Pages

mardi 8 avril 2014

கனிவிருத்தம் - பகுதி 7




கலிவிருத்தம் () கனிவிருத்தம்

31.
போகின்ற போக்கினிலே புதிராக ஒருபார்வை!
வேகின்ற வினைபுரியும்! வில்லாக எனைத்தாக்கும்!
ஆகின்ற நொடியெல்லாம் அல்லாடி நிற்கின்றேன்!
சேர்கின்ற ஆசையெலாம் சீர்பெறுதல் எந்நாளோ?

32.
அந்தநிலாச் சாட்சியடி! அழகுமயில் சாட்சியடி!
இந்தவிழாச் சாட்சியடி! இசைத்தகவி சாட்சியடி!
தந்தபலாச் சாட்சியடி! தவழ்மல்லி சாட்சியடி!
சொந்தமெலாம் நீயென்றேன்! சுகம்காணல் எந்நாளோ?

33.
புறப்பட்டுச் சென்றவுடன் புலம்புதடி என்னுள்ளம்!
குறள்கற்றுச் சொல்கின்றேன்! குளிர்நோய்..நீ! மருந்தும்..நீ!
மறைப்பிட்டுத் தடுத்தாலும் மனமொன்றி உறவாடும்!
சிறைப்பட்டுக் கிடக்கின்றேன்! சீர்பெறுதல் எந்நாளோ?

34.
ஏறிவரும் படிகளிலே என்னவளின் கைத்தழுவல்
ஊறிவரும் உணர்வலைகள் உலகத்தைக் கடந்தனவே!
மாறிவரும் காலங்கள்! மாறாது உயிர்க்காதல்!
தேறிவரும் நெஞ்சத்துள் தேவிவரும் நாள்என்றோ?

35.
கருத்தாக நீ..பேசும் கதையனைத்தும், இளந்தென்னைக்
குருத்தாக என்மனத்துள் கூத்தாடிச் சிரித்தனவே!
தருக்காகச் சொல்லாடும் தவப்பெண்ணே! உன்னோடு
பெருக்காகப் பேரின்பம் பெற்றுவத்தல் எந்நாளோ?

தொடரும்

6 commentaires:

  1. /// குறள்கற்றுச் சொல்கின்றேன்! குளிர்நோய்..நீ! மருந்தும்..நீ! ///

    ஆகா...!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஆகா வெனநான் அளித்த கவியெல்லாம்
      ஓகோ வெனஓங்கும்! ஓது!

      Supprimer
  2. நால்வகைப் பாவும் -மிக
    நயம்பட யாவும்
    பால்சுவை தரவும்- அளிக்கும்
    பாரதி தாசரே
    நாள்தொறும் வருதே-தூய
    நற்றமிழ் தருதே
    ஆள்வினை மிக்கோய்- தமிழ்
    அன்னைக்குத் தக்கோய்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      புலவா் படைத்த புகழ்த்தோில் என்னுள்ளம்
      உலவும் நிலவாய் ஒளிா்ந்து!

      Supprimer

  3. படிக்கின்ற போதினிலே பாத்திறம் ஊட்டும்!
    குடிக்கின்ற தேனைக் கொடுக்கும்! - துடிக்கின்ற
    நெஞ்சத்துள் என்றும் நிலைக்கும்!உன் பாட்டில்
    கொஞ்சும்சொல் கொட்டும் குளிா்ந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நாளும் வருகைதரும் நற்றமிழ்த் தோழனே!
      நீளும் இனிமை! நெகிழ்கின்றேன்! - தோளும்
      புடைத்தெழ ஆடுகின்றேன்! போற்றும் கருததால்
      கொடைதர எண்ணுகிறேன் கொள்!

      Supprimer