Pages

mercredi 19 janvier 2022

வ.க. கன்னியப்பனார்

 


பாவலர்மணி வ.க. கன்னியப்பனார் வாழி!

 

கொடைகொடுக்கும் தங்குலத்தின் புகழே ஓங்கக்

   குணங்கொழிக்கும் கன்னியப்பர் வாழ்வைக் கண்டேன்!

அடைகொடுக்கும் நற்சுவையாய்ச் சொற்கள் ஆண்டார்!

   அணிகொடுக்கும் பேரழகாய்ச் செயல்கள் பூண்டார்!

படைகொடுக்கும் நல்லரணாய்ப் பயிற்சி மன்றில்

   பணிபுரிந்தார்! பாமணியாய்ப் பட்டம் பெற்றார்!

மடைகொடுக்கும் வளமாகப் பாடும் பாட்டில்

   நடைகொடுக்கும் புலமையினைக் கற்றார் வாழி!

 

தாய்மொழியைப் போற்றுகின்ற மரபில் தோன்றித்

   தகையொளிரும் கன்னியப்பர்  தண்மை நெஞ்சர்!

காய்மொழியை அறியாதார்! கன்ன லுாறும்

   கனிமொழியைச் சொத்தாகச் சேர்த்தார்! நல்லோர்

வாய்மொழியை வழியாக ஏற்றார்! மேன்மை

   மதியுலகம் வணங்கிடவே மாட்சி காத்தார்!

சேய்மொழியை நிகர்த்தசுவை தந்தார்! நுாலின்

   ஆய்மொழியை வியப்புறவே யிட்டார் வாழி!

 

நிலமாண்ட வேந்தரெனக் கடமை செய்த

   நிறைமனையின் கன்னியப்பர் நிலைத்தார் என்னுள்!

உலகாண்ட ஆங்கிலத்தில் ஆற்ற லோங்கி

   உயர்வாண்ட தமிழ்க்கவியைப் பெயர்த்தார்! முன்னைக்

கலமாண்ட யாப்பியலைக் கற்றுத் தேர்ந்து

   களமாண்ட மறவரெனக் கவிதை யாத்தார்!

நலமாண்ட அறமேந்தி அன்பே ஏந்திப்

   புலமாண்ட செல்வங்கள் உற்றார் வாழி!

 

சோழவந்தார் நல்லுாரில் மக்கள் போற்றும்

   தொல்குடியின் கன்னியப்பர் பாக்கள் பாடி

ஆழவந்தார் நம்மனத்துள்! அள்ளி யள்ளி

   ஆரமுதைத் தினந்தந்தார்! வெற்றிச் சீர்கள்

சூழவந்தார்! துாயோர்தம் கருணைப் பாதை

   தொடரவந்தார்! காக்கின்ற இறைவன் தாளில்
வீழவந்தார் காண்நலமாய் நன்மை ஈந்தார்!

   வேழவந்தார் என்றுரைக்க வாழ்ந்தார் வாழி!

 

முகநுாலில் முத்தாகக் கவிதை பாடி

   முன்னிற்கும் கன்னியப்பர் மெல்ல என்றன்

அகநுாலில் பதிவாகி நிலைத்தார்! தீட்டும்

   அருநுாலில் குறணெறியை விளைத்தார்! கண்கள்
புகுநுாலில் தெளிவுற்றார்! புதுமை பூக்கும்

   புகழ்நுாலில் விருப்புற்றார்! காலங் கட்டும்

இகநுாலில் பாமணியாய்ப் பதிந்தார்! அருளாம்

   சுகநுாலில் வாழ்க்கையினை நெய்தார் வாழி!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

பாலவர் பயிலரங்கம் பிரான்சு

19.01.2022


Aucun commentaire:

Enregistrer un commentaire