samedi 3 novembre 2012

வலைப்பூ என் கவிப்பூ [பகுதி - 7]



நண்பா்களின் வலைப்பூக்களில் என் கவிப்பூக்கள்

காலை வணக்கம்!

நலமா!
நான் நலம்! என்தமிழ் நலம்!

அதிகாலை அந்தமிழ்ப் தொண்டாற்றும் அம்பாள்
மதிச்சோலை போன்றே மணக்கும்! - நதிபோன்று
நன்னடையில் தீட்டும் நறுகதையை நான்படித்தேன்
இன்னிலையில் நெஞ்சம் இருந்து!

நீண்ட நாள் பழகிய நண்பரின் இல்லத்திற்கு வந்துவக்கும்  
உணா்வை உணருகிறேன்.  
முகம் பார்க்காச் சங்க கால நட்பைப்போல......

உங்கள் தளத்தில் பதித்துள்ள அனைத்துப் பதிவுகளையும்  
மெல்லப் படித்து முடிப்பேன்!

தொடரட்டும் தமிழ்ப்பணி!   கனியட்டும் நட்பின் கனி

12.10.2012

------------------------------------------------------------------------------------------------------ 

கவிச்சுடா் இராமாநுசரைப் போற்று

சோலையென மணக்கின்ற கவிதைக் காடு! - பெண்ணே
சொக்குதடி சொக்குதடி இதயக் கூடு!
மாலையென மின்னுதடி சொற்கள் யாவும்! - எனறன்
மதியேறி அமா்ந்திடவே மெல்ல மேவும்!
ஆலையெனக் கவிதைகளை நெய்யும் ஐயா! - உங்கள்
அருந்தமிழை எழுதுவது தெய்வக் கையை?
காலையென இரவுமெனப் பாக்கள் தீட்டும் - நற்
கவிஇராமா நுசா்போல உண்டா காட்டும்!

சந்தமொலிர் இவ்வலையை நாடி வந்தேன் - வல்ல
சிந்துகவி பாரதிநான் சீா்கள் தந்தேன்!
தந்தமொளிர் பொருளாக வலையின் மேன்மை - இங்குத்
தந்தகவி அத்தனையும் இனிக்கும் தேன்..மை!
சொந்தமொளிர் நெஞ்சுடனே வருவேன் நாளும் - உங்கள்
சுடா்தமிழால் என்புலமை வளரும் மேலும்!
சிந்தையொளிர் கவிஇராமா நுசரைப் போற்று - மனமே
செப்புகின்ற அவா்வழியில் கடமை யாற்று!

கல்மூட்டை மீதிருந்தும் உறங்கக் கூடும் - நன்றே
காய்துள்ள புல்மீதும் துாக்கம் நீளும்!
நெல்மூட்டைக் குட்டியென மூட்டைப் பூச்சி - அம்மா
நீளிரவு முழுமையிலும் அதனின் ஆட்சி!
வல்மூட்டை போலிருக்கும் எழுத்தின் தன்மை - எல்லா
வரிகளிலும் மிளிர்கிறது தமிழின் நுண்மை!
சொல்மூட்டை அழகாக அடிக்கிப் பாடும் - கவிச்
சுடா்இராமா நுசரையே நெஞ்சம் தேடும்!

12.10.2012

------------------------------------------------------------------------------------------------------ 

வணக்கம்!

கவிதை மிக அருமை!
கன்னல் தரும் இனிமை!

என்னுயிர்த் தோழா! உன்றன்
      இறைவனின் துாதைக் கண்டேன்!
இன்னுயிர்த் தமிழைக் கொஞ்சி
      இயற்றிய வரிகள் இன்பம்!
பொன்னுயிர்க் காதல் தேவி
      புன்னகை புரிய வேண்டி
நன்னுயிர் பெற்ற நானும்
      நாதனை வேண்டு கின்றேன்!

12.10.2012

------------------------------------------------------------------------------------------------------ 

வணக்கம்!

ஈா்க்கும் வண்ணம் இன்னுரையை
            எழுதும் சிட்டே! இவ்வுலகில்
யார்க்கும் வாய்க்க நகைச்சுவையை
            இங்கே ஈந்து பறக்கின்றாய்!
சோ்க்கும் இடுகை அத்தனையும்
            செம்மைத் தமிழின் வளமென்பேன்!
பார்க்கும் கண்கள் குளிர்ந்திடவே
            பாட்டில் பதிவைப் படைத்தனனே

12.10.2012

------------------------------------------------------------------------------------------------------ 

வணக்கம்!

முன்னேறு! முன்னேற்று! இனிய கொள்கை!
      மொழிந்துள்ள கருத்தக்கள் அருமை! என்றும்
தன்னேரு இல்லாத வாழ்வைச் சூடத்
      தமிழேடு சாற்றுகிற பாதை செய்க!
மின்னோடு போட்டியிடும் கவிதை மன்னன்
      மீட்டுபுகழ் பாரதியின் புதுமைப் பெண்ணே!
பொன்னேரு தான்பூட்டிப் பொதுமை பூக்கப்
      புகழேரு பூந்தமிழை விளைப்பாய் தோழி!

12.10.2012

------------------------------------------------------------------------------------------------------ 

உலகெலாம் உன்றன் உயா்தமிழைச் சோ்த்து
வளமெலாம் நல்கும் மழை!

12.10.2012

------------------------------------------------------------------------------------------------------ 

5 commentaires:

  1. வலைப் பூவில் தங்கள் கவிதைகள் அருமை...

    வாழ்த்துகள்...

    RépondreSupprimer
  2. அனைத்தும் அருமை ஐயா...

    நன்றி...
    த.ம.1

    RépondreSupprimer
  3. மிக மிக அருமை
    மலரை மலர் கொண்டு பூஜித்தல் போல
    மிகச் சிறப்பாக கவிதைகள் தந்து
    வலையுலகை சிறப்பித்துக் கொண்டிருப்பவர்களை
    அழகிய கவிதையால வாழ்த்திச் சென்றவிதம்
    மனம் கவர்ந்தது
    மனம் கொள்ளை கொண்ட கவிதைகள்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    RépondreSupprimer