Pages

mardi 15 avril 2014

கனிவிருத்தம் - பகுதி 11




கலிவிருத்தம் () கனிவிருத்தம் - பகுதி 11

56.
ஒருகுடையில் நாமிருவர் ஒன்றாகி நடந்துவர
பெருங்கொடையில் பெறுகின்ற பேரின்பம் தொடர்ந்துவர
அரும்உடையில் மழைபொழிந்து அகத்தழகு சுடர்ந்தொளிர
வரும்நடையில் உண்டாகும் மயக்கத்தை என்செல்வேன்!

57.
நீர்கொண்டு வானத்தில் நிறைந்தாடும் மேகம்..பார்!
சீர்கொண்டு நெஞ்சத்துள் சிறந்தாடும் மோகம்..பார்!
கூர்கொண்டு கண்ணழகாய்க் கூத்தாடும் வேகம்..பார்!
தார்கொண்டு உனைக்கட்டத் தள்ளாடும் தாகம்..பார்!

58.
கண்கொண்ட மையழகும் கனிகொண்ட உருவழகும்
மண்கொண்ட வளமாக மனங்கொண்ட மாண்பழகும்
பெண்கொண்ட நாணத்தால் பெருகிவரும் பேரழகும்
விண்கொண்ட விரிவாக ஆசைகளை விளைத்தனவே!

59.
நிலவுக்குள் நீ..செல்ல நினைத்தவுடன் நீர்தோன்றும்!
மலருக்குள் உன்வருகை ஒலிகேட்டு மதுதோன்றும்!
நிலத்துக்குள் பொன்தோன்றும்! நீருக்குள் குளிர்தோன்றும்!
பலருக்குள் உளம்தோன்றும்! பாடுமென்றன் பசிதோன்றும்!

60.
மின்னலென வெட்டுகிறாய்! விரைந்தெழுதச் சொற்பெருக்கைக்
கன்னலெனக் கொட்டுகிறாய்! கவிதைகளை ஒட்டுகிறாய்!
அன்னமென நடைநடந்தே அன்பனெனை முட்டுகிறாய்!
இன்னலென உனைப்பார்க்க திருப்பதுவும் ஓரின்பம்!

தொடரும்
 

14 commentaires:

  1. வணக்கம் !
    சிறப்பான வரிகள் வாழ்த்துக்கள் ஐயா .தங்களுக்கு என் இனிய
    சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சித்திரைத் திங்கள் செழித்தாட வேண்டுகிறேன்
      நித்திரை நீக்கி நிலைத்து!

      Supprimer
  2. கண் காணும் பா அழகு..
    காட்சிப்படுத்திய விதமழகு..

    RépondreSupprimer
    Réponses

    1. அழகியல் கண்டுஉவந்தீா்! அன்புடைய என்பா
      பழமியல் அன்றே படி!

      Supprimer
  3. அருமை! அருமை! தொடருங்கள்!

    RépondreSupprimer
  4. இன்னலென உனைப்பார்க்க திருப்பதுவும் ஓரின்பம்!
    பேரின்பம்தான்

    RépondreSupprimer
  5. வரிகளில் மயங்கிப் போனேன் ஐயா...

    RépondreSupprimer
  6. அய்யா..!
    வார்த்தைகள் வலிமை சேர்த்தது ...

    RépondreSupprimer
  7. அருமை. தங்களிடம் தமிழ் கற்க பேராவல் பெருகுகிறது.

    RépondreSupprimer
  8. கனி விருத்தம் கவிநயம்...

    RépondreSupprimer

  9. என்ன கவிதைகள்! இன்பத் திருவிழா!
    தின்னத் திகட்டாத தேன்பலா! - மின்னும்
    மொழியழகும்! மோகக் கருத்தழகும்! என்றன்
    விழியழகு ஏற்கும் விருந்து!

    RépondreSupprimer
  10. குடை கொண்டு வரவில்லை
    அடை மழையில் நனைந்து விட்டேன்
    மடை திறந்த வெள்ளம் போல் கவிதை மழை
    வீறுநடை போடுவது வியப்பே என்றும்! நன்றி !

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...!

    RépondreSupprimer