Pages

vendredi 8 février 2013

காதல் ஆயிரம் [பகுதி - 24]


காதல் ஆயிரம் [பகுதி - 24]

231.
கண்மணி! என்னுயிர்க் காமினி! பூஞ்சோலை
மின்மினி! மீட்டிடும் யாழினி! - இன்கனியே
வன்பிணி தந்தனையே! வாராது விட்டனையே
என்னினிச் செய்வேன் இயம்பு?

232.
தாயவள் என்பேன் தளிர்க்கொடி யானவளை!
சேயவள் என்பேன் சிரிப்பவளை - நேயமிகு      
துாயவள் என்பேன் துணைநின்று வாழ்ந்தவளை!
மாயவன் தந்த வரம்!

233.
மையப்பி வந்தென் மனமப்பி நின்றவளே!
தையொப்பி வந்தவளே! தண்டமிழே! - தையலே
பொய்யப்பிப் பேசிப் புலவனைச் சாய்ப்பதுமேன்?
நெய்யப்பி வீசும் நினைவூ!

234.
ஒப்பனை ஏனடி? ஊர்வசி உன்னழகில்
இப்பனை நெஞ்சம்  இலகுதடி! - அப்பப்பா!
கற்பனை வானில் கவிஞன் பறக்கின்றான்!
நற்றுணை செய்வாய் நயந்து!

235.
பொம்மைபோல் வந்தனள்! பொல்லாத பார்வையினால்
எம்மையே தின்றனள்! என்செய்வேன்? - செம்மைதவழ்
அம்மைபோல் நின்றனள்! தும்பைப்பூ நெஞ்சினள்!
வெம்மைநோய் தீர்த்தனள் வென்று!

236.
கல்லுாரி வாசலில் கண்ணே உனைக்கண்டு
சொல்லுாறி என்னெஞ்சம் சொக்குதடி! - மல்லிகையே!
மல்லுாறி நிற்கும் மறவன்தன் மாh;பினிலே 
உள்ளுாறும் உன்றன் உரு!

237.
முன்னே அவள்சென்றான்! பின்னே அவன்சென்றான்!
என்னே இளமை இனிமையடி! - கண்மணியே!
பெண்ணே! பிறக்கும் பிறவிகளில் உன்னழகின்
கண்ணே கிடப்பேன் கவிழ்ந்து!

238.
திரும்பித் திரும்பி எனைப்பார்க்க ஆசை
அரும்பி அரும்பி வழியூம்! - கரும்பே!
விரும்பி விரும்பி விளைக்கின்ற பாக்கள்
பெரும்பயன் நல்கும் பிணைந்து!

239.
காற்றில் கமழ்ந்துவரும் முத்தங்கள் என்னுயிரின்
ஈற்றுவரை சென்றே இனிக்குமடி! - ஆற்றோரக்
கீற்றில் கிளியிரண்டு கொஞ்சுதடி! மீன்பார்த்துச்
சேற்றில் புரளுதடி சோ்ந்து!

240.
கண்ணசையக் காதல் கணைபறக்கும்! பைந்தமிழின்
பண்ணசையப் பார்வை படம்பிடிக்கும்! - பின்னசைய
மின்னசையூம்! வீணைபோல் மென்னுடலும் இன்னிசைக்கும்!
முன்னசையும் மோகம் விழைந்து

(தொடரும்)

5 commentaires:

  1. என் விழிமணி வியக்குமினி
    அம்மணி என் கண்மணி அவள் தமிழினி...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மின்னும் விழிமணி! மீட்டும் இசைமணி!
      என்னும் இதயம் இனித்து!

      Supprimer
  2. தாயாய்த் தாரமாய் தனிப்பெருந்துணையாம் தன்னுடன்பிறப்பாய்
    சேயாய்உங்களுக்குச் செம்மொழியாம் தமிழ்மொழி இருந்ததுவோ?
    ஆய்வுசெய்கின்றனரையா உம்கவியால் எல்லோரும் தம்முதுமையில்
    நோய்தீர்க்கும் மருந்துமாகுமோ இது...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஆய்வுகள் செய்தே அவளழகில் என்னுயிர்
      தோய்ந்து கிடக்கும் தொடா்ந்து!

      Supprimer
  3. வணக்கம்
    கவிஞர் கி பாரதிதாசன்(ஐயா)

    திரும்பித் திரும்பி எனைப்பார்க்க ஆசை
    அரும்பி அரும்பி வழியூம்! - கரும்பே!
    விரும்பி விரும்பி விளைக்கின்ற பாக்கள்

    கவிமணம் வீசும் உங்கள் கவிப்பா என்னை திரும்பி திரும்பி படிக்கச் சொல்லுதையா அருமை அருமை,
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer