lundi 5 novembre 2012

சுமை



சுமை

வறுமைச் சுமையைத் தாங்காமல்
     வாடும் உயிரே! உன்னுடைய
திறமை இருக்கக் கலங்குவதேன்?
     திட்டம் தீட்டு! செயலாற்று!
பொறுமை வேண்டும் எனவெண்ணிப்
     போர்த்திக் கொண்டு உறங்காதே!
சிறுமை யகலத் துணிவேந்தித்
     தொடர்க.. தொடர்க.. பணிகளையே!

மேகச் சுமையால் மழைபொழியும்!
     விதியாம் சுமையால் வாழ்வுருகும்!
மோகச் சுமையால் வெறிகூடும்!
     முதுமைச் சுமையால் உடல்வளையும்!
சோகச் சுமையால் துயர்சேரும்!
     தொண்டின் சுமையால் நலம்மேவும்!
வேகச் சுமையால் சீர்குலையும்!
     விரும்பும் சுமையாம் உயிரன்பே!

வாக்கு பெற்றுச் சென்றவர்கள்
     மக்கள் நிலையை மறந்தனரே!
காக்கும் காவல் பதவியிலே
     கள்வர் அமர்ந்தால் பயனுண்டோ?
பூக்கும் கருணைச் சோலையினைப்
     புல்லர், காமர் ஆளுவதோ!
தாக்கும் கொலைஞர், வாய்வீணர்
     நாட்டுக்(கு) இவர்கள் சுமையன்றோ!

ஏழை ஏக்கச் சுமைதீர
     ஏற்ற ஆட்சி மலர்ந்திடுமோ?
தாழைத் தமிழும் அரசேறித்
     தமிழர் சுமையைத் தீர்த்திடுமோ?
பேழை நிறைய பொன்சேர்த்துப்
     பேய்போல் காப்போர் திருந்துவரோ?
ஊழைப் போக்கும் அருளொளியை
     உற்றோர் வாழ்வில் சுமையுண்டோ?

மரத்தின் கனிகள்! அஞ்சாத
     மறவன்  கொள்கை! கொடை,தரும்
கரத்தின் வன்மை! கற்பார்தம்
     கருத்தைக் கவரும் கவியாழம்!
வரத்தின் நன்மை! மண்காக்கும்
     மனித நேயம்! நற்புகழாம்
சரத்தின் மேன்மை! இவையாவும்
     சான்றோர் போற்றும் சுமையன்றோ!

ஆசைச் சுமையை அகற்றிடுக
     அருளாம் விளக்கு எரிந்திடுமே!
ஈசன் நம்முள் நடம்புரிய
     ஏற்ற காலம் வாய்த்திடுமே!
பாசக் கயிற்றை உணர்வித்துப்
     படைப்பின் நோக்கை உணர்த்திடுமே!
மாசில் இறையை! மாதவனை!
     மனமே வணங்கித் தேறுகவே!

பத்துத் திங்கள் தாயுற்ற
     பாசச் சுமைக்கே ஈடுண்டோ?
கொத்துக் கொத்தாய் மலர்பூத்த
     கொடியின் சுமையும் அழகன்றோ?
முத்து முத்தாய் நெல்மணிகள்
     முற்றும் சுமையோ உழைப்பன்றோ!
புத்தன் இயேசு சுமர்ந்தசுமை
     புவியில் யார்தாம் சுமப்பாரோ?

10-01-2005

7 commentaires:

  1. பத்துத் திங்கள் தாயுற்ற
    பாசச் சுமைக்கே ஈடுண்டோ?
    கொத்துக் கொத்தாய் மலர்பூத்த
    கொடியின் சுமையும் அழகன்றோ?
    முத்து முத்தாய் நெல்மணிகள்
    முற்றும் சுமையோ உழைப்பன்றோ!
    புத்தன் இயேசு சுமர்ந்தசுமை
    புவியில் யார்தாம் சுமப்பாரோ?

    சுமையின் பெருமையையும் அழுந்தச் சொன்ன விதம் சிலிர்க்க வைத்தது நன்றிங்க ஐயா.

    RépondreSupprimer
  2. ஐயா...தங்களிடம் ஒன்று சொல்லவேண்டும்...தவறா சரியா என்று தெரியவில்லை...இடுகையிட்டது கவிஞர் கி.பாரதிதாசன் என்பதை இடுகையிட்டவர் கவிஞர் கி.பாரதிதாசன் எனலாம் என எண்ணுகிறேன்..

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இடுகையிட்டது என எழுதுவது பிழை!

      இடுகையிட்டவன் கவிஞன் கி. பாரதிதாசன் என்றும்

      மதிப்பளிக்கும் வண்ணம்

      இடுகையிட்டவா் கவிஞா் கி. பாரதிதாசனார் என்றும்
      இடுகையிட்டவா் கவிஞா் கி. பாரதிதாசன் அவா்கள் என்றும் எழுத வேண்டும்.

      வலையில் தோன்றும் இடுகையிட்டது என்ற சொல்லைத் திருத்தும் வழிவகை எனக்குத் தெரியவில்லை.

      நல்ல தமிழ்மணக்க நன்றே கருத்தெழுதும்
      வல்ல திறமை வளா்கவே! - சொல்லரிய
      மின்வலை நண்பராம் எம்.எச். இரசினியார்
      பொன்கலை வாணராம் போற்று!


      Supprimer
  3. பேழை நிறைய பொன்சேர்த்துப்
    பேய்போல் காப்போர் திருந்துவரோ?

    அழகிய வரிகள் ஐயா....நிறையப் பொன் சேர்த்து என கவனக்குறைவால் நேர்ந்த சந்திப்பிழை தவிர்த்திருக்கலாம்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது

      நிறைந்த பொன்
      இளையபெண்
      மெல்லிய கயிறு

      மேலும் என் கருத்தை விளக்கமாகக் கம்பன் விழா நிறைவுற்றதும் எழுதுகிறேன்






      Supprimer