Pages

lundi 3 août 2015

குளக வெண்பா!



போற்றுவேன் உன்னைப் புகழ்ந்து!

குளக வெண்பா! 

சல்லடைபோல் என்னெஞ்சை முள்விழிகள் ஓட்டையிட!
சொல்..அடைபோல் வந்து சுவைகொடுக்க! - கள்ளுருக!
அள்ளிக் குடிக்க அலைபாயும் எண்ணங்கள்
துள்ளிக் குதிக்கத் தொடர்ந்து!

கண்டு களிக்கக் கவிதை பலபடைக்க
உண்டு களிக்க! உயிர்உருக! - வெண்மதியே!
ஏற்ற பிறவியெலாம் என்னோடு நீயிருக்கப்
போற்றுவேன் உன்னைப் புகழ்ந்து!

இலக்கண விளக்கம்

ஒரே வினைமுடிவு கொள்ளும் வெண்பாக்கள் குளகம் எனப்படும்.முதல் வெண்பா முழுவதையும் வினையெச்சத்தில் அடிக்கி; அடுத்த வெண்பாவில் வினையைப் பெய்து  
எழுத வேண்டும்.

முதல் வெண்பாவில் மூன்றாம் நான்காம் அடிகளில் வினைமுற்று, வியன்முற்று, ஏவல் வினைமுற்று செய்யுமெனும் வாய்ப்பாட்டு முற்று, பயன் நிலையாக அமையும் பெயர்ச்சொல்  
போன்றவற்றைத் தவிர்த்தல் நலம்.

09.07.2015

4 commentaires:

  1. வலையுலக ஆசானுக்கு வாழ்த்துகள்...

    RépondreSupprimer
  2. படித்து மகிழ நன்றாக இனிமையாக இருக்கிறது.
    இலக்கணம் தான் ......
    ஐயா மும்மண்டிலம் முடித்து சற்று இளைப்பாறுகிறேன். பிறகு எழுதுகிறேன்.

    RépondreSupprimer
  3. வணக்கம் ஐயா!

    வலைச்சர ஆசிரியப் பணி சிறக்க வாழ்த்துகிறேன்!

    ஐயா!.. தினமொரு பாடமாய் தீட்டி எங்களைத்
    திக்குமுக்காட வைக்கின்றீர்களே!..

    மிக மிக அருமை ஐயா குளகம்!
    கண்டவுடன் என் தலைக்குள்ளும் குடைச்சல்!..
    முயற்சி செய்துள்ளேன்! திருத்தம் கூறுங்கள்.
    திருத்திக் கொள்வேன் ஐயா!

    நன்றியுடன் வாழ்த்துக்கள்!


    ஏற்றிக் கவிபாடி என்றும் பணிந்துடன்
    போற்றி மகிழ்ந்து புகழ்ந்திட்டே - வீற்றிருக்கும்
    எங்கள் தமிழ்த்தாயை எல்லோரும் காத்திடப்
    பொங்கும் உணர்வே பொலிந்து!

    பற்றிடுமே பார்ரெங்கும் எங்கள் மொழிபரவி
    சுற்றிநின்(று) ஆடச் சுடராகும்! - பொற்பதனை
    சொல்லிட வாயினிக்கும்! சூழும் நலமோங்கப்
    பல்லாண்டு வாழுமே பார்!

    RépondreSupprimer

  4. குளக கவிகண்டு கூத்தாடும் நெஞ்சம்!
    உலகத் தமிழ்க்கவியே! உன்றன் - நலமெல்லாம்
    அன்னைத் தமிழின் அருளென்பேன்! வாழ்கவே
    முன்னைத் தமிழை மொழிந்து!

    RépondreSupprimer