Pages

samedi 26 avril 2014

கண்ணதாசன் - பகுதி 3




கவிதைத் தலைவன்

11.
அன்றுள்ள அரசியலார் நாட்டை எய்க
           அணிந்திருந்த முகத்திரையைக் கிழித்தார்! நம்முன்
நன்றுள்ள அரசியலார் யார்?யார்? என்று
           நன்குணர்ந்து அவர்பெருமை மொழிந்தார்! மண்ணில்
நின்றுள்ள இந்துமத மேன்மை மின்ன
           நிலைத்தொளிரும் புகழ்நூல்கள் நெய்தார்! ஆசை
வென்றுள்ள ஞானியர்போல் நெற்றிப் பட்டை!
           மின்னறிவுக் கவியரசர் கண்ண தாசர்!

12.
ஏடெடுத்தால் ஓடிவரும் எண்ணம் கோடி!
           இசைகொடுத்தால் பாடிவரும் வண்ணம் கோடி!
நீடெழுத்தால் தேடிவரும் மேன்மை கோடி!
           நிறையெழுத்தால் நாடிவரும் இன்பம் கோடி!
ஓடெடுத்தால் ஒளிர்ந்துவரும் ஞானம் கோடி!
           உயிர்செழிக்க அணிந்திட்ட சீர்கள் கோடி!
ஈடெடுத்தால் இத்தரையில் யாரும் இன்றி
           இருப்பவரே கவியரசர் கண்ண தாசர்!

13.
மண்போனால் போகட்டும்! இன்பம் தந்த
           பெண்போனால் போகட்டும்! கல்வி கற்கும்
கண்போனால் போகட்டும்! காத்த செல்வம்
           கரைந்துருகிப் போகட்டும்! உடலை விட்டு
விண்போனால் புரிந்துவிடும்! வாழ்வில் செய்த
           வினையிரண்டும் தொடர்ந்துவரும்! செவிக்குள் இந்தப்
பண்போனால் படைத்தவனும் சொக்கிப் போவான்!
           பார்போற்றும் கவியரசர் கண்ண தாசர்!

14.
கவிக்கலையை நமக்கூட்டும் பாடச் சாலை!
           கற்பனையின் எல்லைகளை நெய்யும் ஆலை!
புவிக்கலையைக் கற்றவரும், பொன்னாய் மின்னும்
           புகழ்க்கலையைப் பெற்றவரும் உலவும் சோலை!
சுவைக்கலையைச் சுகக்கலையை ஆண்ட மன்னர்
           சுடர்க்கவியைச் சூடிடுமே சான்றோர் மூளை!
தவக்கலையை உற்றவரும் வணங்கிப் போற்றும்
           தமிழ்க்கலையே கவியரசர் கண்ண தாசர்!

15.
கந்தையென ஆனதுணிக் கதையைச் சொல்லும்
           கமழ்கும்மிக் கவிதந்தார்! தென்னை கொண்ட
மொந்தையெனச் சொல்லெல்லாம் மதுவை ஏந்தி
           முப்பொழுதும் போதைதரும் பாக்கள் தந்தார்!
விந்தையெனச் சீர்சூடும்! சிந்தைக் குள்ளே
           வெல்லுதமிழ்த் தேர்ஓடும்! சிந்துக் கிங்குத்
தந்தையெனப் பாரதியைக் கொண்டோம்! ஈடில்
           தலைமகனார் கவியரசர் கண்ண தாசர்!

தொடரும்

10 commentaires:

  1. ///தந்தையெனப் பாரதியைக் கொண்டோம்! ஈடில்
    தலைமகனார் கவியரசர் கண்ண தாசர்!///
    அருமை ஐயா
    அருமை
    நன்றி

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கந்தைத் துணிக்கும் கவிபடைத்த தாசனின்
      சிந்தை தமிழில்லம் சோ்!

      Supprimer
  2. /// ஈடெடுத்தால் இத்தரையில் யாரும் இன்றி
    இருப்பவரே கவியரசர் கண்ண தாசர்!...////

    அருமை... உண்மை ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஈடில் கவியரசா் ஈந்த தமிழ்படித்தால்
      ஓடி வருமே உயா்வு!

      Supprimer
  3. Réponses

    1. வணக்கம்!

      உாிமைக் குரல்முழங்கும் ஒப்பில்லாப் பாக்கள்
      அருமை அருமையென் றாடு!


      Supprimer

  4. வணக்கம்!

    ஈடில் கவிகண்ண தாசன் இயலெண்ணிப்
    பாடிக் களிக்கின்ற பாவலனே! - கோடிமலா்
    கொட்டிக் குவித்ததுபோல் கொஞ்சும் தமிழினிக்கக்
    கட்டி படைத்தாய் கவி!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கட்டுக் கரும்பாகக் கன்னல் அமுதாகக்
      கொட்டிக் கொடுத்தகவி கூறிடுமே! - தொட்டவினை
      உன்னைத் தொடா்ந்துவரும்! உண்மை உயா்வுதரும்!
      பொன்னை நிகா்த்தகவி போற்று!



      Supprimer
  5. வணக்கம்
    ஐயா.

    தந்தையெனப் பாரதியைக் கொண்டோம்! ஈடில்
    தலைமகனார் கவியரசர் கண்ண தாசர்!

    உண்மைதான்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      விந்தைக் கவியரசா்! வெல்லு தமிழ்வாணா்!
      முந்தை மொழியவா் மூச்சு

      Supprimer