samedi 28 juillet 2018

வெண்பா மேடை - 89


வெண்பா மேடை - 89
  
சொற்பொருள் பின்வரு நிலையணி வெண்பா!
  
அணி என்ற சொல்லுக்கு அழகு என்பது பொருள். பொன்னணிகளை அணிந்து பெண்மணிகள் அழகு பெறுவதுபோல், அணி என்னும் உறுப்பால் கவிதை அழகு பெறுகிறது. மொழிக்கு அழகு செய்யும் அணியிலக்கணத்தை மாறனலங்காரம், தண்டியலங்காரம், அணியிலக்கணம் ஆகிய நூல்கள் எடுத்துரைக்கின்றன.
  
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை! [குறள் - 411]
  
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்! [குறள் - 751]
  
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல் [குறள் - 751]
  
வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென்று இன்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார் [ நாலடியார் - 39]
  
மேற்கண்ட பாக்களில், முதல் குறட்பாவில் 'செல்வம்' என்னும் சொல் பொருள் என்னும் ஒரே பொருளில் ஐந்து முறை பயின்று வந்துள்ளது.
  
இரண்டாம் குறட்பாவில் 'பொருள்' என்ற சொல் அதே பொருளில் நான்கு முறை வந்துள்ளது.
  
முன்றாம் குறட்பாவில் 'கண்' என்ற சொல் அதே பொருளில் நான்கு முறை வந்துள்ளது.
  
வெண்பாவில் 'வைகலும்' என்னும் சொல் பின்னர்ப் பலவிடத்தும் வந்தும் ஒருபொருளையே தந்து நின்றது.
  
ஒரு செய்யுளில் ஒரு சொல் பலமுறை ஒரே பொருளில் பயின்று வருவது சொற்பொருள் பின்வரு நிலையணி எனப்படும்.
  
தமிழைப் படித்தல் தமிழைப் படைத்தல்
தமிழை வளர்த்தல் தலையே! - தமிழை
நினைந்துருகிப் போற்றல் நிறைகவி யாற்றில்
நனைந்துருகி ஆடல் நலம்!
  
மாலை மணக்குதடி! மாலை மதியழகால்
மாலை மயக்குதடி! மாலையே - மாலையே
கோடிக் கவிகள் குவிக்குதடி! மாலையை
நாடி கிடக்குதடி நாள்!
  
தத்திவரும் பிள்ளைநடை! தாவிவரும் கொல்லைமுயல்!
சுற்றிவரும் தேன்வண்டு! சூழ்ந்துவரும் - நற்காகம்!
ஓடிவரும் தண்ணாறு! பாடிவரும் மாங்குயில்
தேடிவரும் பாக்கள் திரண்டு!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
    
இவ்வாறு ஓரேசொல் ஒரே பொருளில் மூன்றுமுறைக்குக் குறையாமல் வருமாறு விரும்பிய பொருளில் ஒரு வெண்பா பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து சொற்பொருள் பின்வரு நிலையணி வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

வெண்பா மேடை - 89


வெண்பா மேடை - 89
  
நடையோசை வெண்பா!
  
முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலஞ்
சொன்னவனே! துாய்மெய்ச் சுகத்தவனே! - மன்னவனே!
சிற்பரனே! ஐங்கரனே! செஞ்சடையஞ் சேகரனே!
தற்பரனே நின்தாள் சரண்!
  
[திருவருட்பா, சிவநேச வெண்பா - 1]
  
வந்தருள்வாய்! மாண்பருள்வாய்! வன்னருள்வாய்! வாழ்த்திடுவாய்!
தந்தருள்வாய் தண்ணிலவாய்! சால்பருள்வாய்! - சிந்தருள்வாய்!
பண்னருள்வாய்! பண்பருள்வாய்! பைந்தமிழ்..வாய் ஈந்தருள்வாய்!
மண்ணருள்வாய்! வாழ்வருள் வாய்!
  
நன்மைவரும்! நட்புவரும்! நன்றே செயலாற்ற
வன்மைவரும்! மாட்சிவரும்! வான்மழையின் - தன்மைவரும்!
முன்மைவரும்! முன்னைநெறி மூத்துவரும்! முப்பாலால்
மென்மைவரும் வாழ்வில் மிகுத்து!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
மேற்கண்ட முதல் வெண்பாவில் முன்னவனே, முகத்தவனே, சொன்னவனே, மன்னவனே, சிற்பரனே, ஐங்கரனே, சேகரனே, தற்பரனே, எனச் சீர்கள் வந்துள்ளன. வெண்பாவில் வந்துள்ள பல சீர்கள் 'னே' என்ற ஈற்றைப் பெற்றதனால் பாட்டின் நடையோசை சிறக்கிறது.
  
இரண்டாம் வெண்பாவில் 14 சீர்கள் 'வாய்' என்ற ஈற்றைப் பெற்றுள்ளது.
  
மூன்றாம் வெண்பாவில் எட்டுச் சீர்கள் 'வரும்' என்ற ஈற்றைப் பெற்றுள்ளன.
  
ஒரு வெண்பாவில் பல சீர்களில் ஈற்றெழுத்து ஒன்றிவரும் வண்ணம் விரும்பிய பொருளில் 'நடையோசை வெண்பா' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து நடையோசை வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
28.07.2018

vendredi 27 juillet 2018

வெண்பா மேடை - 87


வெண்பா மேடை - 87
  
நெடிலொற்று வெண்பா
  
கண்ணா!
  
சீர்நேயா! மாமாயா! தேன்வாயா! கான்மேயா!
தார்நேயா! நேர்வேயா! சார்தேயா! - கார்சாயா!
நீர்நேயா! பேர்ஞாயா! நீள்துாயா! கூர்சீயா!
பார்நேயா! நீ..தாராய் பா!
  
தமிழே...
  
தேனே..நீ! தேமா..நீ! தேரே..நீ! தேவே..நீ!
மானே..நீ! மாண்பே..நீ! வாழ்வே..நீ! - வானே..நீ!
ஊனே..நீ! ஆன்மா..நீ! பாவே..வாழ் ஊரோ..நீ!
நானே..நீ! நீயேதான் நான்!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
இவ்வெண்பாவில் குற்றெழுத்துகள் வாரா. நெட்டெழுத்தும் ஒற்றும் கலந்து வரும். நெடிலொற்று நேரிசை வெண்பா ஒன்றை விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து நெடிலொற்று நேரிசை வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
27.07.2018

jeudi 26 juillet 2018

வெண்பா மேடை - 86   


வெண்பா மேடை - 86
  
நெடில் வெண்பா
  
காவிரியே பார்!
  
சீராறே! பேராறே! தேனாறே! சேலாறே!
தாராறே! நேராறே! சாராறே! - காராறே!
ஏராறே! கோளாறே ஏனாறே? பூவாறே!
பாராறே! பா[ர்]ஆறே பா!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
இவ்வெண்பாவில் குற்றெழுத்துகளும் ஒற்றெழுத்துகளும் வாரா. நெட்டெழுத்து மட்டுமே வரவேண்டும். நெடில் நேரிசை வெண்பா ஒன்றை விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து நெடில் நேரிசை வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
26.07.2018

mardi 24 juillet 2018

வெண்பா மேடை - 85


வெண்பா மேடை - 85
  
குறிலொற்று வெண்பா!
  
நன்மொழி! பொன்மொழி! நம்மொழி தென்மொழி!
இன்மொழி! வன்மொழி! தொன்மொழி! - மின்மொழி!
வண்மொழி! செம்மொழி! மண்கமழ் பண்மொழி!
தண்மொழி! வெல்லும் தமிழ்!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
இவ்வெண்பாவில் நெடில் எழுத்துகள் வாரா. குற்றெழுத்துகளும், ஒற்றெழுத்துகளும் பயின்றுவரும். குறிலொற்று நேரிசை வெண்பா ஒன்றை விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து குறிலொற்று வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
25.07.2018