jeudi 16 février 2017

வெண்பாக் கொத்து




காதலர் வெண்பாக் கொத்து!

குறள் வெண்பா!

பூத்து மலராடும் பொற்கொடியே! முத்தத்தால்
கூத்து நடத்திடுவோம் கூடு!

இன்னிசைச் சிந்தியல் வெண்பா
  
பூத்து மணம்வீசும் நற்பொழிலே! புன்னகையால்
ஈர்த்து  மயக்காதே! என்னை வதைக்காதே!
கோத்துக் களித்திடுவோம் கூடு!

நேரிசைச் சிந்தியல் வெண்பா

பூத்து மனமாடும் பூங்குயிலே! எந்நாளும்
மூத்துச் சுவையாடும் முத்தம்..தா! - ஆத்தாடி
கூட்டுப் புரிந்திடுவோம் கூடு!

இன்னிசை வெண்பா

பூத்து மகிழ்வோங்கும்! பொங்கித் தமிழோங்கும்!
காத்து விழியோங்கும்! கன்னல் கனவோங்கும்!
நீந்தும் நினைவோங்கும் நேரிழையே! மஞ்சத்துள்
கூந்தல் மணமோங்கும் கூடு!
  
நேரிசை வெண்பா

பூத்து வளர்ந்தாடும்! போதை நிறைந்தாடும்!
ஏத்துப் புகழ்சீர் இனித்தாடும்! - சேர்த்தணைத்[து]
ஓடை மரத்தடியில் உள்ளம் உவந்திடவே
கூடைக் கனியத்துக் கூடு!
  
இன்னிசைப் பஃறொடை வெண்பா

பூத்து நலமளிக்கும் பொங்கல் திருநாளாய்ப்
பார்த்து நலமளிக்கும் பைங்கிளியே! சூத்திரமாய்
இன்பம் சுரக்கின்ற ஈடில் கதைபேசித்
துன்பம் துடைக்கின்ற துாயவனே! என்னுயிரே!
செல்லம் எனும்மொழியில் உள்ளம் உவக்கின்ற
செல்வக் களஞ்சியமே! தேனே! செழுந்தமிழே!
சொக்கிக் கிடக்கின்றேன்! தோளைப் பிடித்தழகாய்
எக்கி அளித்திடுவாய் இன்முத்தம்! கொக்கியெழில்
ஓடம் அழைக்குதடி! உள்ளிருக்கும் நம்மிதயக்
கூடம் குளிர்ந்திடவே கூடு!
  
நேரிசைப் பஃறொடை வெண்பா

பூத்து மதுவூட்டும் போற்றி உனைக்கிங்குச்
சாத்தும் கவியாவும்! தண்ணிலவே!  - ஆத்திமரப்
பாத்தி வயலுக்குள் பாடிக் களித்தசுகம்
போர்த்தி எனைவாட்டும்!  புண்ணியனின் - தீர்த்தமென
வார்த்துக் கனியமுதை வாடும் உயிர்காப்பாய்!
பார்த்தன் அளித்ததுபோல் மார்பளித்தேன்! - ஆர்த்திடுவாய்!
ஆர்த்தி அறையாக அன்பே உனக்களித்தேன்
கூத்தன் கொடுத்த..என் கூடு!

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
14.02.2016

1 commentaire: