Pages

mardi 18 septembre 2012

ஏக்கம் நுாறு [ பகுதி - 2 ]




ஏக்கம் நுாறு [பகுதி - 2]
 
சொற்புதிது! பொருட்புதிது! கண்ணே என்னுள்
       சுரக்கின்ற கவிபுதிது! மேவும் இன்பம்
நற்புதிது! நாள்புதிது! நரம்பில் ஊறும்
       நலம்புதிது! நான்புதிது! எண்ணம் யாவும்
பொற்புதிது! புலனைந்தும் குளிரேந்தக் காதல்
       பொழிகின்ற மழைபுதிது! காணும் தோறும்
விற்புதிது கொண்டுவிழி தாக்கும் பெண்ணே!
       விதவிதமாய்ச் சுவைபுதிது! காண்கின் றேனே! 6

நீரின்றி வளமேது? வாழ்வில் என்றும்
       நீயின்றி நானேது? உயிர்..நீ! மெய்..நான்!
சீரின்றிக் குலைந்திட்ட வாழ்வை மாற்றிச்
       சிதைவின்றி எனைக்காத்தாய்! துன்பம் தீா்த்தாய்!
ஊரின்றி உறவின்றிப் போனால் என்ன?
       உன்னன்பு போதுமடி! உலகை வெல்வேன்!
தேரின்றி வருகின்றாய்! திருத்தாள் பட்ட
       தெருவெல்லாம் செழிக்குதடி! காதல் தேவி! 7

பூஞ்சோலை! பொற்குவியல்! புலவன் நெஞ்சைப்
       புரட்டுகின்ற கற்பனைகள்! கனிந்த ழைக்கும்
மாஞ்சோலை! மயிலிறகு! மாலைக் காற்று!
       மனமிழுக்கும் நற்பவள மல்லி! கன்னல்
தீஞ்சோலை! தென்னையிளம் பாளை! என்றும்
       திகட்டாத பாமாலை! கவிதை யாலை!
காஞ்சோலை விழுந்திடலாம்! கண்ணே உன்றன்
       கட்டழகில் நான்விழுந்தேன்! எழுதல் என்றோ?  8

அருஞ்சிற்பி படைத்திட்ட சிலையைக் கண்டால்
       அப்பப்பா நம்முள்ளம் சொக்கும்! அந்தப்
பெருஞ்சிற்பி உலகழகை ஒன்றாய்ச் சோ்த்துப்
       பிசைந்திட்ட கலவையிலே பிறந்த பெண்ணே!
வருஞ்சிற்பி எனக்குள்ளே வண்ணம் கோடி
       வந்தொளிர வைத்தவளே! கவிதை பாடித்
தருஞ்சிற்பி போல்..நானும் கிறுக்கும் சொற்கள்
       தமிழ்விருந்து சமைக்குதடி! தவமே செய்தேன்! 9

வானவில்போல் வந்தவளே! முகத்தை காட்டி
       மாயங்கள் புரிந்தவளே! மேடை யேறும்
கானவில்போல் நெஞ்சத்துள் சலங்கைச் சந்தம்!
       காலைவரை கனவலைகள் தொடரும்! காதல்
ஆனவில்போல் மலரம்பைக் கண்கள் பாய்ச்ச
       ஊனவில்போல் என்னுள்ளம் உடைந்து போகும்!
ஞானவில்போல் என்னறிவு நன்றே செல்ல
       நாட்டோறும் உன்னழகைச் சுவைக்க வேண்டும்! 10
                                             (தொடரும்) 

8 commentaires:

  1. இநத அருமையான கவியும் புதிது..

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இந்தக் கவிதைகளை ஏந்திப் படித்திட்டாள்
      சிந்தை மகிழும் செழித்து!

      Supprimer
  2. வானவில்போல் வந்தவளே! முகத்தை காட்டி
    மாயங்கள் புரிந்தவளே! மேடை யேறும்
    கானவில்போல் நெஞ்சத்துள் சலங்கைச் சந்தம்!
    காலைவரை கனவலைகள் தொடரும்//


    கவிஞரின் வார்த்தைகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது.
    கற்றுக்கொள்ளவேண்டும் இன்னும் தமிழை என ஆவலையும் தூண்டுகிறது..

    வாழ்த்துகள்..

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கற்க அளவேது? கண்ணெனக் கல்வியைப்
      பெற்று மகிழ்வதே பேறு!

      Supprimer
  3. சிலிர்க்க வைக்கும் வரிகள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சிலிா்த்திடச் செய்யும் செழுங்கவியை உண்க!
      மலா்ந்திடும் நெஞ்சுள் மகிழ்வு!

      Supprimer

  4. மலைத்தேன் அடைகளை வாரிப் பிழிந்தீா்!
    மலைத்தேன்! உண்டு மகிழ்ந்தேன்! - நிலைத்தேன்
    விருத்த அடிகளில்! வெல்லும் தமிழின்
    பெருத்த வளங்களைப் பெற்று!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கவித்தேன் ஒழுகும் கமழ்விருத்தம் தந்து
      தவித்தேன்! தமிழில் தழைத்தேன்! - குவித்தேன்
      இரு..கை! கொடுத்தேன் நனிநன்றி! கண்டேன்
      அருந்..தை அளிக்கும் அழகு!

      Supprimer