dimanche 5 août 2018

வெண்பா மேடை - 94


வெண்பா மேடை - 94
  
விடுகதை வெண்பா!
  
படபடக்கும்! மின்னிப் பளபளக்கும்! நெஞ்சுள்
இடம்பிடிக்கும்! நன்னாளை ஏற்கும்! - தொடர்ந்திங்கே
ஏழைக்கும் கிட்டாதாம்! எப்போதும் விற்காதாம்!
கோழைக்கும் கிட்டாதாம் கூறு?
    
விடை : பட்டாசு
  
வங்கக் அலைதவழும்! வண்ணக் கவிவிளையும்!
எங்கும் வழிநேர் எழில்காட்டும்! - சிங்கமெனப்
பாமன்னர் வாழ்ந்தநகர்! நாமகனும் சேர்ந்தநகர்!
காமின்னும் அவ்வூரைக் காட்டு!
    
விடை: புதுவை
    
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
தமிழில் விடுகதைகள் உள்ளன. அவ்விடுகதையை வெண்பாவில் பாடவேண்டும். விரும்பிய பொருளில் 'விடுகதை வெண்பா' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து விடுகதை வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
பயிலரங்கப் பாவலர்கள் விடுகதை வெண்பாவை மட்டும் எழுதுக. விடையைக் கருத்திடுவோர் கண்டுணர்ந்து எழுதட்டும்
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
04.08.2018

samedi 4 août 2018

வெண்பா மேடை - 93


வெண்பா மேடை - 93
  
உருவகப் பின்வருநிலை அணி வெண்பா
  
சீர்முகந் தாமரையாம்! செவ்விழி தாமரையாம்!
வார்மனந் தாமரையாம்! வாயிதழும் - சார்வயிறும்
தாமரையாம்! தாள்களும் தாமரையாம்! தேனுாறும்
நாமரையும் தாமரையாம்! நம்பு!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
உவமையாம் பொருளையும், உவமிக்கப்படும் பொருளையும் வேறுபாடு ஒழிவித்து ஒன்றென்பதோர் உள்ளுணர்வு தோன்ற ஒற்றுமை பெறுவது உருவகமாகும்.
  
மேற்கண்ட வெண்பாவில் முகத்திற்கு, கண்ணிற்கு, மார்புக்கு, வாயிதழ்களுக்கு, வயிறுக்கு, கால்களுக்கு, நாவிற்குத் தாமரை உருவகமாக வந்தது. தாமரை என்ற சொல் பல முறை உருவகம் ஏற்று வந்ததால் உருவகப் பின்வருநிலை அணி யாகும்
  
விரும்பிய பொருளில் உருவகப் பின்வருநிலை அணி வெண்பா ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து 'உருவகப் பின்வருநிலை அணி' வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
03.08.2018

vendredi 3 août 2018

வெண்பா மேடை - 92


வெண்பா மேடை - 92
  
உவமைப்பொருள் பின்வரும்நிலை யணி வெண்பா!
  
வேல்விழியும், எஃகுடைய வெல்மொழியும், கூர்தாக்கும்
நுால்வடிவும், வன்படை நுண்மூக்கும், - கால்வல்ல
எண்ண எழிலும் எழும்சத்தி பொற்கற்பும்
வண்ணம் அளிக்கும் வளர்ந்து!
  
[எஃகு, கூர், படை, கால், சத்தி ஆகியன வேல் என்ற பொருளைக் குறிக்கும் சொற்கள்]
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
உவமை அணியுடன் பொருள் பின்வரும்நிலை அணி கூடிவரின், அது உவமைப் பொருள் பின்வருநிலையாம்.
  
பல பெயர் கொண்ட ஒரு பொருள் உவமையாக, ஒரு பாடலில் பலமுறை வரவேண்டும். மேற்கண்ட வெண்பாவில் விழி, மொழி, தாக்கும் இடைவினை, மூக்கு, எண்ணம், கற்பு ஆகியவற்றிற்கு 'வேல்' உவமையாக வந்தது. வேல் என்ற பொருளைக் குறிக்கம் சொற்கள் மீண்டும் மீண்டும் உவமையாக வந்துள்ளமையால் உவமைப்பொருள் பின்வருநிலை அணி ஆயிற்று.
  
விரும்பிய பொருளில் உவமைப்பொருள் பின்வரும்நிலை யணி வெண்பா ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து 'உவமைப்பொருள் பின்வரும்நிலை யணி' வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
02.08.2018

jeudi 2 août 2018

ஒற்றுப்பெயர்த்தல் - 2


ஒற்றுப்பெயர்த்தல் - 2
  
ஓரடியுள் பத்து மரமுடன்ஒற் றுப்பெயர்த்துத்
தேர்மருவி ஊடல் திறம்புனைந்து - நீர்மை
மருதம் புணர்ந்ததுவும் வெண்பாவாய் வையம்
கருதப் பகர்வன் கவி!
  
[தண்டியலங்காரம்]
  
ஓரடியில் பத்து மரங்கள் வருதலோடு, பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுடைய தேர் வருவதாகவும், அதனால் தலைவி பிணங்குவதாகவும் கூறும் மருதத்திணை ஒழுக்கம் சார்ந்துவர, வெண்பாவில் ஒற்றுப் பெயர்த்துவர உலகத்தார் ஏற்கும் உரைப்பான் கவி.
  
ஒற்றுப் பெயர்த்தல் என்பது, ஒருமொழியும், தொடர்மொழியுமாய்ப் பொருள்படும் அவற்றை, அப்பொருள் ஒழிய வேறு பொருள்பட வைப்பது.
  
புதுவைப் புலவனின் பொற்புடைய தேரும்
பொதுமை மனைநாடிப் போகும்! - மதுத்தமிழ்
மாபுளியார் வாகைபுனை வேல்மகிழால் தென்பா..சேர்
பார்புகழ் நெஞ்சைப் பழி!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
இந்த வெண்பாவில் தேரும், மனைவியின் ஊடலும் வந்தன. தேமா புளிமா யாப்பினைக் கற்றுப் புகழ் அடைத்தவன், வேலவனைப் பாடி மகிழ்ந்தவன், தென்மொழியுள் பாக்கள் செய்பவன், இன்று பொதுமனை சென்றான். அவனை நெஞ்சே பழி.
  
ஓரடியுள் பத்து மரங்கள்
  
[1] மா - மாமரம். [2] புளி - புளியமரம் [3] ஆர் - ஆத்திமரம் [4] வாகை - வாகைமரம் [5] புனை - புன்னைமரம் [6]வேல் - வேலமரம் [7] மகிழ் - மகிழமரம் [8] ஆல் - ஆலமரம் [9] தென் - தென்னைமரம் [10] சேர் - சேங்கொட்டைமரம்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
02.08.2018

mercredi 1 août 2018

ஒற்றுப்பெயர்த்தல் - 1


ஒற்றுப்பெயர்த்தல் - 1
  
1.
ஒருமொழியைப் பாட்டின் இறுதிக்கண் வைத்துப் பிறிதொரு பொருள் பயக்கப்பாடுவது ஒற்றுப்பெயர்த்தலாகும். [யாப்பருங்கல விருத்தி]
  
2.
ஒரு மொழியைப் பாடி நிறுத்திவைத்துப் பிறிதொரு பொருள்படப் பாடுவது ஒற்றுப் பெயர்த்தலாகும். [வீரசோழியம்]
  
3.
ஒரு மொழியும் தொடர்மொழியுமாய்ப் பொருள்படும் அவற்றை அப் பொருளொழிய வேறு பொருள்பட வைப்பது ஒற்றுப்பெயர்த்தலாகும். [தண்டியலங்காரம்]
  
[ஒற்றுப்பெயர்த்தல் என்பது ஒரு செய்யுளுக்கு உரை கூறி ஓரடிக்கு வேறு உரை கூறுவது]
  
[ஒரு செய்யுளில் ஒன்றி நிற்கும் வேறு பொருளைப் பெயர்த்தெடுப்பினும் ஒற்றுப் பெயர்த்தலாகும்]
  
[ஒரு சொல்லிலுள்ள ஒற்றெழுத்தினை எடுத்துவிட, அது வேறு பொருள்படின் ஒற்றுப் பெயர்த்தலாகும். பாடல் என்ற சொல்லில் ப் + ஆ = பா, ஒற்று நீக்கிவிட ஆடல் என வரும்]
  
கற்சுமக்கும் காட்சிகளைக் கண்டுருகி என்னுடைய
சொற்சுமக்கும் கண்ணீரை! தொல்லுலகில் - பொற்குடம்
பெற்றவர் எண்ணுவரோ பொங்கும் வினைபோக்க?
பற்றினால் முற்றும் பழி!
  
பழி என்ற சொல்லில் ப் +அ = பா
ஒற்று நீங்க 'அ' இருக்கும். 'பற்றினை முற்றும் அழி' எனப் பொருள் வரும்.
  
பொருள் 1
  
கல் சுமக்கும் சிறுவர்களைக் கண்டு, என் மனம் உருகிப் பாடுகின்ற சொற்கள் கண்ணீரைச் சுமக்கும். உலகில் செல்வத்தைப் பெற்றவர்கள் இந்தத் துயரத்தைப் போக்க எண்ணவில்லை. பேராசையினால் அவர்கள் பழியைச் அதிகமாகச் சேர்க்கின்றார்.
  
பொருள் 2
  
கல் சுமக்கும் கல்லறையைக் கண்டு, என் மனம் உருகிப் பாடுகின்ற சொற்கள் கண்ணீரைச் சுமக்கும். உலகில் பிறந்தவர்கள் ஒரு நாள் இறப்போம் என்பதைப் எண்ணாமலும், செல்வத்தைப் உடையவர்கள் முன்வினையைப் போக்காமலும் வாழ்கின்றனர். பற்றினை முற்றும் அழித்தால் பொன்மேனி பெறலாம்.
  
வெண்பாவின் ஈற்றுச் சொல் ஒற்று நீங்கி வேறு பொருள் பெற்றும், ஒரு வெண்பா இரு பொருள்கள் கொண்டும் வந்ததால் இப்பாடல் ஒற்றுப்பெயர்த்தலாகும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
31.07.2018