்கு அடிகளைப் பெற்று வரும். நான்கடிகளும் ஓரெதுகை பெறும். 1.5 ஆம் சீர்களில் மோனை யமையும்.

முதல் நான்கு சீர்களில் வெண்டளை அமைந்திருக்கும். அடியின் ஈற்றிலிருந்து அடியின் தொடக்கத்திற்கு வெண்டாளை அமைய வேண்டியதில்லை.

 

ஐந்தாம் சீர் விளமாகும். விளம் வரும் இடத்தில் மாங்காய் அருகி வரும்.

 

முதல் நான்கு சீர்களில் ஈரசை சீர்களும், மாங்காய்ச் சீர்களும் வரும். இக்கலித்துறையில் விளங்காய் வராது.

 

கலித்துறை மேடை ஒன்றில் ஐந்தாம் சீர் விளங்காயாக வரும், இந்தக் கலித்துறையில் விளமாக வரும். இதுவே இவ்விரண்டிற்கும் உள்ள வேறுபாடு

 

மேற்கண்ட கட்டளைக் கலித்துறை ஒன்றே ஒன்று விரும்பிய தலைப்பில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம், பிரான்சு.
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.

பாவலர் பயிலரங்கம், பிரான்சு

06.01.2024

Aucun commentaire:

Enregistrer un commentaire