Pages

jeudi 30 août 2018

வெண்பா மேடை - 119


வெண்பா மேடை - 119
  
முதலும் ஈறும் ஒன்றும் வெண்பா!
  
வெண்பாவின் தொடக்கமும் முடிவும் ஒன்றாக வரும் வண்ணம் பாடப்படுவது முதலீறு ஒன்றும் வெண்பாவாகும். இது நான்கு வகையாகும். 1. எழுத்தொன்றிப் பொருளும் ஒன்றாக வருவது. 2. எழுத்தொன்றிப் பொருள் வேறு வேறாய் வருவது. 3. சொல்லொன்றிப் பொருளும் ஒன்றாக வருவது, 4. சொல்லொன்றிப் பொருள் வேறு வேறாய் வருவது.
  
1.
முதலீறு எழுத்தும் பொருளும் ஒன்றிய வெண்பா.
  
வாவென்[று] அழைத்தவுடன் வந்தவளின் பேழரகை
மாவென்றும், மின்னும் மணியென்றும், - காவென்றும்,
எண்ணமுறும் இன்பென்றும் ஏந்திக் கவிபாட
வண்ணமுறும் வண்டமிழே வா!
  
2.
முதலீறு எழுத்து ஒன்றிப் பொருள் மாறி வந்த வெண்பா!
  
வாரணிந்த பேரழகே! வண்டுவிழிச் செண்டழகே!
காரணிந்த கூந்தல் கமழழகே! - சீரணிந்த
தேனழகே! வண்ணச் சிரிப்பழகே! எல்லையிலா
வானழகே! என்னருகே வா!

புத்தமுதே! பொன்னழகே! போற்றும் புலவனென்
சத்தமுதே! தண்டமிழ் சாற்றமுதே! - முத்தே!
கொழித்தோங்கச் செய்வாய்! குலமோங்கும் வண்ணம்
செழித்தோங்கச் செய்வாய் சிறப்பு!
  
3.
முதலீறு சொல்லும் பொருளும் ஒன்றிய வெண்பா.
  
வண்டு மலராடும்! வாசப் பொழிற்சுற்றும்!
செண்டு தருகின்ற தேனுண்ணும்! - பெண்ணழகே!
துாயமொழி கொண்டவளே! தொல்லை புரிவதுமேன்?
மாயவிழி வாழ்ந்திடும் வண்டு!
  
4.
முதலீறு சொல்லொன்றிப் பொருள் மாறி வந்த வெண்பா!
    
அடியழகு பெண்ணே! அமுதுாறும் கண்ணே!
கொடியழகு மாதே! குயிலே! - பிடித்தே
துடியழகு வாட்டுமடி! துாயதமிழ் பூத்தே
அடியழகு கூட்டு[ம்] அடி!
  
முதலும் ஈறும் ஒன்றும் வெண்பாவை மேற்காட்டிய நான்கு வகையில், நான்கு வெண்பாக்களை விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து முதலும் ஈறும் ஒன்றும் வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
30.08.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire